பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில், டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன், கல்லூரிப் பணியாளர்கள் எனப் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை, தியாகராயர் நகர், ஆற்காடு சாலையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவில்லத்திலும் இதேபோல் மரியாதை செலுத்தினர். இதேபோல், எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் நடித்தவர்களும் அவரது தீவிர பற்றாளர்களுமான நடிகைகள் லதா, சச்சு உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கும், அவரது திருவுருவச் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.