தமிழன் என்றால் யார்?

பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது.

இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம் நடைபெற்றுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

(குன்றக்குடி அடிகளார் பெரியாருக்கு எழுதிய கடிதம்….)

குன்றக்குடி
டிசம்பர் 26, 1956

அன்புள்ள பெரியார் அவர்களுக்கு,

திருவருள் இன்பம் யாண்டும் மலர்க!

தாங்கள் 15.12.1956 இல் மதுரையில் நடந்த திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அறிவித்திருக்கும் போராட்டச் செய்தியைப் படித்தோம்.

இது சம்பந்தமாக நாம் இருவரும் திருப்பரங்குன்றத்திலிருந்து திருநெல்வேலி போகும்வரை பேசிக் கொண்டதும் நினைவிருக்கலாம்.

இது சம்பந்தமாகப் பின்னீடு, தாங்கள் வெளியிட்டதாக வந்துள்ள செய்திகள் அவ்வளவு திருப்தியாக இல்லை.

மேலும், இது சம்பந்தமாக ஆத்திகத்தின் பேரில் சிலர் வெளியிட்டுள்ள அருவருக்கத்தக்க அறிக்கையை மறந்து விடுவதற்கில்லை. இது சம்பந்தமாக ஒரு வரையறுத்த முடிவுக்கு வருவது நம் இருவருடைய கடமையாக இருக்கிறது. அவசியமாகவும் இருக்கிறது.

1. தாங்கள் நடத்த இருக்கும் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையையும், திருக்கோவில் வழிபாட்டையும் அடிப்படையாக வைத்திருக்கிறீர்களா? அல்லது சிலர் கருதுவது போல இனம் அல்லது சாதியின் அடிப்படையில் கிளர்ச்சி தான் நோக்கமா?

2. ‘வழிபாட்டிற்கு தமிழன் நியமிக்கப் பெற வேண்டும்’ என்ற நிபந்தனை கூறியுள்ளீர்கள்.

தமிழன் என்றால் தாங்கள் யாரைத் தமிழன் என்று கருதுகின்றீர்கள்?

இதில் சாதி அல்லது இனம் உணர்ச்சி தலைக்காட்டுகிறதா?

இது சம்பந்தமாகத் தாங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

என்றும் வேண்டும் இன்ப அன்பு

தெய்வ சிகாமணி

#

(குன்றக்குடி அடிகளாரின் கடிதத்திற்கு பெரியார் உடனே எழுதிய பதில் கடிதம்)

போற்றுதலுக்குரிய தவத்திரு அடிகளார் அவர்கட்கு!

ஈ.வெ.ராமசாமியின் வணக்கம்!

அடிகளாரது 26 ஆம் தேதியிட்ட கடிதம் பெற்றேன். செய்தி உணர்ந்தேன்.

“ஒரு வரையறுத்த முடிவிற்கு வருவது நம் இருவருடைய கடமையாக இருக்கிறது” என்று எழுதியிருக்கிறீர்கள்.

எனது கருத்தை என் பிறந்தநாள் விழாவில் அடிகளார் தலைமையில் நான் பேசும்போது விளக்கியிருக்கிறேன்.

அதுவே தான் எனது நிலைமையும். மற்றும் திருநெல்வேலி செல்லும்போதும் அடிகளாருக்குத் தெரியும்படி சொல்லியிருக்கிறேன்.

நிற்க.

போராட்டத்தின் இலட்சியம் இரண்டு.

ஒன்று. தமிழ்நாட்டில் தமிழன் கோவிலில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும்.

கோவிலிலுள்ள கடவுள் எனப்படும் சிலைக்கு தமிழில் பூசை செய்யாததற்குக் காரணம், வட மொழியிலேயே பூசை செய்வதற்குக் காரணம்- ‘தமிழ் மிலேச்ச மொழி’ என்பதும், வடமொழி ‘தேவ மொழி’ என்பதுமே ஆகும்.

அது போலவே “தமிழன் பூசை செய்யக்கூடாது என்பதற்கு ‘தமிழன் சூத்திரன், இழிமகன்’ என்பதும், ‘பார்ப்பான் மேல் மகன், பிராமணன்’ என்பதுமே காரணம்.

இந்த இரண்டு காரியமும் கடவுளையும், வழிபாட்டையும் பற்றியது மாத்திரமல்ல.

