என்றும் சுகந்தமாய் ‘ஆண் பாவம்’!

தமிழில் மிகச்சில படங்களே ‘இதை எத்தனை தடவை பார்த்திருக்கோம்’ என்ற சிந்தனைக்கே வழிவிடாமல், மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்யும்.

அப்படங்களின் உள்ளடக்கத்தை ஆணிவேராக, அக்குவேறாகப் பிரித்து, ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ என்ற பதத்திற்கான இலக்கணமாகக் கொள்ளலாம். அப்படங்களில் முதன்மையானது, ஆர். பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண் பாவம்’.

1985ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் பார்க்கச் சுகந்தமாய் மணக்கிறது.

திரைக்கதைக்கான இலக்கணம்!

ஒரு படம் தொடங்கிய முதல் பத்து – இருபது நிமிடங்களில் மையப்பாத்திரங்கள் குறித்த தெளிவான விவரணை திரையில் இடம்பெற்றிருக்க வேண்டும். முதல் அரை மணி நேரத்தில் திரைக்கதையின் முடிச்சு தொடங்கியிருக்க வேண்டும்.

‘எல்லாமே சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது’ என்று நாம் நினைக்கும் பட்சத்தில், அடுத்த அரை மணி நேரத்தில் இன்னொரு திருப்பம் திரையில் வர வேண்டும்.

அதன்பின்னர், அந்தப் பிரச்சனையின் தீவிரம் அதிகமாகி உச்சத்தை எட்டும்போது இடைவேளை வரும்.

பிறகு, அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல், அதனைக் கடந்து செல்ல முடியாமல் பெரும்பாலான பாத்திரங்கள் அல்லாடும்.

ஒரு புள்ளியில் இன்னொரு திருப்பம் மூலமாக அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்.

அது கைவரப்பெறும்போது படம் முடிவடையும்.

மேற்சொன்ன அத்தனையும் ‘ஆண் பாவம்’ படத்தில் சொல்லிவைத்தாற்போல இருக்கும்.

உண்மையிலேயே, இதே நீளத்திற்குத்தான் அப்படம் உருவாக்கப்பட்டதா, எந்தக் காட்சியும் ‘கட்’ செய்யப்பட்டதா என்ற விவரத்தைப் பாண்டியராஜன் உள்ளிட்ட குழுவினர் சொன்னால்தான் உண்டு.

‘காக்கிச்சட்டை’ போலவே இதன் திரைக்கதை உருவாக்கத்தில் கே. பாக்யராஜின் சிஷ்யர்களான லிவிங்க்ஸ்டன் – ஜி.எம். குமார் இணை பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது. அது பற்றிய விவரங்களையும் நாம் அறிந்தாரில்லை.

இந்தப் படத்தின் கதை மிகச்சிறியது. அதேநேரத்தில் மிக நேர்த்தியானது.

இரண்டு சகோதரர்கள். அவர்களது தந்தை. அந்த வீட்டில் தந்தையைப் பெற்ற கிழவியும் இருக்கிறார்.

மூத்த சகோதரர் அருகிலுள்ள கிராமத்திற்குப் பெண் பார்க்கச் செல்கிறார். தவறுதலாக, அவர் இடம் மாறி இன்னொரு வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

ஏற்கனவே பெண் பார்க்கச் செல்ல வேண்டிய இடத்தில், ‘மாப்பிள்ளை வரவில்லையே’ என்று தகவல் சொல்லச் சில நாட்கள் ஆகிறது. அதற்குள், தான் பார்த்த பெண்ணுடன் மனதளவில் கல்யாணம் செய்த உணர்வினைப் பெற்றுவிடுகிறார் அந்த மூத்த சகோதரர்.

உண்மை அறிந்து, அவருக்காக முடிவு செய்யப்பட்ட பெண் தற்கொலை செய்ய முயல்கிறார். அவரைக் காப்பாற்றுகின்றனர் அக்கம்பக்கத்தினர். ஆனாலும், அவரது குரல் பறிபோய்விடுகிறது.

தனது தோழியைப் பெண் பார்க்க வேண்டியவர், தன் வீட்டுக்கு வந்ததை இன்னொரு பெண் அறிகிறார். ‘நீங்கள் என்னைக் கல்யாணம் செய்ய வேண்டாம். என் தோழியையே கல்யாணம் செய்துகொள்ளுங்கள்’ என்கிறார்.

அது, அந்த ஆடவரைக் கவலைக்குள்ளாக்குகிறது. இத்தனை விஷயங்களையும் அமைதியாகக் கவனித்துவரும் அவரது இளைய சகோதரர், அதற்கு என்ன தீர்வினைக் கண்டார் என்பதுவே இதன் கிளைமேக்ஸ்.

