இன்னும் பதியப்படாத பதிவெண் பலகையாக…!

ரசிக்கப்பட்ட கவிதை:

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்
வாகன எண்களால் நிரம்பிவழிகிறாள்

எங்கேயோ பார்த்த நினைவில்
பெயரை விசாரித்தேன்
TN 09 AV 5437 என்று
கண்சுருக்கி
நாக்கைக் கடித்துக்கொள்கிறாள்

கீழே விழுந்த
கைக்குட்டையை எடுத்து உதறுகிறாள்
அதிலிருந்தும் உதிர்கின்றன
சில வாகன எண்கள்

தனக்கு முன்னால் கணினித்திரையில்
வாகன எண்களைச் சரிபார்த்தபடி
தண்ணீர் குடிக்கிறாள்

அவள் உண்ணுவதும்கூட
எண்ணும் எழுத்தும்தான் போல

மார்பில் பச்சைகுத்தப்பட்ட எண்களை
அழிக்க நினைத்தபோது
இரத்தம் கசிய
கனவுகளிலிருந்து
அவள் திடுக்கிட்டு எழுந்த இரவுகள்
அச்சமூட்டுபவை

நின்று நின்று நகர்வது
அவளா வாகனமா
தெரியாத ஒரு தோற்றப்பிழை

எரியும் சிவப்புவிளக்குக்கும்
பச்சைவிளக்குக்கும் இடையில்
எல்லாமும் தற்செயலாக நடக்கிறது

பணிநேரம் முடிந்து
அவள் கூண்டுக்குள்ளிருந்து வெளிவருகிறாள்
இன்னும் பதியப்படாத
ஒரு எண் பலகையாக!

#பழநிபாரதி

Comments (0)
Add Comment