வகுப்பறையில் அமைதியாக, ஒழுக்கமாக, பணிவாக இருக்கிற மாணவன் அல்லது மாணவி வழக்கத்திற்கு மாறாகச் சில விஷயங்களைச் செய்தால் ஆசிரியர்கள் துணுக்குறுவார்கள். அதனை ஏற்பதா, வேண்டாமா எனத் தயக்கம் கொள்வார்கள். ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுவதாகக் கற்பனை செய்ய வேண்டாம். பள்ளி விழாக்களில் மேடையேறி ‘குத்து பாடலுக்கு’ நடனமாடினாலோ, விளையாட்டு அரங்கில் அதீத உற்சாகத்துடன் திரிந்தாலோ கூட அந்த துணுக்குறுதல் நிகழும்.
கிட்டத்தட்ட அப்படியொரு துணுக்குறுதலை ‘டிஎன்ஏ’ திரைப்படம் வழியே ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். அவர் முன்னர் தந்த ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’வில் இருந்து இப்படம் நிறையவே விலகி ‘கமர்ஷியல் பட’ பார்முலாவில் அமைந்திருப்பதுதான் அதற்குக் காரணம்.
அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், விஜி சந்திரசேகர் ரித்விகா, சுப்பிரமணிய சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் முகம்மது ஜீஷன் அயூப் வில்லனாக நடித்துள்ளார். ஜிப்ரான் வைபோதா இதற்குப் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
சரி, எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘டிஎன்ஏ’?
‘டிஎன்ஏ’ கதை!
ஆனந்த் – திவ்யா (அதர்வா, நிமிஷா) என்ற தம்பதி. மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆபரேஷன் தியேட்டரில் குழந்தை முகம் பார்க்கிறார் திவ்யா.
சில மணி நேரம் கழித்து, இன்குபேட்டரில் இருந்து குழந்தையைக் கொண்டுவந்து திவ்யா கையில் தருகிறார் நர்ஸ். அதனைக் கண்டதும், ‘யார் குழந்தை இது’ என்கிறார்.
அதற்குக் காரணம், திவ்யாவிடம் இருக்கிற குறைபாடு. அவரது மூளை வளர்ச்சி வழக்கத்தை விடக் குறைவு.
அது தெரிந்தும், ஆனந்தின் குடும்பத்தினர் அவரை எப்படி மருமகளாக ஏற்றார்கள்? ஏனென்றால், அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எந்நேரமும் மது போதையில் மூழ்கிக் கிடந்தவர். அதற்குக் காரணம், அவரது காதல் தோல்வி. பிறகு, மது போதையில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை பெற்று தேறிய பின்னரே திருமணம் நடந்திருக்கிறது.
இத்தனை கிளைக்கதைகளைச் சொல்லிவிட்டு, பிறகே இவர்களது குழந்தை காணாமல் போன தகவல் ரசிகர்களுக்குச் சொல்லப்படுகிறது.
இதுவரை சொன்னதில் இருந்து, குழந்தை காணாமல் போனது உண்மைதான் என்பது ரசிகர்களான நமக்குத் தெரிய வரும். அது எப்படி திவ்யாவுக்குத் தெரிந்தது? விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தும், குழந்தை மாற்றப்பட்டிருப்பதை எப்படி ஆனந்த் நிரூபிப்பார்? முதலில், இப்படியொரு விஷயம் நடக்கக் காரணம் என்ன?
இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘டிஎன்ஏ’வின் இரண்டாம் பாதி. கூடவே, குழந்தைக் கடத்தல் பற்றிய சில விஷயங்களும் சொல்கிறது.
இப்படியொரு கதையை ‘கமர்ஷியல் பட பார்முலா’வில் சொல்வது சிரமமான விஷயம். அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்?
‘கமர்ஷியலான’ இரண்டாம் பாதி!
ஆனந்த் பாத்திரத்தில் இருந்தே கதை தொடங்குகிறது. அதனை மிகச்சரியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அதனைப் புரிந்துகொண்டு, படத்தில் இருக்கிற உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் நாயகன் அதர்வா.
மது போதையில் மூழ்குவது, எதிராளிகளை அடித்து துவம்சம் செய்வது இரண்டுமே அதர்வாவின் முந்தைய படங்களில் இருந்திருக்கிறது. ஆனால், இதில் அவற்றை அவர் நினைவூட்டவே இல்லை.
திவ்யா ஆக வரும் நிமிஷா, இந்த பாத்திரத்தோடு பொருந்திப் போயிருக்கிறார். சரிதா, ராதிகா உட்பட எண்பதுகளில் இருந்த சிறப்பானா நாயகிகள் சிலரை நமக்கு நினைவூட்டுகிறார்.
இந்த படத்தில் ரமேஷ் திலக், சேத்தன், பசங்க சிவகுமார், விஜி சந்திரசேகர், ரித்விகா என்று பல கலைஞர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். போஸ் வெங்கட், கருணாகரன் போன்றோர் கவுரவமாகத் தலைகாட்டியிருக்கின்றனர்.
