ஒருவேளை நான் மரித்தால் இந்தப் பதிவை நீங்கள் மேற்கோள்காட்டக் கூடும்.

 எழுத்தாளர் தமயந்தியின் உருக்கம்

கல்லூரிப் பேராசிரியராகக் கிடைத்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு எழுத்தாளராகத்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்தபொழுது – பிரபஞ்சன் மிகவும் எதிர்த்தார்.

“என்னுடைய துயரம் என்னுடனே முடிந்து போகட்டும் தமயந்தி” என்று சொல்வார். ஆனாலும் அந்த எழுத்தின் மீதான பிரமிப்பு என்னை இந்த முடிவுக்கு கொண்டு வந்திருந்தது.

அப்போதெல்லாம் நினைப்பேன் – என்னுடைய புத்தகங்களுக்கு, என்னுடைய எழுத்துக்கு நிறைய ராயல்டி வரும் – அதை வைத்துக்கொண்டு நான் ஆறு மாதம் எழுதவேண்டும் ஆறு மாதம் பயணம் செய்யவேண்டும் என்று. ஆனால் ஒரு எழுத்தாளருக்கான வாழ்க்கையை தமிழ்ச் சூழல் இன்னும் அப்படி எல்லாம் தரவில்லை.

ஒருவேளை மார்க்கெட்டிங் செய்யும் ஒன்றிரண்டு எழுத்தாளர்களுக்கு கைநிறைய காசு வந்து சேரக்கூடும். ஆனால் வெறும் எழுத்தாளர்களாய் இருப்பவர்களுக்கு என்றுமே பொருளாதாரத்தை நோக்கி ஒரு வேட்டை நாய் போல் பாய்ந்து பாய்ந்து வேட்டையாடுவதுதான் தொழிலாக மாறிவிடுகிறது.

வாடகை, இஎம்ஐ, சாப்பாடு, உப்பு – புளி – காரம், பிடித்த சினிமா, வெங்காயம், தக்காளி, பூண்டு, குக்கர் விசில் இவற்றிற்கு நடுவேதான் தினந்தோறும் எழுத வேண்டி இருக்கிறது.

எழுத்தே சலிப்பாக கூடிய வாழ்க்கையில் எழுத்தை சுமந்துகொண்டு வாழ்வதால் என்ன பெரிய பயன் வந்துவிடப்போகிறது? 50 வருடங்கள் கழித்து யாரோ ஒருவருக்காக தேங்கி நிற்கப் போகும் இரண்டு கதைகளுக்காக வாழ்நாளை தொலைத்து விட்டேன் என்றே தோன்றுகிறது.

“யாரோ இசைத்த இசைத்தட்டு” என்று ஒரு தொடரினை தமிழக அரசியல் பின்னணியை முன்வைத்து “யாவரும்” இணையதளத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆனால் – அதைத் தொடர்ந்து எழுதக்கூடிய மனநிலை வாய்க்கவில்லை. காளிதாஸ் எவ்வளவோ சொன்னபோதும் மனம் எழுதவில்லை.

பொருளாதாரத் தேவைகளுக்காக மட்டும் எழுதுவது என்னும் பஞ்சாரக் கூட்டிற்குள் சில நேரம் மனம் அடைபட்டுக் கொள்கிறது.

இதிலிருந்து விடுபட நான் பல நேரம் முயற்சித்தும், சில நேரங்களில் அந்த கூண்டை கிழித்துக் கொண்டு உடைத்துக் கொண்டு வெளியே வந்தபோதும் என்னால் முழுவதுமாக அந்த சுதந்திர வானத்தில் சிறகடிக்க இயலவில்லை.

வானம் வசப்படும். ஒரு நாள் நானும் எனது “யாரோ இசைத்த இசைத்தட்டு” நாவலை முடிக்கக்கூடும். ஒரு வேளை அது நிகழாமல் நான் மரித்தால் இந்த பதிவை நீங்கள் மேற்கோள்காட்டக் கூடும்.

நன்றி: முகநூல் குறிப்பு

Comments (0)
Add Comment