புதுமை செய்கிறார் கபிலன்!

- எழுத்தாளர் இந்திரன்

திரைக் கவிஞர் கபிலன். இளமையிலேயே மிகவும் திறமையானவர். என் ஊரான பாண்டிச்சேரிக்காரர்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பை எனது யாளி பதிவு மூலம் மிகவும் ரசித்து வெளியிட்டேன்.

கமல்ஹாசன், வழக்கறிஞர் அருள்மொழி, கலைப்புலி தாணு, கவிஞர் அறிவுமதி என்று வெளியீட்டு விழா பிரமாண்டமாக அமைந்தது.

விழாவில் நான் பேசும்போது “ரயில்வே பிளாட்பாரத்தில் கிடக்கும் பார்சல்போலத்தான் நம் அனுபவங்கள். அவற்றின் மீது முகவரி எழுதும் வேலைதான் எழுத்தாளனின் பணி” என்று குறிப்பிட்டேன். அடுத்துப் பேசிய கமல் நடிகனுக்கும் இது பொருந்தும் என்று விளக்கி அபாரமாக பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.

கபிலன் தன் கவிதைகளை என் வீட்டுக்கு வந்து அவருக்கே உரிய தயக்கத்துடன் கொடுத்தார். அதற்கு கபிலன் கொடுத்த தலைப்பை மாற்றி அவரது ஒரு கவிதையின் தலைப்பான “தெரு ஓவியம்” என்பதைச் சூட்டினேன். கவிதைகளின் வைப்பு முறையை மாற்றி அமைத்தோம்.

“உயிர் எழுத்தில் மெய்யில்லை.
மெய்யெழுத்தில் உயிரில்லை.
ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை”

– எனும் அவர் கவிதையை முதல் கவிதையாக வைத்தேன். கவிதையைப் படித்தவுடன் பலரும் மிரண்டார்கள்.

நூலுக்கு நான் எழுதிய முன்னுரையைக் கையெழுத்தில் படித்துவிட்டு அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் “என்ன சார், சின்ன பசங்களை எல்லாம் ரொம்பத் தூக்கிப் பேசுறீங்க. இதற்கு கபிலன் தகுதியானவர் இல்லை” என்று சொன்னபோது இலக்கிய உலகின் குரூர முகத்தை தரிசித்தேன்.

அதைச் சொன்னவரும் ஒரு சின்னப் பையன்தான் என்பதை நினைத்து சிரித்துக் கொண்டேன். என் உடன்பிறந்த தம்பி பிரபல கலை இயக்குனர் மகியிடம் கொடுத்து நூலுக்குப் படங்கள் வரையச் செய்தேன்.

அதன் அட்டைப் படத்தைக் கபிலனும் நானும் வடிவமைத்த இரவு நினைவிலிருந்து அகலவில்லை. இன்று கபிலன் திரை உலகில் ஜொலிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் புதுமை செய்கிறார் கபிலன்.

Comments (0)
Add Comment