இந்தப் படத்தில் பாண்டியன், சீதா, ரேவதி, பாண்டியராஜன் ஆகியோரே முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.

வி.கே.ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், மீசை முருகேசன் உள்ளிட்டோர் இதில் குணசித்திர வேடங்களை ஏற்றிருந்தனர். ஜனகராஜ், உசிலைமணி சம்பந்தப்பட்ட காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தன.

பாடல்களும் பின்னணி இசையும் ‘கிளாசிக்’ தரத்தில் அமைந்திருந்தன. அதனை அமைத்தவர் இளையராஜா என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தன் காதலுக்கு ஒரு முடிவு சொல்லுமாறு ஒருநாள் கெடுவைத்துவிட்டுச் செல்லும் பாண்டியன், அடுத்தநாள் சீதாவைத் தேடி ஆற்றங்கரைக்கு வருவதாக ஒரு காட்சி உண்டு. அந்த காட்சிக்கோர்வைக்கான பின்னணி இசை இன்றும் இனிக்கும் சுவை கொண்டது.

ஈடு இணையில்லை!

ஒரு திரைப்பட உருவாக்கம் என்பது சம்பந்தப்பட்ட கலைஞர்களைத் தாண்டி காலத்தோடு இணைந்து மேற்கொள்ளப்படுவது. அதனால், ஒருமுறை நிகழ்ந்த ஜாலத்தை மீண்டும் அதேபோன்று நிகழ்த்துவதென்பது குதிரைக்கொம்பு.

பாண்டியராஜன் இயக்கிய பல படங்கள் வெற்றியைப் பெற்றாலும், அவற்றில் எதுவுமே ‘ஆண் பாவத்திற்கு’ இணையாக அமையவில்லை. அதற்கு, தனது பிற படங்கள் எதையும் இப்படத்தோடு ஒப்பிடத் தயாராக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

‘பட்ஜெட் ரொம்பவே குறைச்சல்’ என்று கவலைப்படும் படைப்பாளிகளில் பலர் ஊக்கம் பெற்று, தங்களது பணிகளைச் சிறப்புறச் செய்ய ஒரு தூண்டுகோலாக இருந்து வருகிறது ‘ஆண் பாவம்’.

இப்படத்தின் திரைக்கதையை மீண்டும் மீண்டும் படித்தால், முன் தயாரிப்பு பணிகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். இதே போன்ற ‘பேமிலி டிராமா’ வகைமையில்தான் அப்படைப்பு இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்தப் படத்தை மேம்போக்காகப் பார்த்தால், பெரிதாகக் கருத்துகள் சொல்லப்படாதது போன்று தோன்றும். ஆனால், குழந்தைகளின் காதல் விருப்பங்களுக்கு பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது இதில் பொதிந்திருக்கிறது.

ஜனகராஜ் சம்பந்தப்பட்ட எபிசோடு, புதிதாகத் தொழில் தொடங்குவோர்க்கான பால பாடமாக விளங்கும். மாற்றுத்திறனாளிகளை இணையராக ஏற்பதை இதன் கிளைமேக்ஸ் கொண்டிருக்கும்.

இந்தப் படத்தில் உள்ள பாத்திரங்களின் சாதி அடையாளங்கள் படத்தில் சொல்லப்பட்டிருக்காது. ஆனால், அந்த கோணத்தில் பார்த்தால் இதன் திரைக்கதையை ‘ரீபூட்’ செய்ய முடியும்.

இதே கதையை இன்றைய சூழலுக்குப் பொருத்தினால், புதிதாக ஒரு திரையனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு. இப்படிப் பல விதைகளைக் கொண்டிருக்கிறது ‘ஆண் பாவம்’.

அனைத்தையும் தாண்டி, ‘சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்’ என்பதற்ற்கான சீரிய உதாரணங்களில் ஒன்று இப்படம்.

இதனை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து தமக்குத் தேவையான பாடங்களைக் கைக்கொள்வோர் எந்த மொழியிலும் சிறப்பான திரைப்படங்களைத் தர முடியும்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

 

#விகே_ராமசாமி #VK_Ramasamy #ஆண்_பாவம் #Aan_Paavam #விமர்சனம் #Review #ரேவதி #Revathi #பாண்டியன் #Pandiyan #பாண்டியராஜன் #Pandiyarajan #சீதா #Seetha #ஜனகராஜ் #Janagaraj #பூர்ணம்_விஸ்வநாதன் #Poornam_viswanathan #கொல்லங்குடி_கருப்பாயி #Kollangudi_karupayi #இளையராஜா #Ilaiyaraaja

Comments (0)
Add Comment