படித்தது ரசித்தவை:
சிலர் என்னை கூலிக்கார்களின் தோழன் என்கிறார்கள்; சிலர் என்னை நாகரீகமற்றவன் என்கிறார்கள்; அதாவது நான் ஆபாசமான மற்றும் கீழ்மையான கதைகள் எழுதுகிறேன் என்கிறார்கள்.
இன்னும் சிலர் என்னை முற்போக்காளன் என்கிறார்கள்; இதெல்லாம் முட்டாள்த்தனம் இல்லையா? நான் ஒரு மனிதன். ஒவ்வொரு மனிதனும் முற்போக்காளனாக இருக்க வேண்டியது அவசியம்.
நான் ஆண் மற்றும் பெண் இடையிலான பாலியல் உறவுகளை குறித்தும், விபச்சாரிகள் குறித்தும் அப்பட்டமாக எழுதுகிறேனாம், இது தான் என் மீதுள்ள குற்றச்சாட்டு.
சமூகத்தில் இருக்கின்ற எல்லாவற்றையும் பற்றி எழுதப்பட வேண்டும் என்பது என் கருத்து. அதாவது உங்கள் கண்களுக்கு முன்னால் இருக்கும் அனைத்தையும் பற்றி பதிவு செய்யப்பட வேண்டும்.
என் கதைகளைப் படிக்கின்ற பாமரனுக்கு தவறான எண்ணங்கள் நிச்சயம் உருவாகாது. என்ன கதைகள் உங்களுக்கு பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
என்னுடைய ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்குமிடையில் இருக்கும் தரத்தைப் பற்றி இலக்கிய விமர்சகர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் இலக்கியம் என்பது ஆபாசமாகவும் கொச்சையாகவும் ஆகவே ஆகாது.
ஒரே கேள்வி என்னிடம் திரும்பத் திரும்பத் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதாவது நான் ஏன் இப்படியான கதைகளை எழுதுகிறேன் என்று. ஏன் எழுத கூடாது? நான் ஏன் விபச்சாரிகளை பற்றி எழுதக்கூடாது? அவர்கள் நமது சமூகதின் அங்கம் இல்லையா?
ஆண்கள் ஏன் அவர்களிடம் நமாஸ் செய்யவோ பூஜை செய்யவோ போவது இல்லை? ஆண்கள் அவர்களிடம் மிக சுதந்திரமாக போவதற்கு உரிமை இருக்கும்போது, அதைப் பற்றி ஒரு எழுத்தாளன் எழுதுவதற்கு உரிமை இல்லையா? ஏன் கூடாது?
ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ அப்படியே என் வெளிபடுத்தப்பட கூடாது. சாக்கு துணி ஏன் பட்டு என்று அழைக்கப்பட வேண்டும்.
உண்மையை மறுப்பதனால் ஒருவன் சிறந்த மனிதனாக ஆகிவிட முடியுமா? வழக்காடு மன்றங்களில் வக்கீல்கள் எப்போதுமே என்னுடைய கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் அசிங்கமாகப் பேசுகின்றன என்ற குற்றசாட்டை வைக்கின்றனர்.
ஆனால், என் கதாபாத்திரங்கள் பேசிய வார்த்தைகளாக நான் குறிப்பிட்டவைகளை ஆயிரமாயிரம் மக்கள் அன்றாடம் பேசிக்கொண்டு தான் உள்ளனர். (சாலைகளில், பயணங்களில், கடைவீதிகளில்…)
காலத்தோடு சேர்ந்து இலக்கியமும் பயணிக்க வேண்டும். பிரான்ஸின் பிரபலமான நாவலாசிரியர் குஸ்தாவே பிலாபட்டின் கதை ”மேடம் போவாரி” மிக ஆபாசமானா கதையாக கருதப்பட்டது. ஐரிஸ் எளித்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸின் ”உலிசிஸ்” புத்தகத்தின் மீதும் இதே குற்றசாட்டு வைக்கப்பட்டது.
பார்க்கப்போனால் வளி முதல் காலிப் வரைக்கும் எல்லோர் மீதும் இதே மாதிரியான குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவொன்றும் புதிதனதல்ல.
அன்ஸார் சப்னம் தில் (இளைஞனின் கேள்வி): (அன்சார் – உதவியாளன் / சப்னம் = பனித்துளி /தில் = இதயம்) உங்கள் கதைகள் மனக்கஷ்டத்தையும் மன உளைச்சலையும் தரக்கூடியதாக உள்ளன. அதை வாசிப்பவர்கள் தற்கொலை முயற்சிக்கு தூண்டப்படலாம்.
‘அன்ஸார் சப்னம் தில்’ என்ற பெயரின் பிற்பகுதி உங்கள் தன்மையாக இருந்தால் கண்டிப்பாக தற்கொலை செய்யக் கூடும்.
என் கதைகளை படிக்கும் மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரியாது அது பற்றிச் சொல்ல வேண்டாம். அதனால் எப்பொழுமே நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ அதை மட்டும் சொல்லுங்கள்.
நான் கிழிசல்களுக்கு ஒட்டுப்போடும் வேலைகளைச் செய்வது இல்லை. ஒருவரின் மறுப்பின் மீது இஸ்திரி போடவும் தெரியாது. வேப்பிலைக் கசப்பாகத் தான் இருக்கும். ஆனால், ரத்தத்தை சுத்தம் செய்யும்.
எனக்கு தெரிந்தது எல்லாம் ஒன்று தான். என் கதைகள் கண்ணாடியை போல, அதில் சமூகம் தன்னை தானே பார்த்துகொள்கிறது.
ஒருவேளை அசிங்கமான முகமுடைய ஒருவன் கண்ணாடியின் மீது கோபப்பட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.
உங்களால் என் கதைகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், இந்த சமூகத்தையே பொறுத்துக்கொள்ள முடியாது என்று தான் அர்த்தம்.
நான் ஒரு புரட்சிக்காரன் அல்ல.
அம்மனமாக இருக்கும் ஒரு சமூகத்தின் ஆடைகளை நான் எப்படி மீண்டும் களைவது? இல்லை அதற்கு ஆடை அணிவித்துவிட வேண்டியதும் என் வேலை இல்லையே.
நான் கரும்பலகையில் வெள்ளை சாக்பீசை பயன்படுத்துகிறேன். காரணம் கரும்பலகைகள் இன்னும் துலக்கமாகி விடவேண்டும் என்பதற்காக.
நான் கண்களை மூடிக் கொள்ள முடியும்… என் மனசாட்சியை என்ன செய்ய?
சாதத் ஹசன் மேண்டோ (SAADAT HASAN MANTO) எழுதிய இன் டிபன்ஸ் ஆஃப் ஃப்ரீடம் (In Defence Of Freedom –2006) – என்ற ஆங்கில நூலிலிருந்து….
தமிழாக்கம்: மதியழகன் சுப்பையா
நன்றி: முகநூல் பதிவு