சுப்பிரமணிய சிவா, முகம்மது ஜீஷன் அயூப் இருவரும் இதில் வில்லன்களாக வந்து போகின்றனர்.
ஆனால், நாயகன் நாயகி தவிர்த்து மற்றனைவருக்கும் பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லை.
அதர்வா உடன் படம் முழுக்க பாலாஜி சக்திவேல் வருகிறார். அவரது மனைவியாக ஆதிரா நடித்திருக்கிறார்.
துணை கதாபாத்திரங்கள் திடீரென்று வருவதும் போவதுமாக இருப்பது இப்படத்தின் மைனஸ்.
ஆனால், அதனைக் கடக்குவிதமாகத் திரைக்கதை அமைந்திருப்பது சிறப்பு.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், அதிஷா வினோ உடன் இணைந்து இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.
போலீஸாக வரும் பாலாஜி சக்திவேல் உடன் அதர்வாவும் விசாரணை காட்சிகளில் இடம்பெற்றிருப்பது, நாயகன் ஹீரோயிசம் காட்ட உதவியிருக்கிறது. ஆனால், அது ‘யதார்த்தத்திற்கு’ புறம்பானது என்று ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தக் குறையையும் அழகாக மறைக்கிறது திரைக்கதை. ‘காணாமல் போன குழந்தை என்னவானது’ என்ற தேடலை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது.
கொஞ்சமாய் வில்லன்களோ, அவர்களது கும்பலைச் சேர்ந்தவர்களோ என்ன செய்கின்றனர் என்பதைப் பிரதான கதையின் ஊடே காட்சிகளாகவோ அல்லது காட்சி பின்னணியாகவோ காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்த படத்தில் குழந்தை திருடுகிறவராக ஒரு பாட்டி காட்டப்பட்டிருக்கிறார். இனி மருத்துவமனையில் வாஞ்சையாகப் பேசுகிற முதிய பெண்களைக் கண்டால் பயப்படுகிற அளவுக்கு அந்த சித்தரிப்பு இருக்கிறது.
இந்தக் கதையைத் திரையில் யதார்த்தமாக உணரச் செய்ததோடு, காட்சிகளில் பரபரப்பை நிறைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பார்த்திபன்.
படத்தில் வரும் சூழல் ‘நிஜம்’ என்று நம்பும்படியாக அமைந்திருக்கிறது சிவசங்கரின் கலை வடிவமைப்பு.
கதையின் மைய இழைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதைக்கான இலக்கணங்களைப் புறந்தள்ளியிருக்கிறார் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்.
பின்னணி இசை வழியே ‘கதையின் மையம்’ நம் நெஞ்சில் நிலைத்திருக்கப் பாடுபட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா.
அந்த உழைப்பை எட்டிப் பிடிக்கிற வகையில் ஸ்ரீகாந்த் ஹரிகரன், சத்யபிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீன் சாய்வி, சஹி சிவாவின் பாடல்கள் இருக்கின்றன. ’பொழந்தெடுக்கிற’ ரகத்தில் இவர்களது ராகங்கள் இல்லாதது குறையே.
இதுபோக டான் அசோக்கின் சண்டைக்காட்சிகள், நவதேவி ராஜ்குமாரின் ஆடை வடிவமைப்பு, பிரதாப்பின் ஒலி வடிவமைப்பு என்று பல அம்சங்கள் இப்படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.
திரைக்கதையில் ஹீரோயிசத்திற்கு இயக்குனர் தந்திருக்கும் முக்கியத்துவம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆனால், அதுவே நாயக பாத்திரத்தோடு நாம் பொருந்திப் போகக் காரணமாக உள்ளது.
தொடக்கக் காட்சிகளே இந்தக் கதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்பதை முன்னுணர்த்திவிடுகிறது.
ஆனால், அதில் வந்து போகிற வில்லன்கள் என்ன ஆனார்கள் என்பதை ‘சஸ்பென்ஸ்’ ஆக சொல்வதற்குப் பதிலாக நமக்கு ‘சர்ப்ரைஸ்’ ஆக காட்டுகிறார் இயக்குனர். அதனைத் தவிர்க்க வழிகள் கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருக்கும்.
அதையும் மீறி, இப்படம் ரசிகர்களைப் பிடித்திழுக்கும். காரணம், குழந்தைப் பேறு குறித்த மக்களின் எண்ணங்களோடு, அதனைச் சாதகமாக்க முயலும் மருத்துவ வணிகத்தோடு, பச்சிளம் குழந்தைகள் கடத்தல் குறித்த தினசரிச் செய்திகளோடு ’டிஎன்ஏ’ பாந்தமாக பொருந்தி நிற்பதுதான்.
அந்த வகையில், நெல்சன் வெங்கடேசன் தந்திருக்கும் மாறுபட்ட ‘கமர்ஷியல் சினிமா’ இது..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்