‘களவாணி’யின் 15 ஆண்டு காலப் பயணம்!

‘களவாணி மாதிரி படம்தான் நீ பண்ணனும்டான்னு ராம் சார் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. அந்தளவுக்கு அந்த படம் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சதா இருந்தது’ என்று சமீபத்தில் நடந்த ‘பறந்து போ’ பட நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

2010-ம் ஆண்டுக்கு முன்னர் ‘களவாணி’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ மாதிரியான நகைச்சுவை திரைப்படங்களைப் பல முறை இருவரும் பார்த்து ரசித்ததாகக் கூறியிருந்தார். சினிமாவில் ‘களவாணி’ போன்றதொரு படத்தை ஆக்குவதே ஒருகட்டம் வரை தனது கனவாக இருந்ததாகவும் சொல்லியிருந்தார்.

இது போலத் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரிடத்தில் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிற திரைப்படமாகத் திகழ்கிறது சற்குணம் இயக்குனராக அறிமுகமான ‘களவாணி’.

2010-ம் ஆண்டு ஜுன் 25-ம் தேதியன்று இப்படம் வெளியானது. சுமார் ஒன்றரை கோடி மதிப்பில் உருவான இப்படம் அதைவிட மூன்று மடங்கு வசூலை தியேட்டர்கள் வழியே பெற்றதாகக் கூறப்படுகிறது.

‘களவாணி’ கதை!

‘ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வருவான்’ என்று ஊர் சுற்றுகிற பொறுப்பற்ற மகனைப் பற்றி பெருமிதமாகப் பிறரிடம் சொல்கிற தாய், வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து மாதாமாதம் பணம் அனுப்புகிற தந்தை,

வயதுக்கு வந்த தங்கை, இவர்கள் மூவரைப் பற்றியும் எந்த அக்கறையும் இல்லாமல் தன் வயதுக்கும் மனதுக்கும் ஏற்ற வகையில் தினசரி பொழுதைக் கழிக்கிற ஒரு இளைஞன், திடீரென்று ஒருநாள் அவரது பார்வையில் படுகிற பள்ளி மாணவி,

கெடுபிடியான குணாதிசயம் கொண்ட அவரது அண்ணன், இன்னும் அந்த இளைஞனின் நண்பர்கள், மாணவியின் உறவினர்கள்,

ஊர் நாட்டாமை உள்ளிட்ட மக்கள் என்று பொதுவாகப் பெரும்பாலான கிராமங்களில் காண்கிற மனிதர்களை அவர்களது தனித்துவமான இயல்புகளோடு காட்ட முயற்சித்தது ‘களவாணி’.

ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிற வழக்கமான கதையே இதிலிருந்தது. ஆனாலும், மேற்சொன்ன பாத்திர வார்ப்பு அந்தக் கதையின் ஒவ்வொரு அசைவிலும் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

கூடவே, இதுவரை திரையில் பதிவு செய்யப்படாத தஞ்சாவூர் மண்ணின் வட்டார வழக்கை, பழக்க வழக்கங்களை, வாழ்வியலை மிக மிக எளிமையாகவும் சுவையாகவும் காட்டியிருந்தது.

‘ஏ.. அறிக்கி’, ‘ஏ மகேஷு..’ என்று நாயகன், நாயகியின் பெயர்களைச் சுருக்கி அழைப்பதும் அதன் வழியே நிகழ்த்தப்படுகிற அலப்பறைகளுமாக இப்படத்தின் தொடக்கம் அமைந்திருந்தது.

மெல்ல நாயகன் – வில்லன் மோதல், அதனை நாயகன் – நாயகியின் காதல் இன்னும் பெரிதாக்குதல்,

அதனால் விளையும் குழப்பங்களால் குடும்பத்தினரும் ஊர்க்காரர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல்,

இறுதியில் தீர்வை நோக்கிக் கதை நகர்தல் என்றிருந்தது ‘களவாணி’யின் திரைக்கதை. கிட்டத்தட்ட பாண்டியராஜனின் ‘ஆண் பாவம்’ படத்தைப் போன்றே இப்படத்தின் உள்ளடக்கம் ரசிகர்களை மகிழ்வித்தது.

