தமிழின் முதல் மேடை நாடகம்!

பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன.

இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள்.

தெருக்கூத்து, வீதி நாடகங்களில் பங்கேற்ற கலைஞர்கள் மக்களைத் தேடிச் சென்று நாடகங்களை நிகழ்த்தினர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகக் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. பின்னாளில் மேடை நாடகம் என்கிற வடிவத்துக்கும் அது பாதை அமைத்துக் கொடுத்தது.

தமிழ்நாட்டில் மேடை நாடகத்துக்கான முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் பம்மல் சம்பந்த முதலியார்.

இவர் தமிழ் நாடக மரபின் தந்தையாகக் கருதப்படுபவர். 1891இல் சென்னை ஜார்ஜ் டவுனில் சுகுண விலாச சபாவைத் தொடங்கினார் பம்மல் சம்பந்த முதலியார்.

இங்குதான் அவர் எழுதிய ‘மனோகரா’ நாடகம் 1897இல் மேடையேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் மிகவும் பிரபலமான முதல் மேடை நாடகமாக இது அறியப்படுகிறது.

1910இல் நாடக ஆளுமை சங்கரதாஸ் சுவாமிகள் ‘பாய்ஸ்’ கம்பெனியை உருவாக்கி ‘வள்ளி திருமணம்’, ‘கோவலன்’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.

பின்னாளில் டி.கே.எஸ். பிரதர்ஸ் சொந்தமாக நாடகக் குழுவைத் தொடங்கி ‘குமாஸ்தாவின் பெண்’, ‘கள்வனின் காதலி’, ‘ஔவையார்’ போன்ற பிரபலமான நாடகங்களை அரங்கேற்றினர்.

1940களிலும் 1950களின் முற்பகுதியிலும்தான் கட்டண உறுப்பினர்களைக் கொண்ட சபா கலாச்சாரம் தமிழகத்தில் தோன்றியது. அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 150 நாடகக் குழுக்களும் 125 சபாக்களும் தமிழகத்தில் இருந்துள்ளன.

_ நன்றி: இந்து தமிழ்திசை.

Comments (0)
Add Comment