மூன்று வேடங்களில் நடிக்கத் தயங்கிய சிவாஜி!

‘நடிப்புச் சக்கரவர்த்தி’ சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று (அக்டோபர்-1). 1928 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அவர் பிறந்தார்.

அவர் குறித்த சில நினைவுக் குறிப்புகள் :

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த மொத்தப் படங்கள் – 288. இவற்றில் 120 படங்களுக்கு இசை அமைத்து சாதனை புரிந்துள்ளவர் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விசுவநாதன்.

தனியாக 95 படங்கள், சகா டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 25 படங்களில், ‘சிம்மக் குரலோன்’ படங்களில் தேவகானம் செய்தவர் எம்.எஸ்.வி.

ஒரு நேர்காணலில் சிவாஜி குறித்து, எம்.எஸ்.வி. பகிர்ந்து கொண்ட சில தகவல்கள்:

‘பாகப் பிரிவினை’ படத்தின் நூறாவது நாள் பல ஊர்களில் கொண்டாடப்பட்டது. அநேகமாக எல்லா விழாக்களுக்கும் சென்றிருக்கிறேன்.

ஒரு ஊரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஒரு விஐபி, “இந்தப் படத்தில் இடம் பெறும், “ஏன் பிறந்தாய் மகனே” பாடலை சிவாஜி பிரமாதமாக பாடி, நம்மை உருக வைத்து விட்டார்” எனக் குறிப்பிட்டார்.

சிவாஜிதான் அந்தப் பாடலை பாடியதாக அவர் நம்பிக் கொண்டிருந்தார். அப்படி நம்புகிற அளவுக்கு, சிவாஜியின் நடிப்பு பாடற்காட்சியோடு ஒன்றிப்போய் இருந்தது.

அவர், பிறவி நடிகர். எந்த பாத்திரமாக இருந்தாலும், அந்தப் பாத்திரமாகவே ஒன்றிப் போவார்.

சிவாஜிக்காக, டி.எம்.சவுந்தரராஜன் பாடி இருக்கிறார். ஜேசுதாஸ் பாடியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். ஆனால் யார் பாடினாலும், சிவாஜி பாடுகிற மாதிரியே இருக்கும். அதுதான் சிவாஜி.

அவர் நடித்த ‘சாந்தி’ படத்தின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். அந்தப் படத்தை இயக்கியவர் பீம்சிங். படத்துக்காக கண்ணதாசன் எழுதி, டி.எம்.எஸ். பாடி, நான் மிகவும் கஷ்டப்பட்டு இசை அமைத்த பாடல் “யார் அந்த நிலவு?” பாடலை கம்போஸ் செய்து முடித்து விட்டோம்.

ரிக்கார்டிங்கும் செய்தாகி விட்டது. படப்பிடிப்பு தளத்துக்கு வந்த சிவாஜி, பாடலைக் கேட்டு விட்டு, “இன்றைக்கு ஷூட்டிங் வேண்டாம். மூடு சரி இல்லை” எனச் சொல்லிவிட்டு, அரங்கத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாளும் வந்தார்.

பாடலை மீண்டும் மீண்டும் கேட்டார். கிளம்பிப் போய் விட்டார். எல்லோருக்கும் குழப்பம். டைரக்டர் பீம்சிங், மறுநாள் காலை சிவாஜியின் வீட்டுக்கே போய் ‘என்ன பிரச்சினை?’ என தயக்கத்தோடு கேட்டுள்ளார்.

அதற்கு சிவாஜி சொன்ன பதில் என்ன தெரியுமா?

“இசை அமைப்பாளர், கவிஞர், பாடகர் என அனைவரும் சேர்ந்து, பாடலை மிகவும் பிரமாதமாக உருவாக்கியுள்ளார்கள்.

அவர்களை மீறி படத்தில் நான் நிற்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்றுதான் மூன்று நாட்களாக யோசித்து கொண்டிருக்கிறேன்”. என்று சொல்லியிருக்கிறார்.

மூன்று பேரும் சேர்ந்து செதுக்கிய அற்புதமான பாடலை, வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்துள்ளது. மூன்று நாட்கள் மனதுக்குள் ஒத்திகை நடத்தி அந்தப் பாடலில் நடித்துக்கொடுத்தார்.

அந்தப் பாடலை, தியேட்டரில் இன்று பார்க்கும்போதும், அவரது அர்ப்பணிப்பைப் பார்க்கலாம். பாடலில் நான் இல்லை. கவிஞர் இல்லை. டி.எம்.எஸ். இல்லை. சிவாஜி மட்டுமே தனித்து இருப்பார்’.

அதிக படங்கள் இயக்கிய ஏ.சி. திருலோகச்சந்தர்:

சிவாஜியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் ஏ.சி. திருலோகச்சந்தர். என் தம்பி, தெய்வமகன், எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள், பாபு, பாரத விலாஸ் என மொத்தம் 20 படங்களில் சிவாஜியை இயக்கியவர்.

அவர் சொல்கிறார்: “நான் சிவாஜியுடன் இணைந்து எத்தனையோ படங்களில் பணியாற்றினாலும் ‘தெய்வமகன்’ படத்தை மறக்க முடியாது. எப்பேர்ப்பட்ட நடிப்பு?

அந்தப் படத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபட ஆரம்பித்தோம்.

முதலில் மூன்று வேடங்களில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, சிவாஜி அண்ணன் முகத்தில் லேசான தயக்கம். ரொம்பவும் யோசித்து சம்மதித்தார்.

வேடிக்கையாக ‘மூன்று வேடங்களில் நடிக்க வேண்டும் என்றால், மூன்று படங்களுக்கான கால்ஷீட் தர வேண்டும் – உங்களுக்கு கட்டுப்படியாகுமா?’ எனச் சொன்னபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘தெய்வ மகன்’ எடுத்தபோது, சிவாஜிக்கு நான் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல – அவரை சித்ரவதை செய்தேன் என்று கூடச் சொல்லலாம் – சில நேரங்களில் என் மீது கோபித்துக்கொண்டு, முகத்தை ‘உர்’ரென வைத்துக்கொள்வார்.

‘அண்ணே ஷாட் ரெடி’ என்றதும், கோபத்தைக் குப்பையில் தூக்கிப் போட்டு விட்டு, ஷாட்டுக்கு தயாராகி விடுவார்.

முடிந்ததும் “திரிலோக், ஷாட் நல்லா வந்துருக்கா?” என்று குழந்தை போல் கேட்பார். “நான் எதுக்கு சொல்றேன்னா, படம் நல்லா வரணும” என்பார். அவரது ஊடல் என்னைப் பெரிதும் கவர்ந்த விஷயம்.

மூன்று படங்களில் மூன்று வேடம்:

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள், மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். ஆனால், மூன்று படங்களில் மூன்று வேடத்தில் நடித்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி மட்டுமே.
அவை:

1962 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே பாண்டியா’, ‘1969 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘தெய்வமகன்’ மற்றும் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘திரிசூலம்’. மூன்று படங்களுமே, சக்கைப்போடு போட்டவை. இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment