பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6

 ******

“என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்”

               நல்லந்துவனார், கலித்தொகை 139, 1-3

நோ என்றால் துன்பம் எனப் பொருள். நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய். பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறது. இங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது.

பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதும் அறத்தைச் செய்தல் சான்றோர் கடமை என்கிறார் புலவர் நல்லந்துவனார்.

பிற உயிரினத் துன்பத்தையும் தம் துன்பம்போல் ஒருநாள் கருதினால் போதாது. என்றும் கருத வேண்டும் என்கிறார் புலவர். இதுவே தமிழ் நெறி.

‘‘அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்,
தந்நோய்போற் போற்றாக் கடை’’

                (திருக்குறள் ௩௱௰௫ – 315)

என்கிறார் திருவள்ளுவரும்.

பிற உயிர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதாவிட்டால் அறிவினால் என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர்.

மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.

அடுத்தவர்க்கு வரும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுதல் சான்றோர்க்கே கடமை எனில் இந்த உயர்ந்த பண்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமல்லவா?

“தன்னைப்போல் பிறரை நினை” என்னும் விழுமிய ஒழுக்க நெறியை இப்பாடலில் புலவர் வலியுறுத்துகிறார். நாமும் இப்பொன்னுரையை என்றும் பின்பற்றுவோம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

Comments (0)
Add Comment