மிஸ் யூ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!

‘பாய்ஸ்’, ‘ஆய்த எழுத்து’ படங்களின் வழியே அறிமுகமானாலும் சித்தார்த்தைத் தமிழ் நடிகர் என்று முத்திரை குத்துவது கடினம். காரணம், தெலுங்கில் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்து, பின்னர் இந்தியில் தலைகாட்டி, அவ்வப்போது தமிழில் ஓரிரு படங்கள் நடித்து வந்ததுதான்.

‘அப்படியொரு நினைப்பு தயவுசெய்து இருக்க வேண்டாம்’ என்று கூறுவதற்குப் பதிலாக, ‘சித்தா’ படத்தைத் தயாரித்திருந்தார்.

அதையடுத்து, ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த்தும் தலைகாட்டியிருந்தார் என்று சொல்வதுதான் சரி. அந்தப் படத்தைக் கணக்கில் கொண்டால், அடுத்து அவர் நடிக்கும் படங்களைப் பார்ப்பதா, வேண்டாமா என்ற சிந்தனைக்குள் சிக்க வேண்டி வரும்.

அதற்கு இடம் தராத அளவுக்கு, தற்போது என். ராஜசேகரின் இயக்கத்தில் ‘மிஸ் யூ’வில் தோன்றியிருக்கிறார்.

இந்தப் படம் இப்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

‘மன்னர் வகையறா’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கியவர் ராஜசேகர்.

இரண்டுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என்பதால், ‘மிஸ் யூ’வும் பெயருக்குத் தகுந்தாற் போல் ரொமான்டிக் காமெடி’யாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இப்படம் அதனைப் பூர்த்தி செய்திருக்கிறதா?

பிடிக்காத காதல்!

‘மனசுக்குப் பிடிக்காதவங்களைக் காதலிக்க முடியுமா என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டது மிஸ் யூ’ எனப் பல யூடியூப் பேட்டிகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்படக்குழுவினர் சொல்லி வந்தனர்.

‘மௌனம் பேசியதே’ சூர்யா பாணியில் நாயகனோ, நாயகியோ ‘காதலே பிடிக்காது’ என்று இப்படத்தில் சொல்கிறார்களா அல்லது இருவரில் ஒருவர் காதலிப்பது போல நடிப்பதாக இக்கதை அமைந்திருக்கிறதா? இக்கேள்விகளோடு படம் பார்க்கச் சென்றால், தொடக்கத்திலேயே ஒரு திருப்பத்தைத் தருகிறது ‘மிஸ் யூ’ திரைக்கதை.

திரைப்பட இயக்குனர் ஆகும் முயற்சியில் இருப்பவர் வாசு (சித்தார்த்). ஒருமுறை இவர் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது. தலையில் அடிபட்டு அவர் பலத்த காயமடைகிறார். அதிலிருந்து மீள்கிறபோது, இரண்டு ஆண்டுகளாக நடந்த சம்பவங்கள் ஏதும் அவரது நினைவில் இல்லை.

அதே நேரத்தில் வாசுவின் நண்பர்கள் குழாம் அவரோடு நெருங்கிப் பழகி, அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொள்கிறது.

இந்த நிலையில், ஒருநாள் வாசு எழும்பூர் ரயில் நிலையம் செல்கிறார். சோகமே வடிவாக அமர்ந்திருக்கும் பாபியைச் (கருணாகரன்) சந்திக்கிறார். காதல் தோல்வியால் வருத்தமுற்றிருக்கும் அவரை மாற்றுகிறது வாசுவின் பேச்சு.

மிகச் சில மணி நேரங்களில் இருவருக்குள்ளும் நட்பு இறுக்கமாகிறது. ‘என்னோட பெங்களூருவுக்கு வாங்க’ என்று அவரை அழைத்துச் செல்கிறார் பாபி.

பெங்களூருவில் பாபியின் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னதாக, ஒரு பெண்ணைப் பார்க்கிறார் வாசு. அந்தப் பெண் அவரது குடியிருப்பில் தங்கியிருப்பதாக அறிகிறார்.

பிறகு, வாசு நடத்திவரும் காபிஷாப்பின் கணக்கு வழக்கு, வரிமான வரி தாக்கல் விஷயங்களை அப்பெண் கையாள்வதையும் காண்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் சுப்புலட்சுமி (ஆஷிகா ரங்கநாத்).

முதல் பார்வையிலேயே சுப்புலட்சுமியின் மீது காதல் கொண்டதாக உணர்கிறார் வாசு. சில நாட்களில் அதனை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், அவரோ அதனை ஏற்க மறுத்து விடுகிறார்.

அதனை அறியும் பாபி, ‘பேசாம உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி அந்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க’ என்று வாசுவிடம் சொல்கிறார். ‘அதுதான் சரி’ என்று அவரும் சென்னைக்குக் கிளம்புகிறார்.

