இந்தியில் வெளியான ‘மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு’!

பழங்குடி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மலையக மக்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் கலை இலக்கியம் சார்ந்த தொடர் செயல்பாட்டில் இருப்பவர் M.S. செல்வராஜ் என்கிற செல்வா.

இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள செயல்பாட்டாளர்களுடன் தொடர்ந்து இயங்கி வருபவர். பல கட்டுரைகளையும் பல ஆய்வு நூல்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளவர். 32 நாடகங்களும், பல எழுச்சிப் பாடல்களையும் எழுதி, மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்த்த பெருமைக்குரியவர். இதனாலேயே இவரது படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த காலம்சென்ற இயக்குநர் KP சசியுடன் இணைந்து பல ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். (Caon Chodab Nahi)

இவர் சமீபத்தில் எழுதிய ‘மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு’ என்ற நூல் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நூல் ஆங்கிலத்தில் (The Hidden Heroic History of the Upcountry Tamils) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரேசில், கொலம்பியா, கியூபா, பொலிவியா போன்ற தென் அமெரிக்கா நாடுகளிலும், பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இலங்கை, நேபாள் போன்ற நாடுகளின் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதே நூலினை இந்தி மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்து இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அக்கரையோடு, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த (தற்போது டெல்லியில் இருக்கும்) திரு. கமல் என்ற தோழர் மொழிப்பெயர்ப்பு செய்திருக்கிறார்.

இதன் வெளியீட்டு விழா டெல்லி இந்தியா கேட்டுக்கு அருகில் இருக்கும் YMCA என்ற அரங்கில் 12.12.2024 அன்று நடைபெற்றது.

இந்தி மொழிப்பெயர்ப்பு நூலினை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுனந்தம் பிரசாத் என்பவர் வெளியிட, பூமி அதிகார் அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் திருமதி சுவேத்தா திரிபாதி பெற்றுக்கொண்டார்.

இதில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் இயக்கத் தலைவர்கள், ஊடகத்தினர் கலந்து கொண்டதோடு, நூற்றுக்கணக்கான இந்தி மொழிப்பெயர்ப்பு நூலினை பெற்றுச் சென்றனர்.

இந்த விழாவில் பேசியவர்கள் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகள், மனித உரிமை மீறல்கள், இதற்கு எதிராக வீரம் செறிந்த ஜனநாயக போராட்ட வரலாற்றை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரின் அரசியல் லாபத்துக்காக பலியிடப்பட்டதை அனைவரும் எடுத்துரைத்தனர்.

அதோடு, மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

என்றும் அன்புடன்
M.S.செல்வராஜ்

Comments (0)
Add Comment