நல்ல வாசகனாக உருவாவது எப்படி?

எழுத்தாளர்கள் உருவாவது சமூகத்திற்கு நல்லதுதான். போற்றி வரவேற்கப்படவும் வேணும்தான். வெறுமனே எழுத்தாளர்கள் எதையாவது எழுதித் தொலைத்து புத்தகமாக அச்சேற்றி புத்தகச் சந்தைக்கு கடை விரித்தால் போதுமா? அதுவே நல்ல சமூகத்திற்கான அடையாளமா? என்றால் நிச்சயமாக இல்லை.

பின்னே?

இந்தப் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்கள் பெருக வேண்டும். அந்த வாசகர்கள் தாம் எடுத்துப் படித்ததை எல்லாம் திரும்பத் திரும்ப மனதில் எண்ணி இலயித்து, ‘ஆகா இது அல்லவா எழுத்து. இப்படி எல்லாம் கூட சமூகத்தில் நடந்திருக்கிறதே. எப்படிப்பட்ட நல்ல விஷயம்’ என்று மகிழ்ச்சி பொங்க வேண்டும்.

‘அடடா இங்கே இப்படிக் கூட அட்டூழியம் நடந்திருக்கிறதே. அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள நாம் என்ன செய்யலாம்’ என்று வருந்தி யோசிக்க வைக்க வேண்டும்.

இரண்டுமல்லாமல், ‘ப்பூ இதென்ன பெரிய விஷயம். நம் வாழ்க்கையில் – நம் வீட்டில் – நம் பக்கத்து வீட்டில் – நம் உறவுக்காரருக்கு இதை விட பயங்கரமாய் அது நடந்ததே.

அதை உலகுக்குச் சொல்ல வேண்டுமே. அதன் மூலம் இந்த சமூகம் குண்டூசி முனையளவேனும் மாற வேண்டுமே.

அதற்கான முயற்சியாக நாம் எழுத வேண்டுமே!’ என்ற எண்ணத்தை ஒரு எழுத்து உருவாக்குமேயானால் நீங்களும் எழுதப் போகிறீர்கள், எழுத்தாளராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

சரி எப்படி எழுதுவது? அதற்கு நம் எழுத்தாள முன்னோடிகள் பலர் “எழுதுவது எப்படி?” என நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

அதில் முக்கியமானது ரா.கி. ரங்கராஜன் எழுதிய எப்படி கதை எழுதுவது? இதைப் படித்து எழுத்தாளராக ஆகி புகழடைந்தவர் ஏராளம்.

அதன் பின்னிட்டு சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி, ரஞ்சன், பா.ராகவன் போன்றோரெல்லாம் கதை எழுதுவதன் கதையை எழுதி உள்ளார்கள்.

அப்படியில்லாமல் தன் அனுபவமாக ராஜேஷ்குமார் ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்’, ‘என்னை நான் சந்தித்தேன்’ என இரண்டு நூல்களை எழுதி உள்ளார்.

இது எல்லாம் 1980-களில் நாங்கள் எழுத வந்த காலம். இவர்கள் நீங்கள் எழுத்தாளராவதற்கு உங்களுக்குள் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என பலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து அவர்கள் எல்லாம் சொல்லாத விஷயம் ஒன்று உள்ளது.

எழுத்தாளராவதற்கு முதல் முழு தகுதி நீங்கள் முதலில் வாசகராக – வாசிப்பாளராக இருக்க வேண்டும் என்பதைத்தான்.

அதை சொல்ல அவர்கள் மறந்து விட்டார்களா? என்றால் இல்லை. அதை அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு எழுதச் சொல்லித் தந்த காலத்தில் நாங்கள் வண்டி, வண்டியாய் வாசித்துக் கொண்டிருந்தோம்.

1980-களுக்கு முன்பு தத்துப் பித்தென்று எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் புத்தகமோ, நாளிதலோ, வார இதழோ ஏதாவது ஒன்றையாவது தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தோம்.

வாசிப்பு என்பது அப்போது அனைவருக்குமான சுவாசம். 2K கிட்ஸ்களுக்கு விளங்கச் சொல்லுவதானால் இப்போது ரயிலிலோ, பஸ்ஸிலோ, ஆட்டோவிலோ செல்லும் பயணிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் யாவர் கையிலும் செல்ஃபோன் இருக்கிறது.

அதை 99 சதவீதம் பேர் நோண்டிக் கொண்டே செல்கிறார்கள். செல்ஃபோன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதல்லவா?

