பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!

நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி

சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம்.

“எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க…” ஆசிரியர் சொன்னதும் பல மாணவர்களும் கைதூக்க, தூக்காமல் உட்கார்ந்திருந்த மாணவன் குப்புசாமி.

படிப்பதில் அவ்வளவு விருப்பமில்லை. வேதாரண்யம் அங்கிருந்து 14 கி.மீ. ஒன்பதாவது வகுப்புப் படிக்கக் காலையில் கிளம்பி அலுமினியச் சட்டியோடு போகும் போது உடம்பெல்லாம் களைத்துவிடும்.

பள்ளியில் உட்கார்ந்ததும் கண்ணைச் சுழற்றும். தூக்கம் வருவதை எப்படி விரட்டுவது! தன்னைத்தானே ‘நறுக்கென்று ஒரு கிள்ளு’, அல்லது ஊக்கால் சின்னதாகக் கையில் ஒரு குத்தல். நடக்கும் போது நிறையக் கவனிக்க முடிந்தது.

அதே விஷயங்கள் காதில் விழுந்தன. பள்ளிக்குப் போகும் போது தலையில் அவரை அல்லது தேங்காய் மூட்டையைச் சுமந்து சந்தையில் போட்டால் கையில் கொஞ்சம் காசு கிடைக்கும். அதை வைத்துப் புத்தங்கள் வாங்கிக் கொள்ளமுடியும்.

ஜவுளிக்கடையில் துணி வாங்கினால் ஒரு மஞ்சள் பை கொடுப்பார்களே… அதுதான் என்னோட ஸ்கூல் பை.

வருஷத்துக்கொரு தடவை தீபாவளி சமயத்தில்தான் புதுப்பை கிடைக்கும். அதில் ஒரு சந்தோஷம். தீபாவளி சமயத்தில் பக்கத்து வீடுகளில் பட்டாசு வெடிப்பார்கள். என்னுடைய வீட்டில் வசதியில்லை.

அதனால் தென்னைமட்டைக் காம்பை நுனியை வெட்டிவிட்டு மண்ணில் அடித்தால் ஊசிப்பட்டாசு வெடிப்பது போலச் சத்தம் கேட்கும். அதோடு திருப்திப் பட்டுக் கொள்வோம்.

பள்ளிக்கூடத்திற்கு நடந்து போகும் போது வயல்களில் பாட்டுப் பாடுகிற சத்தம் கேட்கும். சடங்கு வீடுகளில் கும்மியடிக்கிற பாட்டு காதில் விழும்.

போய்விட்டு இருட்டுகிற நேரத்தில் வீட்டுக்குத் திரும்பும் போது காற்றில் கசிந்து ஏதாவது பாடல்கள் மிதந்து வரும். விதவிதமான ஒப்பாரிகள் வந்து நிறைக்கும்.

அதெல்லாம் மனசில் தானாகவே வந்து விழுந்தவை. மற்றபடி பாட்டுக்கென்று தனிப்பயிற்சி எதுவும் கிடையாது.

முதலாவது வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைப் பாடச் சொன்னபோது நான் ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்திலிருந்து “செல்லக்கிளியே மெல்லப் பேசு” என்கிற பாட்டைப் பாடினேன். அதோடு சரி.

எஸ்.எஸ்.எல்.சி. முடித்து – தஞ்சை சரபோஜி கல்லூரியில் போய்ச் சேர வேண்டும். ஆனால், ஒழுங்கான சட்டையில்லை.

இண்டர்வியூக்குப் போவதற்காக – இன்னொருவரிடமிருந்து ஒரு சட்டையை வாங்கித் துவைத்துப் போட்டுக் கொண்டு போனேன். ஒரு வழியாக பியுசி முடிச்சு பி.எஸ்.சி.யை ஸ்காலர்ஷிப்’பில் படித்து முடித்தேன்.

பி.எஸ்.சி. படிக்கும்போது மூன்றாம் ஆண்டு. கல்லூரி ஆடிட்டோரியத்தில் விழா. பாட்டுக்கும் உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு ஆளைத் தேடினார்கள். நான் அகப்பட்டேன் 

என்னை மேடையேற்றி விட்டார்கள். அதிலும் கர்நாடக சங்கீதம் பாடுவார் என்று சொல்லிவிட்டார்கள்.

