‘தாயின் விரல் நுனி’: உணர்த்தும் வரலாறு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் முன் முயற்சியோடு, வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘தாய்’ வார இதழில், தற்போதும் பிரபலமாக உள்ள பலர் பங்காற்றியிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பலர் எழுதி இருக்கிறார்கள்.

எண்பதுகளுக்குப் பிறகு வெளிவந்த வார இதழ்களில் ‘தாய்’க்கென்று தனியிடம் உண்டு. மூத்த எழுத்தாளர் கி.ரா உள்படப் பலர் எழுத்து மூலம் பங்கேற்ற அனுபவங்களை, நமது ‘தாய்’ இணைய இதழில் தொடராக, சுவாரஸ்யமான அனுபவமாக, தொடர்ந்து எழுதியவர் எழுத்தாளரும் இயக்குநருமான ராசி. அழகப்பன். 

‘தாய்’ இதழில் பணியாற்றிய அனுபவங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

‘தாயின் விரல் நுனி’ என்ற இந்த நூலுக்கு மிகச்சிறப்பானதொரு முன்னுரையைத் தந்திருப்பவர் முன்னாள் அரசவைக் கவிஞரான, பாடலாசிரியர் முத்துலிங்கம்.

 அந்த முன்னுரை உங்கள் பார்வைக்கு:

“தாயின் விரல் நுனி” என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், கவிஞரும், எழுத்தாளருமான ராசி அழகப்பன் அற்புதமான நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.

‘தாய்’ பத்திரிகையில் அவர் சேர்ந்தது முதல் அந்தப் பத்திரிகை வளர்ச்சிக்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, அதற்கு வலம்புரி ஜான் கொடுத்த ஒத்துழைப்பு, எழுத்து வேந்தர்களும், திரைக்கலைஞர்களும் “தாய்”க்கு துணைபுரிந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் விறுவிறுப்புக் குறையாமல் எழுதி ஒரு நாவலைப் படித்து மகிழ்ந்த உற்சாகத்தைத் தன் எழுத்துக்களில் காட்டி நம்மை இரசிக்க வைத்திருக்கிறார் ராசி அழகப்பன்.

வலம்புரி ஜான் பல கவிஞர்களை, எழுத்தாளர்களை, ‘தாய்’ பத்திரிகை மூலம் அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டவர் என்பது பலரும் அறிந்த செய்தி.

மறைந்த கவிஞர் இளந்தேவன் ‘தாய்’ பத்திரிகையில் எழுதியதைப் பார்த்து, அவர் ஆற்றலை உணர்ந்த காரணத்தால்தான், புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா தன் உதவியாளராக இளந்தேவனை வைத்துக்கொண்டார் என்பது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. அதையெல்லாம் ராசி அழகப்பன் இதில் குறிப்பிட்டிருக்கிறார்.

நான் ‘முரசொலி’ பத்திரிகையில் பணியாற்றியபோது, 1967ஆம் ஆண்டு ‘கல்கி’ பத்திரிகையில் என் கவிதையுடன் என் பேட்டி வெளிவந்திருந்தது.

அதைப் பார்த்த வலம்புரி ஜான் நம்மைப் போல் கிராமப் புறத்தில் இருந்து வந்த ஒருவர், கல்கி பத்திரிகையில் பேட்டி அளிக்கக்கூடிய அளவு வளர்ந்திருக்கிறாரே. அவரைப் பார்க்க வேண்டும் என்று என்னைப் பார்க்க முரசொலி அலுவலகம் வந்தார். அந்த நாள் எனக்கும் அவருக்குமான முதல் சந்திப்பு.

‘தாய்’ பத்திரிகையில் இன்னொரு முக்கியமான பகுதி ‘நம்புங்கள் நாராயணன்’ என்பது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பத்திரிகைகளில் சோதிடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரே பத்திரிகை அன்றைக்குத் ‘தாய்’தான்.

அதில் நாராயணன் என்பவர் எண்கணித சோதிடங்களை எழுதிக் கொண்டிருந்தார். எண்கணிதம் மட்டுமல்ல, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வாரத்திற்கு என்னென்ன பலன்கள் என்றும் எழுதிக் கொண்டிருந்தார்.

இவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மத்திய அரசுப் பணியில் இருந்தவர். இவருடைய தந்தையார் இரா.கிருஷ்ண ஐயர். இராமநாதபுரத்தில் ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக இருந்தவர்.