தனது தாயிடம் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டுகிறார் வாசு. அதனைக் கண்டதும் அவர் பதற்றமடைகிறார்.

உடனடியாக, வாசுவின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைக்கிறார். அவர்களும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.

யார் இந்த சுப்புலட்சுமி? அவரை வாசுவுக்கு முன்னரே தெரியுமா? இருவருக்கும் அறிமுகம் உண்டு என்றால், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுப்புலட்சுமி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்?

இந்தக் கேள்விகளோடு சேர்ந்து, ‘வாசுவுக்கு அந்த இரண்டாண்டு கால நினைவுகள் திரும்பியதா’ என்பதையும் சொல்கிறது ‘மிஸ் யூ’வின் மீதி.

மேற்சொன்னதையைப் படித்தபிறகு, இதில் ‘பிடிக்காத காதல் எங்கு வருகிறது’ என்று தேடினால் படத்தின் மொத்தக் கதையும் தெரிந்துவிடும்.

உண்மையைச் சொன்னால், ‘இது ஒரு சுவாரஸ்யமான கதை’. ‘கதைக்குள் கதை சொல்வது போல’ அதற்கேற்றவாறு இதில் காட்சிகளை அமைத்திருப்பது சிறப்பு. அதனால், இதில் பிளாஷ்பேக் காட்சிகள் அதிகம்.

‘கலர்ஃபுல்’ காட்சிகள்!

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சித்தார்த்துக்கு ஆர்வம் அதிகம். அது நல்ல விஷயம்.

ஆனால், ‘கமர்ஷியல் படங்களில் நடிப்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது’ என்பது போன்ற முகபாவனைகளோடு அவர் அது மாதிரியான கதைகளில் நடிக்கும்போதுதான் ரசிகர்களான நாம் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.

இதில் காதல், நகைச்சுவை காட்சிகளில் அந்த ‘பீலிங்’ வராமல் பார்த்துக்கொண்ட சித்தார்த், சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளில் அந்த எண்ணத்தைப் பதித்துக்கொண்டவர் போலத் திரையில் ‘துருத்தலாக’ தெரிகிறார்.

நாயகி ஆஷிகா ரங்கநாத் இரு வேறுவிதமான குணாதிசயங்களைக் காட்டும் வகையில் இதில் தலைகாட்டியிருக்கிறார். அவரது நடிப்புக்குச் சான்று கூறும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது.

கருணாகரன் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தைத் திரைக்கதையில் பெறுகிறார்.

’பார் ஏன் மூடப் போறீங்க, நல்லாத்தானே ரன் ஆகுது’ என்பது போன்று படம் முழுக்க அவர் அடிக்கும் ஜோக்குகள் புன்னகைக்க வைக்கின்றன.

சித்தார்த்தின் நட்பு வட்டத்தில் இருப்பவர்களாக மாறன், பால சரவணன், சாஸ்திகா வந்து போயிருக்கின்றனர்.

பாரதிராஜாவின் பழைய படப் பாடல்களில் வரும் தேவதைகள் போன்று இக்கதையில் அவர்கள் காமெடிக்காக வந்து போயிருக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து ஜெயபிரகாஷ், அனுபமா, பொன்வண்ணன், ரமா, சரத் லோகித்சவா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

காட்சிகளில் அழகு ததும்ப வேண்டும் என்ற நோக்கோடு மொத்தப் படத்தையும் ஒரு விளம்பரப் படம் போன்று தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ்.

சிவசங்கரின் கலை வடிவமைப்பு, ஒவ்வொரு பிரேமையும் ‘சினிமாத்தனதோடு’ அழகாகக் காட்ட உதவியிருக்கிறது.

தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பானது ‘கதைக்குள் கதை’ கருத்தாக்கத்தின்போது அபாரமாகப் பங்களித்திருக்கிறது. திரையில் கதை முடிச்சுகள் மெதுவாக விடுபடுவதற்கு ஏற்ப, காட்சிகளைச் சரமாகக் கோர்த்திருக்கிறது.

தினேஷ் காசியின் சண்டை வடிவமைப்பு, இப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்டோடு ஒட்டாமல் ஒரு தெலுங்கு படம் பார்த்த தாக்கத்தைத் தருகிறது.

வசனத்தைப் பொறுத்தவரை, அசோக் திரைக்களத்தில் ஓடியாடியிருக்கிறார். காமெடி ஒன்லைனர்கள் ஆனாலும் சரி, ரொமான்ஸை வழியவிடுவதானாலும் சரி, மிகச்சில வார்த்தைகளில் அந்தக் காட்சியின் தன்மையை உணர்த்திவிடுகிறார்.

