வாசிப்பின் ருசி:
ஒரு கவிதைக்குள் நுழைவது எப்படி? அதன் முதல் சொல்வழியாகவா அல்லது முதல் வரியின் வழியாகவா? உண்மையில் நீர்நிலைகளுக்கு எல்லாப் பக்கமும் நுழைவாயில் இருப்பது போலவே கவிதையும் இருக்கிறது.
நீரில் பிரவேசிக்கிற மனிதன் முன்பின்னை இழந்துவிடுகிறான். இடவலம் ஒன்று போலாகவிட்டதை உணருகிறான்.
கவிதையில் பிரவேசிக்கும் ஒருவன் கவிதையிலிருந்து அனுபவத்தைத் திரட்டிப் போவது ஒருவகை. இன்னொரு வகை, எதையும் கவிதையிலிருந்து எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால், நீரோடு கொள்ளும் உறவைப் போல நனைந்தும் நனையாமலும் உறவு கொள்வதும் கவிதை வாசிப்பே.
கவிதைக்குள் நுழையும் ஒருவன் கவிதையின் வழியே சில சித்திரங்களை, சில குரல்களை, சில அனுபவங்களை, சில புதிர்களை, சில புரியாத விஷயங்களை அறிந்து கொள்கிறான்.
சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களைப் போல வேகமாக முடிவு வரை நோக்கிச் சறுக்கிப் போகிறான்.
உண்மையில் முதல் வரியும் முடிவு வரியும் மாயக்கதவுகள். கவிதையின் கடைசிவரி வழியாக வாசிப்பிலிருந்து வெளியேறி விடுகிறோம். ஆனால் கவிதையிலிருந்து வெளியேற முடியாது.
– எஸ்.ராமகிருஷ்ணன்