ஒரு வாசகனாகவும் சூழலியலாளனாகவும் புத்தக மிகை நுகர்வாளர்களுக்கு சில யோசனைகள். இவை உங்கள் பணத்தையும் புத்தகங்கள் சேமித்து வைக்கும் இடத்தையும் மிச்சப்படுத்தக்கூடும்.
1. உங்கள் வாசிப்பின் நோக்கத்தைத் தெளிவாக வைத்திருங்கள். உலகின் எல்லா துறைகளிலும் நாம் நிபுணத்துவம் பெறவேண்டிய அவசியமும் / அவகாசமும் இல்லை என்ற சூழலில் எதனை – எதற்காக வாசிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
2. புத்தகங்களை அவற்றின் அட்டையைக்கொண்டு மதிப்பிடாதீர்கள். போதுமான நேரமெடுத்து சில பக்கங்களைப் புரட்டி அதன் மொழி, கட்டமைப்பு, உள்ளடக்கம் போன்றவை உங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குங்கள்.
3. நீங்கள் வாங்க முடிவு செய்திருக்கும் புத்தகம் பல ஆண்டுகளாக நல்ல விற்பனையில் இருக்கும் புத்தகமென்றால், புத்தக்க் கண்காட்சிக்கு வெளியே நடைபாதைக் கடைகளில் மறுவிற்பனைக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு புத்தகம் மறுவிற்பனையில் கிடைக்கிறது என்றால் அதனைப் புதியதாக வாங்காதீர்கள்.
4. நல்ல / பிரபலமான புத்தகங்கள் எல்லாமே நம் தனிப்பட்ட ரசனைக்கும் தேவைக்கும் ஏற்புடையதாக இருப்பதில்லை. ஆகவே, உங்கள் தனிப்பட்ட ஆர்வத்தைத் தூண்டாத புத்தகங்களை அவை எவ்வளவு பிரபலமானவையாக இருந்தாலும் ஒதுக்குங்கள்.
5. உங்களிடமிருக்கும் – நீங்கள் வாசித்த நல்ல புத்தகங்களை – அவற்றை மீண்டும் வாசிக்க மாட்டீர்கள் என்றால் நண்பர்களுக்கோ அல்லது நூலகங்களுக்கோ தாராளமாக வழங்குங்கள். மறுவாசிப்புக்குத் தேவைப்படும் புத்தகங்களை திரும்பக் கிடைக்குமென்ற உத்தரவாதம் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்.
6. உங்கள் வாசிப்புத் திறனை மிகை மதிப்பீடு செய்து புத்தகங்களை வாங்கிக் குவிக்காதீர்கள். புத்தகங்களை ஆண்டின் 365 நாட்களிலும் வாங்கிக்கொள்ள ஏராளமான வசதிகள் இருக்கின்றன.
ஒரு ஆண்டிற்கான புத்தகங்களை பதினைந்து நாள் புத்தகக் கண்காட்சியில் வாங்கியே ஆகவேண்டுமென்ற அவசியமில்லை.
7. அருகாமை அரசு நூலகங்கள், வாடகை புத்தக நிலையங்களை (Lending libraries) முடிந்த மட்டும் பயன்படுத்தி விலையுயர்ந்த புத்தகங்களுக்கு அதிகமாகச் செலவழிப்பதைக் குறையுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு Lending libraries அதிகமாக பலனளிக்கும்.
8. படித்த புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் நண்பர் வட்டத்தை உருவாக்குங்கள். “நான் புக்ஸ மட்டும் யாருக்கும் குடுக்கமாட்டேன்” என்று பீத்திக்கொள்வது அருவெறுக்கத்தக்கது.
எல்லா நல்ல புத்தகங்களும் நம் வீட்டில் குடியிருக்க வேண்டுமென்ற ‘உடைமை’ மனநிலையிலிருந்து விடுபடுங்கள்.
9. புத்தகங்களை வாங்கிக் குவித்து, அடுக்கி, அழகு பார்ப்பதைவிட வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். புத்தகங்கள் வழிபாட்டுப் பொருளோ அல்லது அழகுப் பொருளோ அல்ல.
10. நீங்கள் ஏறக்குறைய தினமும் தீவிர வாசிப்பில் ஈடுபடுபவராக இருந்தால் மட்டும் கிண்டில் வாங்கி பயன்படுத்துவது குறித்துப் பரிசீலியுங்கள்.
எல்லா புத்தகங்களும் அறிவுக் களஞ்சியம் அல்ல; புத்தக நுகர்வும் சிந்தனை வளர்ச்சியும் எப்போதும் நேர்கோட்டில் வளர்வதில்லை. ஆகவே, பொறுப்புள்ள புத்தக நுகர்வோராய் இருங்கள்.
நன்றி: முகநூல் பதிவு