நமது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம், இவரிடம் மாணாக்கராகப் பயின்றவர். அப்துல் கலாம் தன்னுடைய நூல் ஒன்றில் இவரது எண்கணித சோதிட அறிவைப் பற்றிக் கூறிப் பாராட்டியிருக்கிறார் என்பது ராசி அழகப்பன் எழுதியதைப் படித்த பிறகுதான், என்னைப் போன்றவர்களுக்குத் தெரியவந்தது.

எண் கணிதம் என்பதும், சோதிடம் என்பதும் அறிவியல் கலைதான். அதில் ஒன்றும் ஐயமில்லை.

பிறந்த நேரம், காலம் சரியாக இருக்குமானால், சோதிடர் சொல்வது பலிக்கும். இல்லையென்றால் பலிக்காது. என்னுடைய வாழ்க்கையில் சோதிடர்கள் சொன்னது பலித்திருக்கிறது.

நான் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது, திரைப்பட வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் ஒரு மலையாள சோதிடரிடம் என்னை அழைத்துச் சென்றார்.

அவரிடத்தில் என் ஜாதகத்தைக் காட்டச் சொன்னார். அப்படி சொல்லிவிட்டு இவர் இப்போது எம்.எல்.சி.யாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

என் ஜாதகத்தைப் பார்த்த அவர், எத்தனை ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருக்கிறீர்கள் என்று கேட்டார். இரண்டு வருடம் 4 மாதம் ஆகிறது. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஐந்து ஆண்டுகள். எம்.எல்.சி. பதவி ஆறு ஆண்டுகள் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே இன்னும் கொஞ்சம் காலம்தான் இந்தப் பதவியில் இருப்பீர்கள் என்றார்.

உடனே, ஆர். கே. சண்முகம் பதறியபடி என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? இவர் ஆயுள் எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.

ஆயுளுக்குக்கெல்லாம் ஒன்றும் குறைவில்லை. நீண்டகாலம் வாழ்வார். ஆனால், அந்தப் பதவியில் தொடர்ந்து இருக்க மாட்டார் என்றார். எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டதுபோல் இருந்தது.

வர் சொன்னதுபோல் சில மாதங்களில் மேலவையை எம்.ஜி.ஆர். கலைத்துவிட்டார். அதன் பிறகுதான் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை வந்தது.

அதுபோல், என் மகள் மோகனவல்லி ஜாதகத்தை, கவிஞர் நெல்லை ஜெயந்தா வீட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்த சோதிடர் ஒருவரிடம் காட்டினேன்.

நெல்லை ஜெயந்தா தான் அவர் சோதிடக் கலையில் வல்லவர். நன்றாகப் பார்ப்பார் என்று, அவர்தான் மகள் ஜாதகத்துடன் வரச்சொன்னார்.

அந்தச் சோதிடர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, இந்தச் ஜாதகத்துக்குரியவர் அரசு அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அம்சங்கள் பொருந்தியவராக இருக்கிறார். அரசாங்க அலுவலகத்தில் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றப் போகிறார். இது நிச்சயம் நடக்கும் என்றார்.

எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால், அதற்கான எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. என் மகள் எம்.எஸ்.சி. பட்டதாரி அவ்வளவுதான் என்றேன். இரண்டாண்டுகளில் நான் சொன்னது நடக்கும் என்றார்.

அவர் சொன்னதுபோல் ஜெயலலிதா அம்மா ஆட்சிக் காலத்தில் அவர் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு வைகைச்செல்வனும் ஒரு காரணம். அதன் பிறகு எனக்குச் சோதிடத்தில் அழுத்தமான நம்பிக்கை ஏற்பட்டது.

அதன் பின் ராசி அழகப்பன் குறிப்பிட்ட அதே நம்புங்கள் நாராயணனை நானும் வசனகர்த்தா ஆரூர்தாசும் சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது பத்துக்குள் ஒரு எண்ணை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் என்று ஆரூர்தாசிடம் நாராயணன் சொன்னார். நீங்கள் நினைத்த எண் ஆறுதானே என்றார். ஆம் என்றார் ஆரூர்தாஸ்.

உடனே என்னைப் பார்த்து நீங்களும் ஒரு எண்ணை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்றார் ஆரூர்தாஸ். இல்லை.. வேண்டாம் அவர் மனச்சலனம் உடையவர் என்று மறுத்து விட்டார்.

