லட்சம் பிரதிகள் விற்றால் சிறந்த புத்தகமா?

ஒரு புத்தகம் லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் அந்தப் புத்தகம் சிறந்த புத்தகம் ஆகி விடுமா? லட்சம் பிரதிகள் விற்ற அந்தப் புத்தகத்தை எழுதின எழுத்தாளர் முன்னணி எழுத்தாளர் ஆகி விடுவாரா?

அந்த நண்பர் அசால்ட்டாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டு இப்படித்தான் யோசித்தேன்.

அந்தப் புத்தகம் ஒரு இலட்சம் பிரதி விற்றது என்றால் அதைப் பற்றி எத்தனை பேர் பேசியிருக்கிறார்கள்?

அதன் உள்ளடக்கம், சொல்ல வந்த விஷயத்தை எளிதில் புரியும்படி சொல்லுதல், அதற்கான உத்தி, எடுப்பு – தொடுப்பு – முடிப்பு, மொழி ஆளுமை, மொழி நடை, வாசிப்பு சுகம் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது பரவலாகப் பேசப்பட்டிருக்க வேண்டும்.

அட்லீஸ்ட் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்த பின்புதான் மற்ற புத்தகங்கள் வாசித்துப் பழகினேன். அல்லது எப்படி வாசிப்பது என்று தெரிந்து கொண்டேன்.

அதுவும் வேண்டாம், இந்த நூலை வாசித்த பின்புதான் என் வாசிப்பை எளிமையாக்கிக் கொண்டேன் என்று யாராவது பேசியிருக்கிறார்களா? வலைத்தளங்களில் எழுதியிருக்கிறார்களா?

நாங்கள் வாசிப்பில் திளைத்த 1970 – 80 களில் ஒரு புத்தகத்தை வாங்கினால் குறைந்தபட்சம் 10 – 20 பேராவது படிப்போம். கல்கி, குமுதம், ஆனந்த விகடன், ராணி போன்ற வார இதழ்கள், ராணிமுத்து, மாலைமதி, அம்புலிமாமா, பாலமித்ரா மாத இதழ்களை சொல்லவே வேண்டாம்.

எங்கள் வீதியில் உள்ள வீடுகளில் எல்லாம் ஒரு சுற்று வந்து, அடுத்த வீதி, அதற்கடுத்த வீதிகள் எல்லாம் வாசிப்பு உலா போய் வரும் போது இதழ் நைந்து கசங்கிப் போய்விடும்.

போதாக்குறைக்கு அந்த இதழ்களில் வந்த தொடர்கதைகள் எல்லாம் பைண்டிங் செய்யப்பட்டு அதுவும் பெரும் சுற்றுக்குப் போகும்.

அதோடு அவை நிற்குமா என்றால் அதையும் தாண்டி ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் மாலையில் வாய்க் கச்சேரி நடத்தும் பெண்களின் வாயில் ‘ஏய் பொன்னியின் செல்வன்ல இந்த வாரம் பூங்குழலி பார்த்தியா?’, ‘குறிஞ்சி மலர்ல அரவிந்தன் என்ன செய்தான்’, ‘இந்த மாசம் விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன பவளவள்ளியை மீட்ட கதை எப்படியிருந்தது?’ என்று வாசிப்பின் வீரியம் புரண்டோடும். நல்ல புத்தகம் எது? என்பதை வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர் இப்படியான வாசகர்களின் வாயே விளம்பரப்படுத்தியது.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் 3-வது, 4-வது படிக்கும் போது அக்கம்பக்க வீட்டுப் பெண்கள் ராணி, குமுதம், கல்கண்டு, விகடன், கல்கி வாங்கி வரச் சொல்வார்கள்.

எங்கள் வீட்டிற்கும் கடைத் தெருவுக்கும் ஒரு கி.மீ தூரம். சிறுவனான நான் அதை வாங்கி வரும் போதே வழியில் புரட்டிப் புரட்டி படித்து விடுவேன். ராணிமுத்து அறிவுப்போட்டி தவறாது கலந்து கொள்வேன். அதனால் ராணிமுத்து மூலம் நாவல் வாசிப்பு ஏற்பட்டது.