ஒரு பாடல்காட்சியில் ஆடி முடித்ததும் ‘கால் வலிக்குது’ என்று சித்தார்த் சொல்ல, ‘ரொம்பநாள் கழிச்சு ஆடுனா அப்படித்தான்’ என்று கருணாகரன் சொல்லியிருப்பது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

இது போன்ற ‘ஒன்லைனர்களே’ இப்படத்தின் பலம்.

இவர்கள் போக ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலிக்கலவை, டிஐ, விஎஃப்எக்ஸ் உட்பட அனைத்திலும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிரத்தை தெரிகிறது.

அவற்றின் உச்சமாகத் தன்னுழைப்பைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். பாடல்கள் ஓகே ரகம். அவற்றில் தொடக்கப் பாடலையும் போதையிசைப் பாடலையும் தாராளமாக ‘டெலிட்’ செய்துவிடலாம். காரணம், அந்த இடங்கள் திரைக்கதை வேகத்தை மட்டுப்படுத்துகின்றன.

பின்னணி இசையைப் பொறுத்தவரை ஜிப்ரான் ‘சிக்சர்’ அடித்திருக்கிறார். காட்சிகளின் தன்மையையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அடிக்கோடிடும் விதமான இசையைத் தந்திருக்கிறார். பேருந்தில் சித்தார்த்தும் ஆஷிகாவும் சேர்ந்து பயணிக்கிற காட்சி அதிலொன்று.

‘கலர்புல்’ காட்சிகளோடு தனது படம் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் என்.ராஜசேகர். அதற்கேற்றவாறு காட்சி நகர்வு, வசனங்கள், நடிப்புக் கலைஞர்களைக் கையாளுதல் என்று பலவற்றைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஆனாலும், எந்த இடத்தில் நாயகனையும் நாயகியையும் ஒன்று சேர்ப்பது என்பதில் தடுமாறியிருக்கிறார். அதுவே இப்படத்தின் முக்கியப் பலவீனம்.

அனைத்தையும் தாண்டி, ’படம் பார்க்கிறபோதே ஏதோ ஒரு விஷயம் மிஸ் ஆகியிருப்பதாக’ தோன்றுகிறது. சித்தார்த்தின் நண்பர்களாக வருபவர்கள், உறவினர்களாக வருபவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் போதுமான அளவுக்கு இல்லை என்பது அதற்கொரு காரணம்.

சில நேரங்களில் காட்சிகளின் நீளத்தையும் கதாபாத்திரங்களுக்கான இடத்தையும் அதிகப்படுத்துவது திரையோடு நம்மை ஒன்ற வைக்கும். அது நிகழ்வதில் குறைகள் தென்படுவதைக் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

ரொமான்ஸா, காமெடியா?

முதல் படமான ‘மன்னர் வகையறா’விலும், இரண்டாவதாக இயக்கிய ‘களத்தில் சந்திப்போம்’ படத்திலும் ரொமான்ஸையும் காமெடியையும் சரியான விகிதத்தில் தந்தார் ராஜசேகர். அவ்விரண்டையும் ஒன்றிணைப்பதிலும் தன் வித்தையைக் காட்டியிருந்தார்.

‘மிஸ் யூ’வில் சித்தார்த், ஆஷிகா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் தவிர்த்து இதர காட்சிகளில் ரொமான்ஸ் ஒரு திக்கிலும், காமெடியும் இன்னொரு திக்கிலும் பயணிக்கிறது. அவற்றைத் திரையில் கலந்து தந்த விகிதமும் கனகச்சிதமாக அமையவில்லை.

அது மட்டுமல்லாமல் சித்தார்த்தும் ஆஷிகாவும் எத்தனை ஆண்டு காலம் பிரிந்திருந்தார்கள்,

சித்தார்த்துக்கு விபத்து நடந்தது எப்போது என்பது உட்படப் பல லாஜிக் சார்ந்த கேள்விகளுக்கும் சரிவரப் பதில் தரப்படவில்லை.

இது போன்ற விஷயங்கள் ‘மிஸ் யூ’வை நல்லதொரு முயற்சி என்ற எல்லையோடு நிறுத்தி வைக்கின்றன. அதேநேரத்தில், சித்தார்த்தின் சமீபகாலப் படங்களில் ஒன்றான ‘டக்கர்’ தந்த அனுபவத்தைக் காட்டிலும் ’மிஸ் யூ’ சிறப்பானது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

‘மேற்சொன்ன குறைகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை’ என்பவர்களுக்கு, ‘மிஸ் யூ’ ஆபாசம், வன்முறைக் காட்சிகள் அற்ற நல்லதொரு படம் எனும் அபிப்ராயத்தைத் தரும்.

ஜிப்ரானின் பாடல்கள், அவ்வப்போது சிரிக்க வைக்கும் நகைச்சுவை, நாயகன் நாயகியின் ரசிக்கும்படியான காதல் காட்சிகள் ஆகியன அதற்கேற்றவாறு இப்படத்தில் இருக்கின்றன..

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment