நகலன் – சிறுகதை!

“புரிஞ்சுக்க தியா, இன்னைக்கு ஈவினிங் என்னால வர முடியாது. அவள்ட்ட சொல்லிடு, தவிர்க்க முடியாம வர முடியலன்னு” பேசிக் கொண்டிருக்கும்போதே தொடர்பு அறுந்துவிட்டிருந்தது. ஆதிக்குப் புரிந்தது.

“பிடிவாதக்காரி, நினைத்தது உடனே நடக்க வேண்டும்” நினைத்துக் கொண்டான்.

ஆதி ஒரு அறிவியல் ஆய்வாளன். இரவு, பகல் எதுவும் தெரியாமல் ஆய்வில் இருப்பவன். தியாவின் கோபம் புரிந்தே இருந்தது. இன்று அவனுக்கு வாழ்வில் மிக முக்கியமான நாள்.

ஆய்வு முடிவுகளுக்கான பிரசன்டேஷனை இன்று வழங்க வேண்டும். எந்த ஒரு நாளுக்காக வாழ்நாளெல்லாம் காத்திருந்தானோ, அதை கிட்டத்தட்ட எட்டி இருக்கிறான்.

யோசித்துக் கொண்டிருக்கும் போதே

“யாரு போன்ல? தியா வா?” ஆதியின் தோள் தொட்டுக் கேட்டான் யாழ்.

யாழ் சக ஆய்வாளன். இருவருக்கும் குவாண்டம் பிஸிக்ஸில் அதிக ஆர்வம். இந்தத் திட்டத்தில் இருவரும் ஒன்றாகப் பணி புரிகின்றனர்.

“ஆமா”

“போய்ப் பாத்துட்டு வா ஆதி. எத்தனை நாளாச்சு. பாவம் அவ, அங்க அழுதுட்டு இருப்பா” யாழ் சொல்ல,

“நீயுமா புரியாம பேசுற? அவள் இன்னைக்கு ஈவினிங் ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிடுறா. ஃபியான்சியோட வர்றேன்னு சொல்லிட்டாளாம்”

“இன்னைக்கு ஈவ்னிங்கா? அப்பா, சாமி ஆளவிடு. நீ தொலைஞ்ச”
என சிரித்துக்கொண்டே யாழ் சொல்ல,

“பாத்துக்கலாம் பிரசெண்டேஷன் முடிச்சிட்டு, இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் லீவு விட்டுட்டு அவளோடு இருக்கணும்டா. எனக்குன்னு இருக்கிறவ அவ மட்டும்தான். நானும் ரொம்ப மிஸ் பண்றேன்.”

“அத அவகிட்ட சொல்லேன்டா” யாழ் சொல்ல, “சர்ப்ரைஸா இருக்கட்டும்.”  ஆதி, தியாவின் நினைவில் சிறிது வருத்தமுற்றாலும் ஆய்வின் வெற்றி அவனை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்திருந்தது.

ஈவினிங் நிகழ்விற்காக தயார் செய்து கொண்டிருக்க, இரு முறை தியாவின் மொபைலுக்கு அழைத்துப் பார்த்தான் ஆதி. கால் வலிந்து கட் செய்யப்படுவது புரிந்தது.

“கோவமாக இருக்கிறாள்” நினைத்துக் கொண்டான்.

ஏதாவது செய்து அவளைச் சமாதானம் செய்ய வேண்டும். ஆதி மனதில் மின்னல் போல் ஒன்று தோன்றி மறைந்தது.

ஆய்வறையைத் திறந்தான். பெரிய பெரிய எந்திரங்கள். ஒளியை முடுக்கி, அதன் அலை, துகள் என இரு நிலையை ஆய்வு செய்து ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றத் தேவையான கருவிகளால் நிறைந்திருந்தது அந்த ஆய்வுக்கூடம்.

இரு நிலையை ஆய்வு செய்யும் இயந்திரங்கள், மனிதப் பிரதியெடுக்கும் இயந்திரங்கள், அலை துகள் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றத் தேவையான இயந்திரங்களால் நிரம்பியிருந்தது அந்த ஆய்வுக்கூடம்

மாலை நிகழ்வு துவங்கியது.

