வெங்கடாசலபதியின் உழைப்புக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசு!

எழுத்தாளர் இந்திரன் பாராட்டு

சாகித்ய அகாடமி விருது பெற உள்ள டாக்டர் ஆ. இரா. வெங்கடாசலபதியை நான் துடிப்பான 16 வயது மாணவராக அறிவேன். அவரை விட நான் 10 வயதுக்கு மேல் மூத்தவன். நான் அவரை முதன் முதலில் புலவர்.த.கோவேந்தன் மகன்கள் திருமணத்துக்காக மும்பையில் இருந்து வந்தபோது சந்தித்து நிறைய பேசிக்கொண்டோம்.

அப்போது நான் மும்பையில் எக்கனாமிக் டைம்ஸ் இதழில் ஓவியம் குறித்த எனது ஆங்கிலக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன்.

க.நா.சு, வெங்கட் சுவாமிநாதன் போன்றவர்களின் ஆங்கிலக் கட்டுரைகளின் மீது நிறைய விமர்சனம் கொண்டிருந்த சலபதி நான் ஆங்கிலத்தில் எழுதுவது குறித்து பெரிதும் பாராட்டினார்.

நாங்கள் இருவரும் புலவர் த.கோவேந்தன், பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு இருந்தோம்.

இருவருக்கும் தனித்தமிழ் ஆர்வமும், திராவிட அரசியல் பார்வையும், பாப்லோ நெருடா, பாரதி கவிதைகளில் ஈடுபாடும் இருந்ததால் விரைவில் நெருக்கமானோம்.

இந்தியன் வங்கி தலைமையகத்தில் நான் அதிகாரியாக இருந்தபோது பக்கத்தில் இருந்த மறைமலை அடிகள் நூலகத்தில் சலபதி நூலகராக இருந்தார். பெரும்பாலும் தினந்தோறும் சந்திப்போம். நான் கோடம்பாக்கத்திலும் அவர் கேகே நகரிலும் இருந்தோம். நினைத்தால் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்.

தமிழவன், ராஜ் கவுதமன், எம்எஸ்எஸ் பாண்டியன், தொ.பரமசிவன் என இருவரும் நிறைய விவாதித்து இருக்கிறோம்.

ஒரு முக்கிய இளைய சக்தியாக சுந்தர ராமசாமி சலபதியைக் கண்டெடுத்து இருந்தார். இன்று காலச்சுவடு குழுவில் பெரிதும் பங்களிப்பவராக சலபதி இருப்பது சு.ரா.வின் தீர்க்க தரிசனம் என்று தோன்றுகிறது.

காலச்சுவடு கண்ணனின் முறையான உழைப்பு, புத்தகத் தயாரிப்பு பற்றி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற சலபதியின் கறார் பார்வை ஆகியவை காலச்சுவடுக்கு உரம் ஊட்டி உள்ளன.

இளமையிலேயே கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி மீது கவர்ந்து இழுக்கப்பட்டு இருந்த சலபதி இன்று வ.உ.சி பற்றிய நூலுக்காகவே சாகித்திய அகடமி விருது பெறுவது அவரது உழைப்புக்கும், தேடலுக்கும் கிடைத்த பரிசு.

நானும் சலபதியும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டோமோ அதையெல்லாம் கவனம் சிதறாமல் சலபதி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

வாழ்க வளர்க சலபதி.

– எழுத்தாளர் இந்திரன்

Comments (0)
Add Comment