டி.எம்.சௌந்தரராஜன் பாடிய “கற்பக வள்ளியை” என்கிற பக்திப் பாடலைப் பாடினேன். கைதட்டினார்கள். கைதட்டினதின் நோக்கம் புரியவில்லை. மறுநாளும் பாடச் சொன்னார்கள்.

‘பாட்டு நல்லாயிருக்கே’ என்று நிஜமாகவே பாராட்டினார்கள். நமக்கும் பாடத் தெரியும் என்று ஹாஸ்டல் அறைகளுக்குப் அழைத்துப் போய்ப்பாடுவேன்.

ஒரு இசைக் குழுவில் பாடலாம் என்று தஞ்சையில் உள்ள ஒரு குழுவினரிடம் போனேன். பாடிக்காட்டச் சொன்னார்கள். பாடினேன். பாடியதும் ஆர்மோனியம் வாசிப்பவர் பெட்டியை மூடிவிட்டார்.

தபேலாவும் மூடப்பட்டது. “அப்பா… பாட்டுன்னா சுருதின்னு ஒண்ணு இருக்கு. தாளம்ன்னு இருக்கு. இரண்டையும் தெரிஞ்சுக்கிட்டுப் பாடணும் முதலில் இதெல்லாம் கத்துக்கிட்டுப்பாடு” என்று சொல்லி விட்டார்கள்.

கர்நாடக சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொள்வது? அலைந்தேன். ஒரு பாடகரிடம் அழைத்துப் போனார் ஒரு நண்பர். அவர் போனதும் என்னை மேலும், கீழுமாகப் பார்த்தார்.

“என்ன பண்றே எந்த ஊர்?”

சொன்னேன்.

“அப்பா என்ன பண்றார்?”

“விவசாயம்”

”சங்கீதம் உனக்குச் சோறு போடாது. போய் உழைச்சு முன்னேறுகிற வழியைப்பாரு… உனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் சங்கீதம் வராதுய்யா…” – என்னுடைய சமூகத்தைப் பற்றியெல்லாம் கேட்டு இப்படிச் சொன்னதும் எனக்கு அவமானமும், கோபமுமாகி விட்டது.

”சூத்திரனுக்குச் சுத்தமாகச் சங்கீதம் வராது” என்று அழுத்தம் கொடுத்து அவர் சொன்னது மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. அப்போது ‘சூத்திரன்’ என்பதற்குப் பொருள் சரியாகத் தெரியவில்லை.

நண்பர்கள் ஆறுதல் படுத்தினார்கள். சமாதானப்படுத்தி எனக்கு ஒரு ‘புல்புல்தாரா’வை வாங்கித் கொடுத்தார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக்கென்று ஒரு ‘கோர்ஸ்’ தனியாக இருப்பதாகச் சொன்னார்கள்.

‘மதுரை சோமு, தண்டபாணி தேசிகர் போன்ற சூத்திரர்கள் எல்லாம் பாடவில்லையா… போய்க் கத்துக்கோ. உன்னால் பாடமுடியும்… போ” என்று நம்பிக்கை யூட்டினார்கள்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு முன்பு ஆடிஷனுக்குக் கூப்பிட்டிருந்தார்கள்.

போனதும் விசாரித்துவிட்டு ‘சரி…ச…ப…ஸ … பிடி”… என்றார்கள்.

சங்கீதத்தின் குறியீடு அது. அப்போது எனக்கு விளங்கவில்லை. எனக்குப் பின்னால் தம்புராவை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் ஒருவர்.

சாய்வாக இருந்த தம்புராவைத்தான் பிடிக்கச் சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று அதைப் போய்ப் பிடித்தேன். எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

“ஏம்ப்பா…ச…பஸ…வைப் பிடிக்கச் சொன்னால் இதைப் பிடிக்கிறியே…”

“இதுதானே…..ப…ஸ?”

“எழுந்திரிப்பா…போய் வெளியே உக்காரு…”வெளியே வந்து உட்கார்ந்தேன். எல்லாம் முடிந்து கடைசியில் கூப்பிட்டார்கள். என் பின்னணியையும், எனக்கிருந்த வேகத்தையும் சொன்னேன்.

“சங்கீதத்தை நீங்க கத்துக் கொடுக்காட்டி தற்கொலை பண்ணிக்கு வேன்”கேட்டதும் அதிர்ந்து விட்டார்கள். சங்கீத வீபூஷணம் பிரிவில் என்னை ஒரு வழியாகச் சேர்த்துக் கொண்டார்கள்.

