‘சரியான சாப்பாட்டு ராமனா இருக்கானே’ என்பது போன்ற எதிர்மறையான விமர்சனங்கள், இன்றைய இணைய யுகத்தில் ‘foodie’ என்ற ஒற்றைவார்த்தையால் நேர்மறையாக மாறிவிட்டன.
விழுங்கும் ஒவ்வொரு உணவுத்துளியையும் ரசித்து உண்பது மட்டுமல்லாமல், வெவ்வேறு விதமான நாடுகள், கலாசாரம், சமையல் முறை சார்ந்த உணவுகளைத் தேடி வேட்கையுடன் திரிவது வாழ்வின் அடிப்படையான தகுதியாகிவிட்டது.
ஆனால், இந்தச் சூழலிலும் உணவின் அவசியம் குறித்தோ, அது கிடைக்காதபோது ஏற்படும் வலிகள் குறித்தோ சிந்தித்துப் பதிலைக் கண்டடைகிறோமா என்பது கேள்விக்குறியே.
உணவு தேவையா?
இடர்ப்பாடான தருணங்களில் நீரைக் குடித்தும், காற்றை சுவாசித்தும் உயிர் வாழ்ந்தவர்கள், ‘மனித வாழ்வில் உணவுக்கான இடம் என்ன’ என்பதை உணர்த்துகின்றனர்.
அதுவரை உணவின் மீது அலட்சியமும் அக்கறையின்மையும் காட்டியவர்கள் கூட, அத்தருணங்களுக்குப் பிறகு மாறிப்போவதே யதார்த்தம்.
அதனை முன்னுணரும் வகையிலேயே, ‘உண்ணா நோன்பு’ என்பது ஒரு மதச்சடங்காக உலகம் முழுக்கப் பின்பற்றப்படுகிறது.
அடிப்படைத் தேவைகளில் உடை, உறைவிடத்திற்கு முன்பான இடத்தைப் பிடிக்கிறது உணவு.
அதனால், உணவின்றி இயங்காது மனித வாழ்வு என்று தாராளமாகச் சொல்லலாம்.
அப்படிப்பட்ட உணவை எப்படி உண்ண வேண்டுமென்பதற்கான மாபெரும் உதாரணங்களாகச் சில பழமொழிகள் உள்ளன.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’, ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’, ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ ஆகியன அவற்றில் பிரதானமாக விளங்குகின்றன.
இவற்றை வாசித்தாலே, நாம் உணவுக்குத் தரும் முக்கியத்துவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்பது விளங்கும்.
’இருக்கு, ஆனா இல்ல’ என்பது போலப் பட்டும் படாமலும் எந்தவொரு விஷயத்தையும் கைக்கொள்வது, தத்துவார்த்தமாக வாழ்வதை விடவும் ஒருபடி மேலானது.
அப்படிப் பார்த்தால், துறவறம் பூண்டவர்களை விடவும் இல்லறத்தைப் பின்பற்றியவர்கள் கடுமையான கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக இருந்தார்கள் என்பதுவே உண்மை.
வீணாகும் உணவு!
பசி பட்டினியால் உணவிழந்து, அதனால் ஊட்டசத்தற்ற உடல்நிலையை அடைந்து வாடுபவர்கள் உலகம் முழுக்க இருக்கின்றனர்.
வறட்சியும் பருவநிலை மாற்றங்களும் போர்ச்சூழலும் பலரை இடப்பெயர்வுக்கு ஆட்படுத்துகின்றன. அதனால், உணவுக்குக் கையேந்தும் சூழலையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
இன்னொரு பக்கம், மிதமிஞ்சிய நுகர்வையும் தாண்டி உணவு வீணடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகில் 30% உணவு வீணாவதாகச் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றின் அளவு சுமார் 130 கோடி டன்னைத் தொடும். அப்படி வீணாவதைத் தவிர்க்க, சரியான அளவில் சமைப்பதும், அதற்கேற்ற உணவுப்பொருட்களை இருப்பில் வைப்பதும் மிக முக்கியமானது.
தட்டில் இடும் உணவில் ஒரு துளி கூட வீணாகாது எனும் நிலையை உறுதிப்படுத்துவதே அதற்கெல்லாம் முன்னோடிச் செயல்பாடாக அமையும்.
உணவை மிச்சம் வைப்பதோ அல்லது குப்பையில் கொட்டுவதோ மிகப்பெரிய அநீதி என்ற பாடத்தைப் பின்பற்றுவது மிக மிக அவசியமானது. அடுத்த தலைமுறைக்கு இதனைக் கண்டிப்பாகப் போதித்தாக வேண்டும்.
எது சிறந்தது?
இந்த உலகில் எது ஆகச்சிறந்த உணவு? இந்தக் கேள்விக்கு, உலகின் ஒவ்வொரு மூலையில் இருப்பவரும் தத்தமது உணவுகளையே பதிலாகச் சொல்வார்கள். அது இயல்பானது மட்டுமல்ல, சரியானதும் கூட.
