இந்திரன் – அகநிலையிலும் கலைப் பண்பைப் பேணியவர்!

வரலாற்று ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

இந்திரன் செய்திருக்கும் பணிகளில் பல முன்னோடி ஆனவை. கடந்த தலைமுறையினர் பலரை நேரில் கண்டவர். சிலரோடு இணைந்து இயங்கியவர். அதோடு இந்த தலைமுறையினரோடும் தொடர்பில் இருப்பவர்.

1960-களுக்குப் பிந்தைய இந்தியாவின் / தமிழகத்தின் முக்கிய அரசியல் கலாச்சார நிகழ்வுகளைக் கண்டவர்.

அந்நிகழ்வுகளால் தாக்கம் பெற்றதோடு அவற்றோடு தொடர்புடைய ஆளுமைகள் பலரையும் சந்தித்தவர் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ரா.கனகலிங்கம், அறிஞர் அன்பு பொன்னோவியம், சாரு மஜும்தார், கோவேந்தன் போன்றோரைப் பார்த்து வளர்ந்த அவர் ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி, மீரா தொடங்கி பலரோடு பழகி செயல்பட்டவர்.

கருப்பின இலக்கியத்தையும் மராத்தி சிறுத்தைகளின் இலக்கியத்தையும் ஒரே வேளையில் அறிமுகப்படுத்தியவர்.

சிற்பம், ஓவியம் உள்ளிட்ட நுண்கலை பற்றியும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி எழுதி வந்தார்.

பிறந்து வளர்ந்து பணியாற்றிய விதங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களைக் கண்ட அவர், அங்கு நடந்த இலக்கிய பண்பாட்டுச் செயல்பாடுகளை இங்கு அறிமுகப்படுத்தினார். இங்கிருப்பதை ஆங்கிலத்தில் எழுதினார்.

வெளிநாடுகளுக்குச் சென்ற அவர் சிறு தீவுகளுக்கும் சென்றிருக்கிறார். எங்கு சென்றாலும் அங்கிருக்கும் இலக்கியச் சூழலை தேடுபவராகவும் எழுதுபவராகவும் இருந்திருக்கிறார்.

ஒரு பக்கம் ஆனந்தகுமார சாமி, மறுபக்கம் சு. வில்வரத்தினம், இன்னொரு பக்கம் ஐரோப்பிய புது எழுத்து என்று இயங்கிய அவர், எந்த ஒன்றிலும் நின்று விட்டவராகவும் எந்த நிலைப்பாட்டிற்கும் ஒப்புக் கொடுக்காதவராகவும் இருந்திருக்கிறார்.

மற்றொரு பக்கம் கடவுளுக்கு முன் பிறந்த ஆதிவாசி கவிதைகளை மொழிபெயர்த்தார்.

நகரத்து வாழ்வின் அழகியலைக் கவிதையில் எழுதிய அவர் நம்முடைய பண்பாடு ஆதிவாசிகளின் பண்பாட்டின் மீது தான் கட்டப்பட்டது என்றார்.

ஓவியங்களிலும் சிற்பங்களிலும் ஆதிவாசி மரபுகளின் தொடர்ச்சியையும் அது திரிக்கப்பட்டுவிட்டதையும் நுட்பமாகச் சொல்லியவர்.

உலக அளவிலான கலை சார்ந்த அழகியலைப் பேசினாலும் உள்ளூர் பாட்டிகளின் பாம்படம், கானா, பௌத்த – சமண சிற்ப ஒழுங்கு பற்றியும் சிந்தித்து அழகியல் பார்வையை முன் வைத்தவை இவரது எழுத்துகள்.

இந்திரன் புற நிலையில் மட்டுமில்லாமல் அகநிலையிலும் கலைப் பண்பைப் பேணியவர்.

அவரது நூலாக்கம், அட்டைப் படம் பற்றியே தனியே பேசலாம். தமிழில் உருவாகி இருக்கும் புத்தகப் பண்பாட்டுக்கு இந்திரன் முக்கிய பங்களித்திருக்கிறார்.

அவருடைய ‘தமிழ் அழகியல்’, ‘கவிதையின் அரசியல்’ இரண்டு நூல்களும் முக்கியமானவை.

அவர் தமிழ் அழகியல் என்பதை வெறும் மொழியாக மட்டுமே சுருக்கிக் கொள்ளவில்லை. அந்த வகையில் இந்திரன் ஒரு கலைஞன்.

– நீலம் வெளியிட்டிருக்கும் ‘இந்திரன் – கலையும் வாழ்வும்’ நூலிலிருந்து.

#இந்திரன்_கலையும்_வாழ்வும்_நூல் #தமிழ்_அழகியல் #கவிதையின்_அரசியல் #வரலாற்று_ஆய்வாளர்_ஸ்டாலின்_ராஜாங்கம் #எழுத்தாளர்_இந்திரன் #writer_indiran #indiran_kalaiyum_vaazhvum_book #stalin_rajangam

Comments (0)
Add Comment