அதில் தமிழ்வாணன் எழுதிய கைதி என்ற நாவல் வந்தது. அது அவ்வளவு சுவையான துப்பறியும் நாவல்.

அந்தக் கதையைப் பற்றி வகுப்புத் தோழர்களிடம் பேசிய போது ராணி முத்து – வில் வந்த கைதி, கைதி நம்பர் 811 என்ற நாவலின் சுருக்கம். முழுசா படிச்சுப் பாரு. நல்லாயிருக்கும் என அவர்கள் கதையில் விடுபட்ட இடங்களை நிரப்பினார்கள்.

அப்போதே நானும், என் வீட்டுப்பக்கத்தில் உள்ள சிலரும் கைதி நம்பர் 811 ஐ முழுசாக படிக்க ஆவல் கொண்டோம்.

லைப்ரரியில் அந்த நூல் கிடைக்காததால் மணிமேகலை பிரசுரத்திற்கு எழுதி VPP யில் பெற முடிவு செய்தோம். அதற்காக ஆளாளுக்கு சிலுவாடு சேமித்த பணத்தைப் போட்டு அந்த நூலை தபாலில் பெற்றோம்.

முதன்முதலாக நான் தபாலில் VPP யில் என் முகவரியில் பெற்ற நூல் அதுதான்.

நான் வசித்த கோவை ஒண்டிப்புதூரில் நூலகம் இல்லை. எங்கள் ஊருக்கு மேற்கே சிங்காநல்லூர் 3 கிமீ, கிழக்கே இருகூர் 2 கி.மீ. இந்த இரண்டு ஊர்களில்தான் நூலகம் இருந்தது.

அங்கு போக வசதி இல்லை. அப்பாவுக்கு சைக்கிள் வீட்டில் இருந்தாலும் அதை ஓட்ட எனக்குத் தெரியாது.

என்னைப் போலவே ஊருக்குள் பலரும் இருந்தனர். குறிப்பாக வாசிப்பு சுகத்தில் திளைத்த பெண்கள் பட்டாளம் நிறைய இருந்தது.

எங்கள் வாசிப்புக்குத் தீனி போடவே பல பெட்டிக் கடை. மளிகைக் கடைகளில் புத்தகங்கள் வாடகைக்கு விட்டனர்.

ஒரு ரூபாய் ராணிமுத்து எடுத்தால் ஒரு நாளைக்கு பத்து பைசா வாடகை. 24 மணி நேரம் கடந்தால் அதுவே 20 பைசாக்கள் தர வேண்டும். கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, அகிலனின் சித்திரப் பாவை போன்றவையின் விலை ரூ.5, ரூ.10, ரூ.20 என நீளும். அதை வாடகைக்கு எடுத்து ஒரே நாளில் வாசிக்க ரூ. 1, ரூ.2 எல்லாம் செலவு செய்ய முடியாது.

எனவே நாங்கள் ஆண் – பெண் பாகுபாடின்றி ஆறேழு பேர் சேர்ந்து கொள்வோம். ஆளுக்கு 5 காசு, 10 காசு போட்டு அது மாதிரி பேர் பெற்ற பெரிய புத்தகத்தை வாங்கி விடுவோம்.

ஒரு புத்தகத்தை நடுவில் வைத்து எல்லோரும் சுற்றிலும் அமர்ந்து வாசிப்போம். ஒருவர் வாசித்தால் வாசித்து முடிச்சாச்சுன்னு அடுத்த பக்கம் புரட்ட எத்தனிப்பார்.

மற்றவர்கள் சிலர், ‘கொஞ்சம் இரு, கடைசி இரண்டு வரிதான் படிச்சிக்கறேன்!’ என்று அவசர, அவசரமாய் படிப்பார்கள். படித்தவர்கள் சீக்கிரம், சீக்கிரம் என்று மற்றவர்களை அவசரப் படுத்துவார்கள்.

