துக்கத்திலிருந்து மீட்கும் புத்தகங்கள்!

வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல.

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட.

அப்பா புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி என்று பெயர் சூட்டினார். இது என் இயற்பெயர்; புனைபெயரன்று.

என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று என்னை அழைத்துக் கொண்டு போனால்… அந்தப் பாதைகள் போய்ச் சேருகிற இடம் அச்சகம், பதிப்பகம், நூலகம், பழைய புத்தகக் கடை, கவிஞர் அல்லது எழுத்தாளரின் வீடு – இப்படித்தான் இருக்கும்.

அவர் ஒரு புத்தகம் வாங்கினால் எனக்கும் ஒரு புத்தகம் வாங்கித் தருவார். பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் நீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாவின் கதைகளெல்லாம் அவர் சொல்லிச் சொல்லி வாங்கித் தந்தவைதாம்.

அணில், வாண்டு மாமா, அம்புலி மாமா பத்திரிகைகளைப் பிறகு நானே வாங்கிப் படித்திருக்கிறேன்.

அந்த நாள்களில் அப்பா எனக்கு இரண்டு பத்திரிகைகளைத் தொடர்ந்து வாங்கி வந்து, படிக்கும்படி கவனப்படுத்தினார்.

ஒன்று மஞ்சரி. கலைக்களஞ்சியத்தைப்போல அது என் கவனத்தை ஈர்த்த பத்திரிகை.  இன்னொன்று, கலைக்கதிர்.

அபூர்வமான எளிமையான அறிவியல் பத்திரிகை. யுனெஸ்கோ கூரியர், குமரி மலர் பத்திரிகைகள் தொடர்ந்து அஞ்சலில் வந்துகொண்டிருந்தன. இன்று இந்தப் பத்திரிகைகள் இல்லை என்பது தனி இழப்பல்ல; தமிழின் இழப்பு.

ஒருநாள் அப்பாவின் விரல்பிடித்துக் கொண்டே நடக்கும்போது கவிதை என்றால் என்ன என்று கேட்டேன்.

அவர் ஒன்றுமே பேசவில்லை. அந்நேரம் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் என்னைப் பார்த்த முகம் கவிதைமயமானது.

வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை எடுத்துத் தந்து படி என்றார். அதன் தொடர்ச்சியான படிகள்தாம் எனக்குப் பல உயரங்களை, பல தரிசனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன.

பள்ளி இறுதியாண்டுகளில் இரஷ்ய இலக்கியங்களின் மீது என் கவனத்தை மாற்றியவர் எனது பனிரெண்டாம் வகுப்புத் தமிழாசிரியர் த.சலாவுத்தீன்.

அவர் சோவியத் கலாசார மையத்தில் புஷ்கின் இலக்கியப் பேரவைத் தலைவராக இருந்தார். என்னைத் துணைச் செயலாளராக்கி ஊக்கப்படுத்தினார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் எடுத்துச் சொல்லி, டால்ஸ்டாய், புஷ்கின், தஸ்தோவ்ஸ்கி, ஆன்டன் செக்காவ், மயாகோவ்ஸ்கி, மார்க்சிம் கார்க்கி, ரசூல்கம்ஸத்தோவ், யெவ்டுஷெங்கோ, ஷோலக்கோவ் இப்படி இரஷ்ய இலக்கியத்தின் சுவையைக் காட்டினார்.

‘தாய்’ பத்திரிகையில் என்னைப் பணியில் சேர்த்துக்கொண்டு, தனிப்பிரியத்துடன் வாசிப்புக் கலையின் வேகத்தையும் நுட்பத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் வலம்புரிஜான். வாசிப்பின் மூலமே அவர்களுக்கெல்லாம் நன்றிசொல்ல வேண்டியிருக்கிறது.

வாசிப்புதான் வாழ்க்கையின் கதவுகளைத் திறந்து வைக்கிறது. பயணத்தின்போது நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

வானத்தில் நம்மோடு கூடவே வருகிற நிலாவைப்போல பூமியில் நம்மோடு வருகிற வழித்துணை புத்தகம்தான்.

எனக்கு மகிழ்ச்சியைக் கொண்டாட ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. துக்கத்திலிருந்து மீளவும் ஒரு புத்தகம்தான் தேவைப்படுகிறது.
 
– கவிஞர் பழநிபாரதி

Comments (0)
Add Comment