ஒரு முறை ஃப்ளேவியன் ரெனய்வோ எனும் மதகஸ்கர் நாட்டுக் கவிஞன் ஒருவனின் காதல் கவிதை ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்தேன்.
அதில் ”காதலியே, நீ என்னைக் கலபாஷ் பழத்தைப்போல காதலிப்பாயாக“ எனும் ஒரு வரி இருந்தது. அறிஞர்களைக் கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. 1982-ல் கூகுள் கிடையாது.
அதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மொழிபெயர்க்கக்கூடாது என்று பல நூல்நிலைய படிகள் ஏறி இறங்கினேன்.
ஒரு கலைக்களஞ்சியத்தில் விளக்கம் கிடைத்தது. அது நம்மூர் சுரைக்காயைப் போன்ற மதகஸ்கர் நாட்டின் பழம் என்று கண்டுபிடித்தேன். இதைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
இதன் பிறகு காதலி ஏன் கலபாஷ் பழத்தைப் போலக் காதலிக்கச் சொல்கிறாள் என்று மேலும் தேடியபோதுதான் தெரிய வந்தது “சாப்பிடும்போது சுவையாக இருந்து பிறகு ஒரு இசைக் கருவியாக மாறிவிடுகிற கலபாஷ் பழத்தைப் போல காதலிப்பாயாக” என்ற அர்த்தத்தில் காதலி அதைச் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டேன்.
முதலில் சாப்பிட சுவையாக இருந்து சாப்பிட்ட பின்னர் ஒரு இசைக்கருவியாக மாறி பயன்படுகிறது கலபாஷ்.
காதலன் மகிழ்ச்சிக்காக மட்டும் இல்லாமல் பயன்படக் கூடியவனாகவும் இருக்க வேண்டும் என்கிற கருத்து எனக்கு சிரிப்பை வரவழைத்தது.
இந்த கவிதையை எனது ”அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” நூலில் படித்து ரசியுங்கள். நூல் வேண்டுவோர் 9840738224 எனும் எண்ணுக்கு அழைக்கலாம்.
– விமர்சகர் இந்திரன்