அது போல அந்தக் காலத்தில் எங்கே பயணம் போவதானாலும், நடந்து செல்வதானாலும் ஏதாவது ஒரு புத்தகம், நாளிதழ், பருவ இதழ் இல்லாமல் – அதை வாசிக்காமல் செல்லாதிருக்க முடியாது.

அதை விட வாசிக்கத் தெரியாதவர்கள் கூட நாளிதழ்களை வாங்கி படிக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்து உரக்க வாசிக்கச் சொல்லி கேட்ட காலம்.

இப்போதைய தலைமுறைக்கு செல்ஃபோன் பொழுது போக்குக் கருவியானது எப்படியோ, சென்ற தலைமுறைக்கு TV பொழுது போக்கு அம்சமானது எப்படியோ, அதுபோல புத்தகங்களே அதற்கு முந்தைய தலைமுறைக்கு பொழுதுபோக்கும் அம்சமாக இருந்தது.

அப்போது சினிமா பொழுதுபோக்குக் கருவிதான் என்றாலும் தினம் தினம் அதைப் பார்க்கும் வசதி கிடையாது. வாரம், மாதம் ஒரு நாள் அதற்குத் திட்டமிட்டுப் போவதே ஒரு கல்யாண நிகழ்ச்சிக்குப் போவது போல் இருக்கும்.

இன்றைக்கு அறுபது வயது கடந்தவர்கள் புத்தக வாசிப்பு, தொலைக்காட்சி நேசிப்பு, செல்ஃபோன் மோகம் என மூன்றையும் பார்த்தவர்கள். அனுபவிப்பவர்கள்.

ஆக வாசிப்பு என்பது மூன்றாம் தலைமுறைக்கு சுவாசமாகிப் போனது. எனவேதான் எழுத்தாளராவது எப்படி என்று பக்கம்பக்கமாக எழுதிய அந்த தீர்க்கதரிசிகள், ‘எப்படி வாசிப்பது’ என்றோ, ‘எழுத்தாளன் ஆவதற்கு வாசிப்புதான் அடிப்படை’ என்றோ, ‘வாசிக்காமலே நீ எழுத்தாளன் ஆனால் நீ எழுதும் எழுத்து அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்படும் கட்டடம் போல!’ என்று சொல்லத் தவறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஏன் செல்ஃபோனில் வாசிப்பவர்கள் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். அது மிகச் சொற்பம். அதுவும் பெரும்பாலும் அந்தக் காலத்தில் புத்தகங்களில் லயித்தவர்கள்தான் செல்ஃபோனிலும் படிக்கிறார்கள் (இப்போது நான் இதை எழுதுவது போல) என்பது என் அனுமானம்.

சரி. இதை எல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன். இப்போது நிறைய எழுத்தாளர்கள் எழுத வருகிறார்கள். நிறைய புத்தகங்களும் போடுகிறார்கள். அவற்றை எல்லாம் கை தேர்ந்த வாசகர்களாலேயே வாசிக்க முடிவதில்லை.

அதை மீறி கஷ்டப்பட்டு வாசித்தாலும் அயற்சியே மேலிடுகிறது. நல்ல வாசகனே அப்படி என்றால் புதிதாக வாசிக்க வரும் வாசகன் நிலைமை என்ன? புத்தகங்கள் என்றாலே இப்படித்தானோ என மிரண்டு ஓடுகிறான்.

இன்றைய காலத்தில் ஒரு ஒளவையார் பிறந்து பாட வந்தால், ‘கொடிது, கொடிது பாட புத்தகங்களை விடவும், கதைப் புத்தகங்கள் வாசிப்பது கொடிது’ என்று சொல்லி ஓடியிருப்பார் என்பது போலத்தான் பெரும்பான்மை எழுத்தாளர்களின் நூல்கள் வாசிப்பு சுகம் என்றால் வீசை என்ன விலை என கேள்வி கேட்கிறது.

அந்த வாசிப்பு சுகம் என்பது என்ன? இப்போது வரும் நூல்களில் வாசிப்பு சுகம் உள்ள நூல்களே இல்லையா? அப்படியான வாசிப்பு சுகம் உள்ள நூல்களை எப்படிக் கண்டுபிடிப்பது? ஒரு நல்ல வாசகனாக உருவாவது எப்படி? எந்த வயதில் வாசிக்கத் தொடங்கலாம்.

எந்தந்த நூல்களை எப்படி வாசிக்கலாம்? வாசிப்பிற்கும், எழுத்தாளன் ஆவதற்கும் என்ன தொடர்பு? இப்படியான கேள்விகளுக்கு விடை சொல்வதே இப்போது இதை நான் எழுதுவதன் நோக்கம்.

– கா.சு. வேலாயுதன்

Comments (0)
Add Comment