சியாமளா கோபாலன் என்கிற ஆசிரியர்தான் சங்கீதத்தின் முதல் பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். இரண்டாவது வருஷம் ஒரு இசைப் போட்டிக்கு அனுப்பினார்கள்.

நான் சமயோசிதமாக ‘வாடி என் கப்பக் கிழங்கே’ பாட்டையே சண்முகப் பிரியா ராகத்தில் பாடினேன்.

நல்ல வரவேற்பு. கொஞ்சம் பிரபலமாகி விட்டேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் அப்போது இசைக்கென்று மாஸ்டர் டிகிரி பெண்களுக்கு மட்டுமிருந்தது. ‘அதை ஏன் ஆண்களுக்கும் விரிவுபடுத்தக்கூடா?” என்று கேட்டிருந்தேன்.

அதன்படியே மூன்று மாதங்களில் ஆண்களையும் சேர்த்துக் கொண்டதும், நான் சிதம்பரம் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டேன்.

சென்னை வந்தும் சிரமம். மூன்று வேளை சாப்பிடுவதற்கே வசதியில்லை. ஒரு வேளைச் சாப்பாடுதான்.

திருவல்லிக்கேணியில் தங்கிப்படித்துக் கொண்டிருந்தேன். பிறகு அறைக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் அங்கேயே ஒரு கோவிலில் ஆறு மாதம் தங்கியிருந்தேன்.

வீட்டில் உதவி பண்ணுகிற அளவுக்குச் சூழ்நிலை இல்லை. வசதியும் இல்லை.

ரமாபாய் என்கிற ஆசிரியை வீட்டில் இரண்டுவருஷங்கள் தானும், இன்னொரு நண்பனும் தங்கியிருந்தோம்.

கண்ட இடத்தில் கண்டதைச் சாப்பிட்டதற்கு விளைவு வந்து விட்டது. இழுப்பு நோய் வந்து மூச்சு விடவே சிரமமானது. பாடவும் சிரமமாக இருந்தது.

சென்னை அரசு மருத்துவ மனைக்குப் போய் மருந்து, மாத்திரை வாங்கி ஆறு மாதங்கள் சாப்பிட்டேன். ஒரு பலனுமில்லை. நண்பர்கள்தான் ஓரளவு உதவி பண்ணினார்கள்.

எம்.ஏ. முடிக்கிற போது எங்கள் ஊருக்குப் போய் பஸ்ஸில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். பக்கத்தில் செவ்வாடை உடுத்தின ஒருவர். விசாரித்தேன்.

மேல்மருவத்ததூர் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார். சங்கீதம் படிப்பதாகச் சொன்னதும் வம்படியாக என்னை மேல்மருவத்தூரில் இறக்கினார்.

குளிக்க வைத்து அடிகளாரைப் பார்க்க அழைத்துப் போனார். அடிகளார் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ‘அருள்வாக்கு’ சொன்னார். கோவில் கும்பாபிஷேகத்தில் என்னைப் பாடச் சொல்லி அருள்வாக்கு வந்தது.

முதலாவது கச்சேரி. 1985 டிசம்பர் 23ம் தேதி. 1500 ரூபாய் பேசி அழைத்துப் போனார்கள். போய்ப் பாடினேன். ‘ஆடுபாம்பே’ என்கிற பாடலைப் பாடினபோது கூட்டத்திலிருந்தவர்களுக்கு ஒரே பரவசம்.

பக்கத்திலிருந்த நாகதேவதை சிலையே ஆடுகிற மாதிரி அவர்களிடம் சிலிர்ப்பு. ஒரே நாளில் என்னை ஆன்மீகவாதியாக்கிவிட்டார்கள்.

பிறகு தொடர்ந்து கோவில்களில் பாடினேன். ஏதோ பொருளாதார நெருக்கடி தீர்ந்தது. புளியம்பட்டியில் பாடும்போது அடிகளார் எனக்குப் பொன்னாடை போர்த்தினார்.

எம்.ஃபில் முடித்தபிறகு டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு பண்ணிக் கொண்டிருந்தேன் ‘நாட்டுப்புறப் பாடல்களில் இசை நயம்’ என்பது தான் தலைப்பு.

‘யூனிவர்ஸ் 90’ என்று தேசிய அளவில் மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு போட்டி ஆடம்பரமாக நடந்தது. ஒரு நாடகம் முடிந்து ஒரு இடைவேளை.

எனக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிப்போய் நின்று கொண்டிருந்தேன். கிடைத்த இடைவெளியில் என்னைத் தள்ளிவிட்டார்கள்.

