வயநாட்டில் பிரியங்கா இமாலய வெற்றி!

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். தங்கள் குடும்பத் தொகுதியான ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்.

இதனால் வயநாடு தொகுதிக்குக் கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து இடதுசாரி முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி நிறுத்தப்பட்டார். நவ்யா என்ற பெண் வேட்பாளரை களத்தில் இறக்கியது பா.ஜ.க.

வாக்குப்பதிவன்று, வாக்களிக்க பொதுமக்கள், பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால், இந்த தேர்தலில் 64 .72 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. இது, கடந்த தேர்தலை விட 8.23 சதவீதம் குறைவாகும்.

வயநாட்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே பிரியங்கா முன்னிலையில் இருந்தார். ஒவ்வொரு சுற்றிலும், வாக்கு வித்தியாசம் அதிகரித்து கொண்டே சென்றது.

மாலையில் ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்தது. சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வென்றுள்ளார்.

இவருக்கு சுமார்  6 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன.

சிபிஐ வேட்பாளர் சத்யன் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு சுமார் 2 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. மூன்றாம் இடம் பிடித்த பாஜக வேட்பாளர் நவ்யா, ஒரு லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.

வயநாட்டில் கடந்தத் தேர்தலில் ராகுல் காந்தி, 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார். அந்த வித்தியாசத்தை, அவரது தங்கை முறியடித்துள்ளார்.

போட்டியிட்ட முதல் தேர்தலிலே, பிரியங்கா, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, சாதனை படைத்துள்ளார்.

 – பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment