பரண்:
பிரமிள் என்றழைக்கப்பட்ட தமிழின் முக்கியமான கவிஞரும், விமர்சகருமான தருமு சிவராமுவிடம் 1979-ல் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.
கேள்வி:
மேல் நாட்டில் ஆழ்ந்த நுண்மையான விஷயங்கள் எல்லாம் தகுந்த ஆதரவுடன் கவனிப்புக்கு உள்ளாகையில், இங்கு அதுவும் சமய, வேதாந்தக் கருத்துக்கள் வேரூன்றிய நாட்டில் தற்போது கருத்து நுண்மைக்கு ஆதரவில்லாமல் போனதற்குக் காரணம் கூற முடிகிறதா?
பிரமிள் பதில்:
இந்தியாவில் புத்தர் செயல்பட்ட காலமும், அவரது கருத்துக்கள் உணரப்பட்ட காலமும் தவிர, மற்றைய காலங்களில் குருட்டு நம்பிக்கைகளே ஆதரவுபெற்று வந்திருக்கின்றன.
கருத்துக்களை விட நம்பிக்கைகளே போஷிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி தான் இன்றைய இந்தியாவிலும் இருக்கிறது.
மேல்நாடுகளில் மதச்சார்பற்ற சிந்தனைப் பாரம்பரியம் தொடர்ந்து இருக்கின்றது. அதன் உச்சகட்ட நிலை மேனாட்டு விஞ்ஞானம்.
இங்கே சமூக சக்திகளை மூட நம்பிக்கைகள் மூலம் மூச்சடக்க ஆட்சியும், வழிபாட்டுத் தலைமையும் இணைந்து செயல்பட்டிருக்கின்றன.
மதச் சார்பற்ற தேடல்களுக்கு இதனால் ஆட்சி ஆதரவு, சமூக ஆதரவு களம் அமைக்கவில்லை. மேல் நாட்டின் விஞ்ஞான சிந்தனை மதச் சக்திகளை எதிர்த்து எழுந்தது போன்ற நிலைமைகள் இதனாலேயே இந்தியாவில் பிறக்கவில்லை.
இதன் நீட்சி தான் நுட்பமான சிந்தனைக்குப் போதுமான ஆதரவு இங்கு கிடைக்காததிலும் தெரிகிறது.”
– ‘மணா’ வின் தொகுப்பில் வெளியான ‘ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’ என்கிற நேர்காணல்கள் அடங்கிய நூலிலிருந்து ஒரு பகுதி.