தபேலாமட்டும்தான். அந்தச் சுருதியில் நான் பாடின பாட்டு “தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன்”. நாட்டுப் புறப்பாட்டு. ஏகப்பட்ட கை தட்டல். கத்திக் குவித்து விட்டார்கள்.

85-லிருந்து தஞ்சை மாவட்டத்திலிருந்து நூற்றுக் கணக்கான பாட்டுக்களைச் சேகரித்து வைத்திருந்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பு உற்சாகப்படுத்தியது. தொலைக்காட்சிகளிலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாட ஆரம்பித்தேன்.

ஆன்மீகப் பாடல்களைவிட நம்மண்ணின் பாடல்களுக்கு இருக்கும் மகத்துவம் புரிந்தது. ஒருசமயம் மதுரையில் ஆன்மீகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தே, கச்சேரிக்கு இடையில் ஒரு நாட்டுப் புறப்பாடலைப் பாடினபோது கூடவே வாசித்துக் கொண்டிருந்த வயலின்காரரும், மிருதங்கக்காரரும் கடம் வாசித்தவரும், வாசிக்காமல் அமைதியாகிவிட்டார்கள்.

கேட்டால் “நாட்டுப் பாடல்களுக்கு நாங்க வாசிக்க மாட்டோம்” என்று சொல்லி விட்டார்கள். எனக்குள் வேகம் குமுறிக்கொண்டு வந்தது.

எவ்வளவு கேவலமாக நினைக்கிறார்கள் இந்த மண்ணின் பாடல்களை? வயலின் மிருதங்கம் இல்லாமல் நாட்டுப் புறப் பாட்டைப் பாட முடியாதா? உடனே ஆர்மோனியம், தபேலாவுடன் நாட்டுப் புறப்பாடலுக்காக ஒரு இசைக்குழுவைத் துவக்கிபடாட ஆரம்பித்துவிட்டேன்.

‘மண்மணக்குது’ என்கிற முதல் கேஸட்டை 90க்குப் பிறகு வெளியிட்டேன். அதன் பிறகே எனக்கென்று தனி அடையாளம் உருவானது.

அங்கீகாரம் கிடைப்பது, அதிலும் பின்தங்கிய வகுப்பிலிருந்து, கிராமப்புறப் பின்னணியிலிருந்து ஏதோ ஒரு திறமையோடு முன்னுக்கு வருவது அவ்வளவு சுலபமல்ல. இருந்தாலும் அதை நாம் தான் விடாப்பிடியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

என்னுடன் இசைபடித்தவர்களையே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடக் கூப்பிட்டபோது பலர் வரவில்லை. என்னுடன் படித்த அனிதா மட்டுமே பாட வந்தார்கள்.

நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினதற்காக ஒரு புறம் எத்தனையோ அவமானங்கள். அதே சமயம் இந்த அவமானங்களைப் படிப்படியாகப் புறக்கணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நானும் கற்றுக் கொண்டேன்.

நாட்டுப்புறப் பாடல்தான் என்னுடைய முகம், இதுவரை பதினைந்து கேஸட்கள் போட்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான ஆன்மீகப் பாடல்கள் பாடியிருக்கிறேன்.

பிறகு சினிமாவில் இதுவரை இருபது பாடல்களைப் பாடியிருக்கிறேன். அதிலும் என் மாதிரி குரலுள்ள வேறு ஒருவரைக் கூப்பிட்டுப் பாடச் சொல்கிறார்களே ஒழிய, தொடர்ந்து வாய்ப்பு தருவதில்லை.

குரலில் உச்சஸ்தாயிக்குப் போய்ப் பாட முடியு மென்றாலும் இந்த நிலைமை. தங்கர்பச்சான் இயக்கியிருக்கிற ‘சொல்ல மறந்த கதை’யில் நடித்திருக்கிறேன்.

இன்னும் வாய்ப்புக் கிடைத்தால் கூடுதலாக என்னால் இயங்க முடியும்.

“சிரமங்களையும், அவமானங்களையும் சந்தித்த நேரங்களில்கூட எந்தச்சமயத்திலும் என் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நான் இழந்து விடவில்லை.

எதையும் என்னால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. தன்னடக்கம் என்கிற பெயரில் எதற்காக என்னைக் குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.?

மற்றவர்களைவிட என்னையே நான் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் முக்கியம்.”

 

Comments (0)
Add Comment