கவிஞர் தாமரைபாரதியின் இங்குலிகம் தெறுகலம் இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா, நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தெறுகலம் (கார்த்திகைச் சித்தர் பாடல்கள்) நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன்.
இந்நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்விலும் பேச அழைத்தார் பாரதி. அவரிடம் ‘நோ’ சொல்ல தயக்கம். வருகிறேன் என்றேன். இங்குலிகம், தெறுகலம் என ஹெவியாக எழுதுகிறார். என்ன பேசுவது?
கரிகாலன் குறித்து ஷேக்ஸ்பியர் அன்றே சொல்லியிருக்கிறார், ‘Jack of all trades master of none!’ என்று. உலக இலக்கியங்களைப் படித்த தாமரை பாரதிக்கு இந்த வரி ஏனோ கண்ணில் படாமல் போயிற்று. பரவாயில்லை. மனிதர்கள் வாய்ப்புகளோடு பிறக்கிறார்கள்.
ஆனால் வெகுசிலரே அதைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு விதை தான் விதை என்பதை, மரமாகி, பூத்து, காய்த்து, பழுத்து, பிறகுதான், அது தான் ஒரு விதை! என்பதைக் கண்டுபிடிக்கிறது. மனிதர்களும் விதைபோலத்தான்.
பிறக்கும் போது யாரும் ஆன்மாவோடு பிறப்பதில்லை. பெற்றோர்கள் வெறும் உடலைத்தான் கொடுக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதரும் தானே தாயாகி தன்னைத்தானே பெற்றுக் கொள்ள வேண்டும். இதைதான் ‘புதிதாய் பிறந்தோம்’ என்கிறான் பாரதி.
தாமரை பாரதி தன் கவிதைகள் வழியாகத் தன்னைப் பிரசவித்துக் கொள்கிறார்.
காதல், காமம், ஏக்கம், பிரிவு, இப்படி யதார்த்தங்களுக்கு உள்ளிருந்து இங்குலிகம் எழுதுகிறார். பிறகு இந்த யதார்த்தத்திலிருந்து விலகி, பற்றற்ற நிலையில், இதே காதலை, காமத்தை, பிரிவை, மரணத்தை வேறொரு பரிணாமத்தில் பாடுகிறார்.
இவ்விரு தொகுப்புகளிலும் இரண்டு தாமரை பாரதியைக் காண்கிறேன்.
இவரிடம் இரண்டு ஆற்றல்கள் தென்படுகின்றன. ஒன்று, மேல் நோக்கிய ஆற்றல். அது பறவையின் சிறகுபோல் இருக்கிறது. இரண்டு, கீழ் நோக்கிய ஆற்றல். அது மரத்தின் வேர் போல் செயல்படுகிறது. காமம் கீழ் நோக்கிய ஆற்றல். வேர்கள் கீழ் நோக்கி செயல்படுவது.
மரம் மேல் நோக்கி உயரவேண்டும் என்ற விழைவில்தான். இங்குலிகமும் தெறுகலமும் காமத்தை ஆன்மாவின் விழிப்பு நிலைக்கு உயர்த்த முயற்சிக்கின்றன.
காமத்திலிருக்கும்போது இருவர் ஒன்றாவது போலத் தோன்றுவது வெறும் மயக்கம். திடீரெனப் பார்த்தால் பரந்த அளவிலான ஒரு பிரிவு உருவாகிறது.
அதனால்தான் ஒவ்வொரு பாலினச் செயலுக்குப்பின்னும், ஒருவித ஏமாற்றமும், ஒருவித மனச்சோர்வும் ஏற்படுகிறது.
அன்புக்குதான் பாலுறவை ஆன்மீக உயரத்துக்கு அழைத்துச் செல்லும் வலிமை இருக்கிறது . அன்பு முயங்கும்போது காலம், ஈகோ, இரண்டும் அழிந்து போகிறது.
இந்த நிலையை அடையும்போது, செக்ஸ் உறுமாறி, காமத்தைப்போல வேறொன்று தோன்றுகிறது. இப்போது இருப்பது காமம் இல்லை. இது அன்பின் நிழல். காதலர்களை இணைக்கும் பாலம்.
இத்தகைய தத்துவ சாயலோடு இருக்கின்றன தாமரை பாரதியின் கவிதைகள். அதை நெருங்குவதும் விலகுவதும் சற்றே சிரமம்.
இந்த சிரமத்தைதான் கவிதை வாசிப்பு என்கிறோம். வாசிப்பின் வலியே நாம் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது. தாமரை பாரதியின் கவிதைத் தேட்டம் வியப்பில் ஆழ்த்துகிறது.