‘கல்பனா’ இதழில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அளித்த பதில்:
கேள்வி:
திராவிடர் கழகத்தினரின் கடவுட் கொள்கைக்கும் கம்யூனிஸ்டுகளின் கடவுட் கொள்கைக்கும் என்ன முரண்பாடு?
பதில்:
கம்யூனிஸ்டுகள் கடவுளை நம்புவதில்லை. ஆயினும் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றும் கருதுவதில்லை. கடவுள் மனிதனின் கற்பனை என்று கம்யூனிஸ்டுகள் ஏற்பர். அது ஒரு சூழ்ச்சி என்று கம்யூனிஸ்டுகள் சொல்லுவதில்லை.
கம்யூனிஸ்டுகள் கடவுளின் பெயராலோ, மதத்தின் பெயராலோ மக்கள் பரஸ்பரம் பகைமை கொண்டு, ஒற்றுமையற்று நிற்பதையும் கடவுளின் பெயரால் சுரண்டப்படுவதையும் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
கடவுளை நம்புகிறவனும், நம்பாதவனும் மனிதனே என்று மனிதனை மதிக்கும் பண்பு கம்யூனிஸ்ட்களின் பண்பு.
கேள்வி:
தங்கள் வாழ்நாளுக்குள் இந்தியாவில் சோஷலிஸ்ட் புரட்சி நடக்குமென்று நிஜமாகவே தாங்கள் நினைக்கிறீர்களா?
பதில்:
சோஷலிச சமூகங்கள் பூமியின் மீது உடனடியாகவோ மெதுமெதுவாகவோ மலர்ந்தே ஆதல் காலத்தின் விதியாகும். அதனை நம் மக்கள் நிச்சயம் நமது மண்ணில் ஸ்தாபிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கேள்வி:
உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு ரசிக்கத் தெரியாது? ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு உருவாக்கத் தெரியாது என்கிறார்களே உண்மையா?
பதில்:
பொய். ரசிகனும் படைப்பாளியும் ஒருவனே. எல்லா ரசிகர்களும் படைப்பதில்லை.
கேள்வி:
இந்தியாவில் இனி ஒரேயொரு தனிக்கட்சியின் ஆட்சி அமையுமா?
பதில்:
அந்நிலை மாறிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தேனும் ஒரு நிலையான ஆட்சி அமைக்குமா என்பதும் சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. ஐயோ பாவம் அகில இந்தியா!
கேள்வி:
எழுத்தாளன் என்பவனுக்கு ஏதோ தனியான குணங்கள் இருக்க வேண்டும் என்று கருதுவதாக நான் நினைக்கிறேன். சரியா?
பதில்:
ஆம். ஒருவன் எழுதத் தொடங்கும் போதே நான் கருதுவதாக நீங்கள் நினைக்கிற அந்தக் கல்யாண குணங்கள் அமைந்து விடுவதில்லை.
கருவிலே திருவுடையார் என்று வியக்கும்படி எங்கோ சிலருக்கு அவ்விதம் அமைந்து விடுவதும் உண்டுதான்.
எழுதி அதன்பிறகு சிந்தித்துப் படித்து அறிவது எழுத்தாளனுக்கு ஏற்படுகிற தலைகீழ் பாடத்திட்டமாகும்.
அந்தக் கல்யாண குணங்களுடைய எழுத்தாளர்களைத் தான் காலத்தையும் தூரத்தையும் கடந்து மனிதர்கள் நிரந்தரமாக நேசிக்கிறார்கள்.
கேள்வி:
இன்றைய இளைஞர்களுக்கு சோஷலிசப் புரட்சிக்கு வழிவகுக்கும் துணிவும் பக்குவமும் இருக்கின்றதா?
பதில்:
நிச்சயமாக! வேறு எந்தக் காலத்தில் வாழ்ந்த இளைஞர்களைவிடவும் இக்கால இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு அதிகமாகவே உண்டு.
கேள்வி:
பாரதி, பாரதிதாசன் ஒற்றுமை – வேற்றுமைகளை விளக்குவீர்களா?
பதில்:
மகாகவி பாரதி இந்திய சிந்தனையில் ஒரு காலத்தின் முன்னோடியாவான். அவனது பார்வையும் அறிவும் ஞானமும் மிகவும் விரிவானவை.
பாரதிதாசன், பாரதியின் வெளிச்சத்தில் விழிபெற்றவர். அந்த வெளிச்சம் போனபிறகு அவருக்கு நேர்ந்த தடுமாற்றங்களை அவரது தமிழும் கவிதையுமே ஈடு செய்தன.
மக்களைப் பற்றி, உழைக்கும் மக்களைப் பற்றி பாரதியைவிட அதிகமான பாடல்களைப் பாடியவர் பாரதிதாசன்.
கேள்வி:
தங்களது முன்னேற்றத்தில் முதற்படி என்று எதை குறிப்பிடுவீர்கள்?
பதில்:
நம்பர் 6, டேவிட்ஸன் தெரு, சென்னை-1, என்ற கட்டிடத்தின் வாசற்படி தான். அதுதான் அக்காலத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகம்.
கேள்வி:
மக்களிடையே போராட்ட உணர்வுகளை உருவாக்க சினிமாவை நீங்கள் பயன்படுத்தலாமே? பேனாவைப் போல சினிமாவும் உங்களுக்கு ஒரு ஆயுதம் தானே?
பதில்:
பேனா விலை குறைச்சல். சினிமா விலை அதிகம். முடிந்தவரை எல்லா ஆயுதங்களையும் தான் பயன்படுத்த வேண்டும். முயல்கிறேன். எல்லாவற்றுக்கும் அடிப்படை பேனா தான்.
கேள்வி:
யார் இந்த ஜெயகாந்தன் என்று ‘சாவி’ இதழில் ஒருவர் கேட்டிருக்கிறார். நானும் கேட்கிறேன்! யார் இந்த ஜெயகாந்தன்?
பதில்:
‘இது இவன் யுகம்’ என்று தமிழ் இலக்கியத்தில் எவனைக் குறித்தால் காலம் இருக்குமோ அவனது இயற்பெயர் அது!
கேள்வி:
இன்றைய சினிமாப் பட தரத்தைப் பற்றியும் ரசிகர்கள் பற்றியும் உங்கள் கருத்து என்ன?
பதில்:
சினிமா லாப வேட்கையால் சீரழிகிறது. ரசிகர்கள், அதனால் தங்களுக்கு ஏற்படுகிற நஷ்டத்தைப் பற்றி உணர்வே இல்லாமல் சீரழிவை வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறார்கள்.
இது பொதுவான நிலை. எல்லாத் துறையிலும் மாற்றங்காண துடிப்பவர்கள் இந்தத் துறையிலும் மாற்றங்காண முயன்று வருகிறார்கள். வருகிறோம் என்று சொல்வதே சரி.
– நன்றி : ‘கல்பனா’ இதழ்.