சிறப்பான உள்ளடக்கம்!

‘பசங்க’ படத்தின் பெரிய வெற்றிக்குப் பின்னர் விமல் நாயகனாக நடித்த படம் இது. ‘ஒன் பிலிம் வொண்டர்’ ஆக அவர் மாறிவிட மாட்டார் என்று கடைக்கோடி ரசிகர்களும் சொல்கிற அளவுக்கு, இப்படத்தில் அவரது நடிப்பு அமோகமாக அமைந்தது.

நாளை நமதே என்ற படத்தின் வழியே தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும், ‘யாரது ஓவியா’ என்று ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘களவாணி’.

பிறகு முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே படங்களில் அவர் தன் முத்திரையை வெளிக்காட்டினார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக அவர் ரசிகர்களை அள்ள வித்திட்ட படம் இதுவே.

சரண்யா – இளவரசு இருவரும் இதில் விமலின் பெற்றோராக நடித்திருந்தனர். காட்சிகளில் அவர்கள் சீரியசாக இருக்கிறபோது, அவற்றைக் காண்கிற ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.

சூரி, ஆண்டனி கூட்டணியிடம் கஞ்சா கருப்பு மாட்டிக்கொண்டு முழிக்கிற காட்சிகள் வெடிச்சிரிப்பை வரவழைப்பவை.

’ப்ளடி ராஸ்கல் பாலிடாய்லா குடிக்கிற பாலிடாய்லு’ என்று ஊர் நாட்டாமை பேசுவது, ‘எம்புட புள்ளை ஒரு பலூன் கேட்டா வாங்கி தர வக்கில்ல ஆட்டக்காரிக்கு 500 ரூபாயா’ என்று மனைவி அவரை நொங்கெடுப்பது உள்ளிட்ட வசனங்கள், காட்சிகள் இன்றும் மீம்ஸ்களாக உலா வருகின்றன.

இது போக சுஜாதா, அஸ்வதா உள்ளிட்டோர் இடம்பெறுகிற கிளைமேக்ஸ் கலாட்டா என்றிருந்த பல விஷயங்கள் இதன் உள்ளடக்கத்தைச் சிறப்பானதாக மாற்றின; இப்படத்திற்கு ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரக் காரணமாயின.

எஸ்.எஸ்.குமரனின் இசையில் ‘ஒருமுறை இருமுறை’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன. முக்கியமாக, அவரது பின்னணி இசை இப்படத்திற்குப் பக்கபலமாக இருந்தது.

மிகச்சாதாரணமான இடங்களையும் கண்கவர் பிரேம்களில் அடக்கியது ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு.

மிகச்சீரிய முறையில் இதன் படத்தொகுப்பைக் கையாண்டிருந்தார் ராஜா முகமது.

டி.சந்தானத்தின் கலை வடிவமைப்பு முழுக்க ஒரு கிராமத்து வாழ்வை நேரில் பார்க்கிற அனுபவத்தைத் தந்தது.

அத்தனைக்கும் மேலே சாதாரண மக்கள் கூட்டத்தில் ஒருவராகத் திரிகிற இளைஞனின் வாழ்வை ரத்தமும் சதையுமாகக் காட்டிய வகையில் பிரமிக்க வைத்திருந்தார் இயக்குனர் சற்குணம்.

மிக எளிமையாகக் காட்சிகளை வடிவமைக்கிற அவரது திறன் பிறகு ‘வாகை சூட வா’வில் மட்டுமே கவனம் ஈர்த்தது.

அதன்பிறகு அவர் இன்றும் தனது முத்திரையை வெளிக்காட்டாமல் இருப்பது ரசிகர்களுக்குதான் துரதிர்ஷ்டம்.

இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ‘களவாணி’ இன்று 15 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.

இடையே ‘களவாணி 2’ திரைப்படம் வெளியானாலும் கூட, இப்படத்தின் தாக்கத்தை அதனால் கடக்க இயலவில்லை. அந்த வகையில் தமிழ் திரையுலகில் கல்ட் கிளாசிக் கொண்டாடப்படுகிற வரிசையில் இடம்பெறுகிற ஒன்று இந்த ‘களவாணி’..!

  • மாபா
Comments (0)
Add Comment