இப்படியே 300 பக்கங்கள், 400 பக்கங்கள் ஆறேழு பேரும் படித்து விடுவோம். மதிய சாப்பாடு கூட நினைப்பில் வராது. யார் முதலில் பக்கத்தை படித்து முடிப்பது என்பதிலும் போட்டி.

அப்படியொரு வேகமான வாசிப்பு. ஒரே நாளில் – 11 – 12 மணி நேரத்தில் 700 – 800 பக்கங்கள் கொண்ட அகிலனின் சித்திரப்பாவை, கல்கியின் கடல்புறா எல்லாம் நான் வாசித்தது இப்படித்தான்.

ந.பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், பி.டி.சாமி, தமிழ்வாணன், லட்சுமி, சிவசங்கரி, ரமணி சந்திரன் புத்தகங்கள் எல்லாம் ஒரே நாளில் மூன்று, நான்கு புத்தகங்கள் வாசித்து சுவை கண்டது உண்டு.

இப்படி குழுவாக வாசிக்கும் நாங்கள் அதில் வரும் பாத்திரங்கள் பற்றி எங்களுக்குள் ரசித்து சிலாகிப்பதும் தொடர்ந்து நடக்கும்.

அப்படித்தான் பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள் எல்லாம் எங்களுக்குள் பேசப்பட்டு பேசப்பட்டு பிரபலமடைந்தன. கதைப் புத்தகங்கள் மட்டுமல்ல, கவிதை, கட்டுரைகள் கூட அப்படித்தான் வாசிக்கப்பட்டன.

அந்தக் காலத்தில் தினத்தந்தியில் வெளிவரும் சிந்துபாத் மற்றும் துப்பறியும் படக்கதைகளை வாசிக்காமல் ஒரு வாசகன் உருவாகி இருக்க முடியாது.

காலையில் விடிந்தும் விடியாமல் பேழையில் குட்டிப் பெண்ணாக அடைபட்ட லைலா என்ன ஆனாள், சிந்து பாத் மந்திரவாதியை முறியடிக்க என்ன செய்தான் என்பதைப் பார்க்க வெறித்தனமான ஆவல் கொண்டு டீக் கடைக்கு ஓடின அனுபவம் எல்லாம் சொல்லி மாளாது.

ராணி, குமுதம், விகடன் எல்லாம் அட்டை டூ அட்டை வாசிக்காத பக்கங்கள் இருக்காது. இது எனக்கு மட்டும் நடந்த அனுபவம் அல்ல.

என் தெருவில் மட்டுமல்ல, ஊருக்கு ஊர் அத்தனை தெருக்களிலும் நடந்த ஒட்டுமொத்த தமிழ் சமூகமே வாசிப்பில் மூழ்கிக் கரைந்தது.

அன்றைக்கு பேசப்படாத கதைகள் கதையே அல்ல. ஒருவருக்கொருவர் கலந்துரையாடாமல் ஓர் எழுத்தாளன் உருவாகவில்லை.

விளங்கச் சொன்னால் ரா.கி. ரங்கராஜன் எழுதிய ‘எப்படிக் கதை எழுதுகிறார்கள்’ என்ற தொடர் குமுதத்தில் வந்த போது வாசிக்காதவர்களே இல்லை எனலாம்.

அது மட்டுமா அதை வாசித்துத்தான் எழுத்தாளர் ஆனேன் என்று சொன்ன பிரபல எழுத்தாளர்கள் பட்டியல் வெகு நீளம். இதை ஒட்டி ரா.கி.ரங்கராஜன் எப்படித்தான் கதை எழுதுகிறார்களோ என்பதை ‘எ.க.எ’ என்ற தலைப்பில் சுருக்கி தபால்வழியில் அறிமுக எழுத்தாளர்களுக்கு, புதிதாக எழுத வர ஆசைப்படுபவர்களுக்குப் பயிற்சிப் பட்டறையே நடத்தினார்.

அந்த அளவுக்கு அது அன்று உச்சபட்சத்தை அடைந்தது.

அப்படியே எ.க.எ நூல் வடிவம் கண்டபோது கூட அந்த எழுத்தாளர் ரா.கி.ர அந்தப் புத்தகம் இலட்சம் பிரதி வித்துடுச்சாக்கும் என்று பெருமைப் பட்டதோ பெருமிதப்பட்டதோ இல்லை.

