தலைக்கணம் இல்லாத மனிதர் ‘தாமிரா’!

இயக்குநர் சீனு ராமசாமி உருக்கம்

எழுத்தாளரும், இயக்குநருமான தாமிரா பற்றி அவருடைய நண்பர் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டவை.

இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997-ல். எழுத்தாளராக அறிமுகமானார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக அறிந்து, நெருங்கி அவருடன் நட்பிக்கத் தொடங்கினேன்.

நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால் அவரும் என் அருகாமையை விரும்பினார்.

பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறேன். அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இரவு பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன்.

எப்போதும் எளிமையாகவும் அன்பான மனிதராகவும் இருந்தார்.

தன்னம்பிக்கையாளர்

அவருடைய குழந்தைகளை சிறுவயதில் வடபழனி வீட்டில் என்னுடைய பெண்டக்ஸ் கே 1000 கேமராவால் படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன்.

எப்போது சந்தித்தாலும் இலக்கியம், சினிமா என பேசி களைத்திருக்கிறோம்.

அவர் எப்போதும் நேற்றை பற்றி கவலையற்று நாளை பற்றிய நம்பிக்கையோடு இருந்தவர். சதா இயங்கியபடி இருக்கும் தன்னம்பிக்கையாளர்.

எப்போதும் தனக்கு வேலை தந்தபடி இருப்பார். என் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. தோற்றவனுக்கு பிரியமாக தரும் சிகரெட் போல எனக்கு ரொம்ப முக்கியமானது.

அவர் கோல்டுபிளேக் கிங்சை எனக்கு நீட்டி “வாங்க சீனு” என்பார். பின்பு சிகரெட் குடிப்பதை அறவே நிறுத்தி அதற்கு எதிராக என்னிடம் பிரச்சாரமும் செய்தார். புகைப்பவர்களுக்கு தெரியும் அந்த உறுதி எத்தகையதென்று.

என் திரியைத் தூண்டியவர்

முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியைத் தூண்டியவர் இயக்குனர் தாமிரா. தாமிரா ஒரு நல்ல ஆன்மா. தன் தந்தையை பெருமையாக கொண்டாடியவர்.

தன் சொந்த ஊரை நேசித்த கலைஞன். தலைக்கணம் இல்லாத மனிதன்.

வசந்தகால மரத்தை வேரோடு பிடிங்கிய மாதிரி அவரை காலம் எடுத்து சென்றுவிட்டது. என் படப்பிடிப்புக்கு அவர் தந்தையோடு வந்து மகிழ்ந்த அந்நாளின் திருவிழாவை எப்போதும் மறவேன்.

தாமிராவின் சிரிப்பில் எப்போதும் ஒரு இளவெயிலை உணர்ந்திருக்கிறேன். இப்போதும் இக்கணத்திலும்.

– நன்றி: ஃப்லிம் பீட்

Comments (0)
Add Comment