ஏனென்றால், ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட காலநிலை இருக்கும்; அதற்கேற்பச் சில பயிர்கள் அதிகமாக விளையும் அல்லது சில உணவுப்பொருட்களே அங்கு கிடைக்கும்.
அவற்றை உண்பதே, அம்மக்களின் கலாசாரமாகவும் மாறியிருக்கும். அதனைப் பின்பற்றுவதன் மூலமாக, இயற்கையோடு இயைந்த வாழ்வினை மேற்கொள்ள முடியும்.
எஸ்கிமோக்கள் பின்பற்றும் உணவுப் பழக்கத்தை, மத்திய பூமிப்பகுதியில் வாழ்பவர்கள் கடைப்பிடிக்க இயலாது. அதுதான் நடைமுறைக்கும் உகந்தது.
போலவே, நாம் உண்ணும் உணவுதான் சிறந்தது என்று வாதிடவும் முடியாது.
ஏனென்றால், இந்தியாவின் தென்பகுதியில் பரவலாக உண்ணப்படும் இட்லி, தோசை, புட்டு, அப்பம் வகையறாக்களை வட இந்தியர்களே கூட வினோதமாகத்தான் நோக்குவார்கள்.
இன்றும், தமிழ்நாட்டு கிராமங்களில் வாழும் முதியோர் சிலர் சப்பாத்தி, பூரி, பரோட்டாவை தொடுவது கூட இல்லை.
மரபுவழி பின்பற்றும் உணவுப் பாடத்தில் இருந்து விலகக் கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது.
ஒரு நாட்டிலேயே இப்படிப் பல உணவு வேறுபாடுகள் இருக்கும் நிலையில் நாடு, இனம், கலாசாரம் சார்ந்து பல வேற்றுமைகள் இருப்பதை ஏற்கத்தான் வேண்டும்.
அதேநேரத்தில், புதிதாக ஒருவர் அந்த உணவை ருசிப்பதையோ, மனதுக்கு நெருக்கமானதாகப் பின்பற்றுவதையோ தவறென்றும் சொல்ல முடியாது.
அந்த இடத்தில், நாம் ருசித்தல் ரசனைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
உணவைப் போற்றுவோம்!
ஐநா சபையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. அந்த நாளானது, உலகம் முழுக்க ’உலக உணவு தினமாக’க் கொண்டாடப்படுகிறது.
வறுமை, பட்டினி குறித்த விழிப்புணர்வை உலகம் முழுக்கப் பரப்பும் நோக்கில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தினத்தையொட்டி, ‘நீரே வாழ்க்கை; நீரே உணவு; அதனை வீணாக்காதீர்கள்’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இதிலிருந்தே, இன்றைய வாழ்வில் உணவோடு சேர்த்து நீருக்கான முக்கியத்துவத்தையும் வலியுறுத்த வேண்டிய அவலம் அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒருகாலத்தில் குடிநீருக்காக அல்லோகலப்பட்ட வறட்சியான பகுதிகளிலும், இன்று பாட்டிலில் பேக் செய்யப்பட்ட நீர் விநியோகிக்கப்படுகிறது.
அது, இன்றைய தலைமுறையினரிடத்தில் ‘நீர் வீணாகுதல்’ குறித்த சிந்தனையை மழுங்கடித்துள்ளது.
உணவில் குறிப்பிட்ட அளவு நீர் கலந்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், உணவுக்கு முன்னும் பின்னும் இவ்வளவு நீரைப் பருக வேண்டும் என்ற வரையறையையும் பின்பற்றியவர்கள் நம் முன்னோர்.
காலப்போக்கில் நாம் கைக்கொண்ட அறிவியல் சித்தாந்தங்களால், உணவுக் கோட்பாடுகளால் அவற்றைப் பின்பற்றுவதில் சில விலகல்களைச் சந்தித்திருக்கலாம்.
ஆனால், இரண்டையுமே அலட்சியமாகக் கைக்கொள்வது ஆபத்தாகத்தான் முடியும்.
அரைகுறையான நம்பிக்கையுடன் உட்கொள்ளும் மருந்தே நஞ்சாக மாறலாம் எனும் எண்ணமுள்ள நிலத்தில், உணவைப் போற்றாமல் தவிர்ப்பது தீங்காக அமையும்.
சக உயிர்களுக்குப் போதுமான உணவு கிடைக்க வேண்டுமென்று எண்ணாமல் போவது பெருங்குற்றமாகக் கருதப்படும்.
ஆதலால், ஒவ்வொரு துளி உணவும் நமக்கும் பிறர்க்கும் பயனளிக்குமாறு வாழ்வோம்; பிறர் வாழவும் வகை செய்வோம்!
– உதய் பாடகலிங்கம்