ஏனென்றால் அது கார்ப்பரேட் உலகம் அல்ல. பெரும்பாலும் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தெரியாத உன்னத எழுத்தாளர்கள் வாழ்ந்த காலம் அது.

இப்போது அப்படியல்லவே. ஒருவர் வாசிப்பது எப்படி? என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார். அது பேசப்படவே இல்லை.

ஆனால் எடுத்த எடுப்பில் இலட்சம் பிரதி விற்றுவிட்டதாகச் சொல்லுகிறார்.

அப்படியானால் அந்த இலட்சம் பேரும் வாசித்தார்களா? பிறரிடம் அது பற்றி சிலாகித்தார்களா? வியந்து பாராட்டினார்களா? அந்த புத்தகத்தை ஓசியில் வாங்கியாவது யாராவது வாசித்தார்களா?

ஒரு நல்ல புத்தகம் எப்போதும் ஓரிடத்தில் வாசிக்கப்பட்டு பூட்டி வைக்கப்படுவதில்லை.

நல்ல வாசகன் ஒரு புத்தகத்தை நச் சென்று வாசித்து உடனே அது அவனுக்குப் பிடித்துப் போய் விட்டதென்றால் 10 பேரிடமாவது சொல்லுவான். 10 பேருக்காவது அந்தப் புத்தகத்தை வாசிக்கச் சொல்லி மாற்றி ஓசியில் கொடுப்பான்.

இப்போதெல்லாம் வலைத்தள உலகம். தன் மனதிற்குப் பிடித்தமானதை மனம் விட்டு அதில் எழுதியே தீருவான். அது அந்தக் காலம் போல் 10 பேருக்கல்ல 10 ஆயிரம் பேருக்கு, 10 இலட்சம், 10 கோடி பேருக்குக் கூட சென்றடைய வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இலட்சம் பிரதி விற்ற ஒரு புத்தகத்தை யாராவது வாசகர்கள் பாராட்டி வலைத்தளத்தில் எழுதி உள்ளார்களா?

அதைப் பார்த்து நீங்கள் ஆர்வம் பொங்க அதைப் படித்துள்ளீர்களா? அப்படியிருந்தால் சொல்லுங்கள். அதற்கு முன்பு நான் சொல்லி விடுகிறேன்.

ஒரு நாள் இதே முகநூலில் பார்த்தேன். அந்த நூலை அறிமுகப்படுத்தி ஒருவர் எழுதியிருந்தார். நான் பார்த்து விட்டு ஆச்சர்யப்பட்டும் போனேன்.

ஏனென்றால் அதை எழுதியிருந்தது என் நெருக்கமான எழுத்தாள நண்பர். அதிலும் அவர் மொழிநடையில் கில்லி. வாசிப்பு சுகம் தராத எழுத்துக்கள் எல்லாம் குப்பைக்கு சமம் என்று எனக்கே கற்றுக் கொடுத்தவர்.

அவர் எப்படி இந்தப் புத்தகத்தைப் பாராட்டுகிறார். இதில் உள் அரசியல் என்ன? அதையும் அவரைப் பார்த்த போது அவரிடமே நிர்தாட்சண்யமில்லாது கேட்டேன். அதுவும் பின்னர் சர்ச்சையானது.

தொடரும்

கா.சு. வேலாயுதன் , கோவை, 04.01.2025

#தமிழ்வாணன் #கல்கி #பொன்னியின்_செல்வன் #ந_பார்த்தசாரதி #சாண்டில்யன் #ஜெகசிற்பியன் #பி_டி_சாமி #லட்சுமி #சிவசங்கரி #ரமணி_சந்திரன் #ரா_கி_ரங்கராஜன் #tamil_vaanan #kalki #ponniyin_selvan #na_parthasarathy #sandilyan #jegasirpiyan #pt_samy #lakshmi #sivasankari #ramani_chandren #ra_ki_rangarajan

Comments (0)
Add Comment