‘தாய்’ பத்திரிகைதான் அவரை விளம்பரப்படுத்தியது. இதுவல்ல முக்கியம். தாய் பத்திரிகையில் நாராயணன் எழுதுவதற்கு முன் ‘அலை ஓசை’ பத்திகையில் 1980ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதியன்று, எம்.ஜி.ஆர். ஆட்சிக் கவிழும் என்று கணித்து எழுதியிருந்தார். அதுபோல் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது.

இதைப் பார்த்து வியப்படைந்த எம்.ஜி.ஆர்., நாராயணனைத் தோட்டத்திற்கு அழைத்து எப்படி நீங்கள் முன்கூட்டியே கணித்தீர்கள் என்று கேட்டாராம்.

அதற்கு நாராயணன், எண் கணித சோதிடத்தை மிகவும் ஆய்வு செய்து இன்று இந்தக் காரணத்தினால் ஆட்சிக் கவிழும் என்று கணித்து எழுதினேன் என்றாராம். இதை ராசி அழகப்பன் எழுதிய பிறகுதான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது.

அதற்குப் பிறகுதான் ‘தாய்’ வார இதழில் ‘நம்புங்கள் நாராயணனை’ என்ற தலைப்பில் வலம்புரி ஜான் அவரை எழுத வைத்தார்.

சோதிடம் தனை இகழ் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள் பகுத்தறிவாளர்கள். எல்லாச் சோதிடர்கள் சொல்வதும் பலிப்பதில்லை. அதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவை அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். அறிவிப்பதற்கு முன்னே, அதற்காக அவரைத் தயாரிக்க வலம்புரி ஜானிடம் தான் எம்.ஜி.ஆர். பொறுப்பைக் கொடுத்தார் என்பது இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் பலருக்குத் தெரியாது.

நான் சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஜெயலலிதாவை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எம்.ஜி.ஆர். ஆக்கினார்.

நான் மேலவை உறுப்பினராக ஆனபோது, எனக்கு வந்த முதல் வாழ்த்துத் தந்தியே ஜெயலலிதா அவர்களிடம் இருந்துதான் வந்தது. இது நடந்தது 1984 ஏப்ரல்.

‘தாய்’ வார இதழ்தான், நடிகர், நடிகையர், இயக்குநர்களை மக்கள் முன் கொண்டு சென்று நேரிடையாக அவர்களுக்கும், மக்களுக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

அதையெல்லாம் விரிவாகவும், வியப்பாகவும் ராசி அழகப்பன் இதில் எழுதியிருக்கிறார்.

நீங்களெல்லாம் படித்து இரசிக்க வேண்டும் என்பதற்காகப் பலவற்றை இதில் நான் குறிப்பிடவில்லை.

ராசி அழகப்பன் எங்கள் குடும்ப நண்பர். ஒருமுறை என் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் ‘ராசி அழகப்பா உன் கவிதையை வாசி அழகப்பா’ என்று அவரை அறிமுகப்படுத்தியது இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது.

அந்தக் கவியரங்கத்தில் பார்வையாளராகக் கவிஞர் வைரமுத்து வந்திருந்தார். அவரை மேடைக்கு அழைத்து, மேடையில் நான் அமர வைத்ததுகூட இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது.

ராசி அழகப்பன், கமல்ஹாசன் நடித்த பல படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் என்றும் கமல்ஹாசனுடைய ஆலோசகர்களில் அவரும் ஒருவர் என்பதும் கலைத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும்.

நான் ‘விருமாண்டி’ படத்திற்கு பாடல்கள் எழுதும்போது, நேரிடையாகவே அதைப் பார்த்தும் இருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால் ‘தாயின் விரல் நுனி’ என்ற இந்தப் புத்தகம் இலக்கியத்துறை, கலைத்துறை பற்றிய பல வரலாறுகளை நமக்கு உணர்த்துகிறது.

வாழ்க ராசி அழகப்பன்!

*****

கவிஞர் முத்துலிங்கம்
18/9, ஸ்டேட் பேங்க் காலணி முதல் தெரு, (சாலிக்கிராமம்),
விருகம்பாக்கம்,
சென்னை  – 600 092.

****
தொடர்புக்கு:
ராசி அழகப்பன் – 9176804412

வெளியீடு: பேஜஸ் பப்ளிகேஷன்
சோழிங்கநல்லூர், சென்னை – 119
பக்கங்கள்: 204
விலை : ரூ. 300/-

Comments (0)
Add Comment