தமிழ்மொழியின் தன்மானத்தையும், தமிழனின் தன்மானத்தையும் பற்றியதுமாகும்.

இதை அடிகளார் ஒப்புக் கொள்ளாதிருக்கலாம்; ஒப்புக்கொள்ள மறுக்கலாம்.

அடிகளார் மன்னிக்க வேண்டும். நான், நாம் குறிப்பிடும் கடவுள்களைப் பற்றியதை மத, சம்பிரதாய ஆதாரங்களிலிருந்தும், நடப்பிலிருந்தும் அறிந்ததைச் சொல்கிறேன்.

இவை இப்படியே இருக்கட்டும்.

தமிழ் மொழியில் பூசை நடக்க வேண்டும் என்று அடிகளாரும் கூறுகிறார்கள். நானும் கூறுகிறேன்.

இதற்காகக் கிளர்ச்சியோ, போராட்டமோ நடத்த வேண்டும் என்பதில் அடிகளாருக்கு மறுப்பு இருக்க நியாயமில்லை.

தமிழன் பூசை செய்ய வேண்டும் என்பதிலே அடிகளார் கருத்து எப்படியிருந்தாலும் நான் தீவிரமான ஆசையுள்ளவனாகவே இருக்கிறேன். இவைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் அடிகள் எந்த அளவுக்கு அருள் கூர்ந்தாலும் எனது பேறாகவே கருதுவேன்.

மற்றபடி – நாம் இருவரும் நட்பு முறையில் அன்பர்கள் ஆவோம்.

கொள்கைகளில் ஒன்றுபட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லாதவர்கள் என்றாலும், ஒன்று பட்ட இலட்சியங்களுக்கு மக்கள் நலனையும், தமிழர் தன்மானத்தையும் முன்னிட்டு கூடியதைச் செய்வோம்.

இப்படி எது செய்யினும் அடிகளார் அருளையும் ஆணையையும் முன்வைத்தே கூடியதைச் செய்ய வேண்டும் என்பது தான் எனது ஆசை.

இந்தப் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு நம்பிக்கையும் அடிப்படையா? அல்லது இனம், சாதி அடிப்படையா?- என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள்.

அடிகளார் அருள்கூர்ந்து முன்னின்று செய்யும் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு நம்பிக்கையும் உடையவர்களையே கலந்து கொள்ளும்படி பார்த்துக்கொள்கிறேன்; அதில் அடிகளாருக்குச் சங்கடம் வேண்டியதில்லை.

தவிர,  “தமிழன் என்று யாரைக் கருதுகிறீர்கள்?” என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள்.

நான் ‘தமிழன்’ என்று கருதுவது-பெரிதும் நம் நாட்டில் ‘சூத்திரர்கள்’ என்று சொல்லப்படக் கூடியவர்களையே ஆகும். இப்போது கோவில்களில் பூசை செய்கிறவர்கள் ‘சூத்திரர்கள்’ என்று ஒரு சாரார் சொல்லக்கூடும்.

அதாவது குருக்கள் ‘சூத்திரர்கள்’ என்பதே. அது வெறும் பேச்சு.

குருக்கள் எல்லாம் நம்மைத் தீண்டாதவர்களாக கருதுவதோடு, நம்முடனிருந்து உண்ணக் கூடாதவர்கள் என்றே இருந்து வந்திருக்கிறார்கள்; பூணூல் அணிந்திருக்கிறார்கள்.

சூத்திரர்கள் அல்லது நம்மவர்கள் பூசை செய்வதற்கு என்ன தடங்கல்? நமக்கேன் அந்த உரிமை கிடைக்கும்படி பாடுபடக்கூடாது?

எனவே, அருள்கூர்ந்து எனது முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

குற்றமிருப்பின் மன்னித்தருள்க!

ஈ.வெ.ராமசாமி
#

(07.11.1957 அன்று ‘விடுதலை’ இதழில் வெளிவந்து இந்த பதிவு உணர்த்துவது இதைத் தான்.

(என்னதான் கருத்துமோதல்கள் நிகழ்ந்தாலும், பொதுத்தளத்தில் ஒரு கருத்தை எவ்வளவு ஆரோக்கியமாக விவாதித்துக் கொள்ள முடியும் என்பதற்கான சாட்சியத்தைப் போலிருக்கிறது இந்தக் கடிதப் பரிமாற்றம்.)

Comments (0)
Add Comment