ஆதியின் ஆய்வு நிறுவனம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கியமான விஞ்ஞானிகளை அழைத்திருந்தது.

சரியாக 5.00 மணிக்குக் கூட்டம் தொடங்க, ஆதி மெது மெதுவாய் தன் ஆய்வினை விவரிக்கத் தொடங்கினான்.

“குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டையும் இணைத்து ஒரு மனிதனை நம்மால் உருவாக்க முடியும். ஆம், படைப்புக் கடவுளின் வேலையும் இனி நாம பார்க்கப் போகிறோம்” என்று பேசத் தொடங்கினான்.

“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”

“குளோனிங் மாதிரியா?” கூட்டத்தில் இருந்து குரல் ஒன்று கேட்க, “இல்லை, குளோனிங் என்பது இன்னொரு உயிராக உருவாகிறது. தவிர நினைத்த உடனே ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியாது ஆனால் டெலிபோர்டிங் மூலமாக கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்க வைக்க முடியும்”

“ஒளிக்காட்சிப் போலவா?”  இன்னொரு குரல் கேட்க,

“அதுதான் இல்லை. தொட்டு உணரக்கூடிய பருப்பொருளாகவே இருக்கும்.”

“அது எப்படி சாத்தியம்?”

ஐயத்துடன் இன்னொருவர் கேட்க, ஆதி விவரிக்க தொடங்கினான்.

“உலகின் பொருட்கள் அனைத்தும் துகள்களால் ஆனது தெரிந்ததுதான். ஆனால், ஒளி அலையாகவும் துகளாகவும் இருக்கிறது. துகளாக இருப்பது அலையாக்க மாறுகிறது. அலையாக இருப்பது துகளாக மாறுகிறது.

எக்கணம் அலையிலிருந்து துகளாகவும், துகளில் இருந்து அலையாகவும் மாறுகிறது என்பது நமக்குத் தெரியாது.

என்னுடைய குவாண்டம் எந்திரம் துகளை அலையாகவும், அலையை துகளாகவும் மாற்றும்.

அரங்கம் சிறு சலனமின்றி ஆதியையே பார்த்துக் கொண்டிருக்க, குவாண்டம் இயந்திரத்தை செயல்படுத்த தொடங்கினான் ஆதி.

சிறு மங்களான ஒளியில் அரங்கம் இருக்க, இயந்திரம் இயங்கத் தொடங்கியது.

சிறு பதட்டத்துடன் ஆதி இயந்திரத்தையும் வாட்சையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

மெலிதான ஸ்ஸ்ஸ் என்ற ஒலியுடன் ஒளிக்கற்றைகள் ஓரிடத்தில் குவியத் தொடங்கின.

மெல்ல மெல்ல ஆதியின் அருகில் அதே போன்றதொரு உருவம் அருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தோன்றுவதை காணுற்ற கூட்டம் சுவாசிக்க மறந்தது.

ஆதி மட்டும் சிறு டென்ஷனோடு பார்த்துக் கொண்டிருந்தான். முழு உருவம் ஒன்று அங்கு உருவாகிவிட்டிருந்தது. பார்க்க அச்சு அசலாக ஆதி போலவே…

கூட்டம் விடாமல் கைத்தட்ட ஆதி முகத்தில் சற்று நிம்மதி தெரிந்தது.

தொடர்ந்து அது சார்ந்த கேள்விகளும் பதில்களும் தொடர, எல்லாவற்றையும் முடித்துவிட்டு பெருமை மேலிட ஆதி நின்று கொண்டிருந்தான்.

நிறுவனத்தின் தலைவர் மிஸ்டர் பால் ஆதியை கட்டியணைத்து வாழ்த்துச் சொல்லிவிட்டு மற்றவர்களைப் பார்க்கப் போய்விட ஆதி அரங்கத்தையே மெய்மறந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது வயது முதிர்ந்த தோற்றமுடைய ஒருவர் மெல்ல ஆதி அருகில் வந்து வாழ்த்துச் சொல்லிவிட்டு, உங்களிடம் பேச வேண்டும் என்றார்.

