நான் நாடகத்தில் நடித்த அரைப்பைத்தியப் பாத்திரம்!

அசோகமித்திரன்

எளிமையும், இங்கிதமான கேலியுணர்வும் கொண்டவை அசோகமித்திரனின் எழுத்துக்கள். அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எல்லாவற்றிலுமே அதைப் பார்க்க முடியும்.

அவருடைய கட்டுரைத் தொகுப்பிலிருந்து இரண்டு சிறு பகுதிகள் :

சென்னையில் திடீரென்று எரிந்து காணாமல் போய்விட்ட ‘மூர் மார்க்கெட்’டைப் பற்றி எழுதிய கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார்.

“காலடியில் ஒரு மண்டையோடும், கையில் எலும்பையும் பிடித்திருக்கும் பச்சை அங்கி ஆள் ஒருவன் திரும்பத் திரும்ப என் கண்ணில் படுவான்.

அவன் காட்டிடும் வித்தையைப் பார்த்துவிட்டு, அவன் விற்கும் பாம்புக்கடி வேரை வாங்காமல் போனால், பேயடித்துக் கண் வீங்கி, நாக்குப் புழுத்து, ரத்த வாந்தி கண்டு சாவு வரும் என்பான்.

அவனுடைய வித்தையைப் பார்க்கிறவர்கள் எல்லாம் அவன் தரும் வேரை வாங்கி அதைப் பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட வேண்டுமானால், பூமியில் பாம்புத்தொகை பன்மடங்கு அதிகரித்து அவை அனைத்தும் வாய் ஓயாது ‘ஓவர்டைம்’ செய்து கடிக்க வேண்டும்.”

மற்றவர்களைப் பகடி செய்யும் அசோகமித்திரன் தான் சில நாடகங்களில் நடித்த அனுபவத்தையும் சுய எள்ளலோடு எழுதுகிறார்.

“நான் நடித்த பாத்திரம், இரண்டு அடாவடிக் குழுக்கள் நடுவே மாட்டிக் கொள்ளும் அரைப்பைத்தியப் பாத்திரம்.

நாடகத்தன்று காலையிலிருந்து என்னுடைய மூக்குக் கண்ணாடி சரியாக இல்லை.

நாடக இறுதியில் இரு குழுக்களும் சேர்ந்து எனக்குத் தர்ம மற்றும் அதர்ம அடிகள் கொடுக்க, நான் கீழே விழுந்தபோது, என் மூக்குக்கண்ணாடி என்னிடமிருந்து விடுபட்டு, மேடையின் முன் விளிம்பில் போய் விழுந்தது. பலத்த கரகோஷம்.

என் மூக்குக் கண்ணாடியைக் கூட இவ்வளவு பொருத்தமாக கீழே விழ வைத்தற்கு எனக்குப் பாராட்டுக்கு மேல் பாராட்டு.

என்னைப் பாராட்டி மாலை அணிவித்தபோது, கண்ணாடி மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தது.”-என்று நுட்பமான எழுத்தை எழுதிச் சென்ற அசோகமித்திரன் தன்னுடைய எழுத்தைப் பற்றிச் சொன்னது ரத்தினச் சுருக்கம்.

“இரு நபர்களுக்கிடையே பிளவு ஏற்படாமல் இருக்கச் செய்வதே என் எழுத்து”

Comments (0)
Add Comment