“எங்கிருந்தாலும் வாழ்க…” ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் கல்யாண்குமார் வாயசைத்திருக்கிற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?
இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட ‘பணமா பாசமா?’ படத்தில் நாகேஷ் வாயசைத்துப் பிரபலமான “அலேக்… வாழைத்தண்டு போல உடம்பு அலேக்’’ என்கிற கிண்டலான பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?
அந்தக் குரலுக்குரியவர் மறைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.
பல உற்சாகமான பாடல்களைப் பாடியிருக்கிற அய்யம்பேட்டை லெட்சுமணன் ராகவன் தான் சுருங்கி – ஏ.எல்.ராகவன்.
ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு 1957-க்குப் பிறகு தான் பாடும் வாய்ப்புகள் வந்தன.
ஜெமினிக்கு, ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் “அன்று ஊமைப் பெண்ணல்லவோ’’ என்ற பாடலைப் பாடியிருப்பார்.
‘இருவர் உள்ளம்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுக்காக “புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை’’ என்று கேலி கலந்த குரலில் பாடியிருப்பார்.
‘அன்பே வா’ படத்தில் “ஓ.. நாடோடி’’ என்ற பாடலில் டி.எம்.எஸ்.ஸூடன் இணைந்து பாடியிருப்பார்.
‘அதே கண்கள்’ படத்தில் அதே டி.எம்.எஸ்.ஸூடன் இணைந்து “பொம்பிளை ஒருத்தி இருந்தாளாம்.. பூதத்தைப் பார்த்துப் பயந்தாளாம்’’ என்று துவங்கும் பாடலில் ஒரு விசேஷம்.
இந்தப் பாடலுக்கு இடையில் சௌராஷ்டிரா மொழியில் சில வார்த்தைகள் வரும். அதை டி.எம்.எஸ். – ராகவன் ஜோடி சேர்ந்து கலக்கியிருந்தது. காரணம், அவர்கள் இருவருமே சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிற இவர், அதில் பல இசையமைப்பாளர்களைச் சேர்ந்து இசையமைக்க வைத்திருக்கிறார்.
பலருக்கு இவர் பாடியிருந்தாலும், நடிகர் நாகேஷூக்குப் பாடியது தான் அதிகம். ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் “உலகத்தில் சிறந்தது எது?’’ என்ற பாடலை, நாகேஷூக்காகப் பாடியவர்,
“அலேக்…” வரைக்கும் பல பாடல்களைப் பாடியிருக்கிற அவருடைய மனைவி எம்.என்.ராஜம்
பிரபலமான நடிகை.
எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பலருக்கும் ஜோடியாக நடித்திருப்பவர்.
கச்சேரிகளில் ரசிகர்களில் பலர் அவரிடம் விரும்பிக் கேட்கிற பாட்டு.
“வாழைத்தண்டு போல உடம்பு அலேக்” தான்.
கேட்டதும் அவ்வளவு உற்சாகம் ததும்பக் குரல் வித்தைகளுடன் பாடும்போது, நாகேஷ் மனசுக்குள் வந்து போவார்.
ஏ.எல்.ராகவனின் குரலில் நிறைய சேட்டைகள் தெரியும். துள்ளல்கள் இருக்கும். அப்படி அவருடைய சாயல்கள் எதுவும் இல்லாமல் அவர் பாடிய பாடல் –
ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலில் தனித்துவமான சோகம் இழையோடியபடி இருக்கும்.
அது ராகவன் பாடிய பாடல் தான்.
“எங்கிருந்தாலும் வாழ்க!…’’
– யூகி