அவர் தன்னை அறிமுகம் செய்து கொள்ள அப்பொழுதுதான் ஆதி கவனித்தான் அடையாள அட்டையை. இயற்பியல் விஞ்ஞானி. அறிவியல் ஆய்வுகளில் ஒரு காலத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர்.

புன்முறுவலோடு அவரின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டு அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்லிய குரலில் அந்த முதிர்ந்த விஞ்ஞானி பேசத் தொடங்கினார்.

“நம்முடைய நகலெடுத்து அனுப்பும்போது அதுவும் நாம்தானா?”
அவர் கேட்க,  ஆதி தலையசைத்து,

“நிச்சயமாக…” என்றான்.

தொடர்ந்து அவர், இப்பொழுது நான் என்பது நான் இதுவரை வாழ்ந்த நினைவுகளின் தொகுப்பு. அப்படி இருக்கையில் என்னுடைய நகலின் நினைவுகளும் என்னிடத்தில் சேகாரமாகுமா?”

திணறித் திணறி தொடர்ந்து பேசத் தொடங்கினார்.

“ஆம், நிச்சயமாக” ஆதி பதிலளித்தான்.

“செயற்கை நுண்ணறிவோடு இணைத்துதான் இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறீர்கள், அப்படி இருக்கையில் நாம் சொல்வதை மட்டும்தான் அது செய்யுமா? அது தானாக திட்டங்களை மாற்றிக் கொள்ள முடியுமா?”

அவர் நிதானமாக கேட்க ஆதியால் மறுக்க முடியவில்லை.

“முடியும்” என்று சொல்லிவிட்டு குழப்பத்தோடு பிரசன்டேஷனில் இயந்திரம் செயல்படுத்தத் தொடங்கி தாமதமாக வந்த அவனின் நகல் உருவம் குறித்து சிந்தனை ஓடியது.

அவர் தொடர்ந்தார்…

“என்னுடைய நினைவுகளை எனக்குச் சேராமல் பார்த்துக் கொள்ளுமானால் அது எப்படி நானாக முடியும்?

எல்லாவற்றிற்கும் அறிவியல் விடை தரலாம் மானுடத்திற்கு அல்ல” சொல்லி தோளில் ஒருமுறை வாஞ்சையோடு தடவிவிட்டு அவர் மெல்ல வெளியே நடக்கத் தொடங்கினார்.

வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தவனின் மொபைலில் செய்தி வந்ததற்கான சமிக்ஞையாய் ஒளிர்ந்தது.

தியாவிடமிருந்து செய்தி, அனிச்சையாய் கை தொட,

நிறைய முத்தங்கள் அனுப்பி இருந்தாள்.

“நீ வர மாட்டேன்னு நினைத்தேன் ஆதி.

இவ்வளவு பிஸியிலேயும் எனக்காக நீ…

லவ் யூ டா…

பிரெண்ட்ஸ்லாம் எவ்வளவு பொறாமையா பார்த்தாளுங்க தெரியுமா?

எனக்கு பெருமையா இருக்கு ஆதி“

மீண்டும் நிறைய முத்தங்கள் அனுப்பி இருந்தாள்.

“இவ்ளோ ஆசையை மனசில வெச்சுக்கிட்டுதான் வர முடியாதுன்னு சொன்னியா?
ம்?
நான் உன் ரூம்லேருந்து வீட்டுக்கு வர லேட் ஆயிடுச்சு டா, அம்மாகிட்ட சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

நீ ஏன் திரும்ப எனக்கு கால் பண்ணல?

உடம்பெல்லாம் வலிக்குதுடா…
நீ ரொம்ப மோசம் போடா… உம்ம்மா….”

ஆதிக்கு தலை சுற்றத்தொடங்கியது….

– சுமித்ரா சத்தியமூர்த்தி.

Comments (0)
Add Comment