மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போதே சைகை மொழிகள் உருவாகி விட்டன. மொழி தெரியாத நாடுகள், மாநிலங்களுக்குச் சென்றாலும் நமது மொழிகளைத் தாண்டி உடல்மொழியால் நமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.
முதன் முதலில் தோன்றிய மொழிகள் என்றால் அது சைகை மொழியாகத்தான் இருக்கும்.
காலப்போக்கில் மொழிகள் உருவாகி பேசத் தொடங்கிவிட்டோம். ஆனாலும் இயற்கையால் சில குறைபாடுடன் பிறக்கும் தனி மனிதர்களுக்கு ஆதிகால மொழியான இந்த சைகை மொழி தான் உதவுகிறது.
வாய்ப் பேச முடியாமை மற்றும் காது கேளாத தனி மனிதர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சைகை மொழியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 23ஆம் தேதி ‘சர்வதேச சைகை மொழிகள் தினம்’ அனுசரிக்கப்பட்டது.
காதுகேளாத நபர்களின் தனிப்பட்ட கல்வி, வேலை, பொருளாதார வளர்ச்சி, மேம்பாட்டிற்கும் சைகை மொழி மற்றும் சைகை மொழி தொடர்பான பல்வேறு சேவைகளை செய்வதற்கு இந்த சிறப்பு நாள் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த நபர்களின் முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை இந்த நாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் இந்த நாள் சைகை மொழியை பயன்படுத்துபவர்களின் மொழியியல் அடையாளம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான ஆதரவளிப்பதற்கு பாதுகாப்பதற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது.
இதன் மூலம் பல்வேறு இடங்களில் இருக்கும் சைகை மொழி பேசும் திறமையான நபர்களை அடையாளம் கண்டு ஒன்றினைக்கிறது.
பேச முடியாமல் இருப்பது இது ஒன்றும் பெரிய குறைபாடு இல்லை. சராசரி மனிதர்கள் போல் அவர்களும் வாழ முடியும் என்று இதன்மூலம் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதோடு, குறைகளைக் கண்டு அஞ்சாமல் சாதித்து வர வழிவகுக்க இந்த நாள் ஊக்கமாக இருக்கிறது.
சைகை மொழியை பொறுத்தவரை தனித்துவமான இயற்கை மொழிகளை குறிக்கின்றன.
அவை பேச்சு மொழியிலிருந்து வேறுபட்டு கைகள் மற்றும் உடல் அசைவால் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழியாக சைகை மொழி இருக்கிறது.
காதுகேளாத நபர்கள் சர்வதேச முறையில் பயணம் செய்யும் போதும், பழகும் போது பயன்படுத்தும் மொழியாக சைகை மொழி சர்வதேச மொழியாக உள்ளது.
இந்த மொழியானது ஒரு காட்சி வடிவ தகவல் தொடர்பு வடிவமாகும். இது அர்த்தத்தையும் உணர்வுகளை வெளிப்படுத்த கை சைகைகள் மற்றும் உடல் அசைவுகளை மட்டுமே நம்பியுள்ளது.
சைகை மொழி வரலாறு:
வாய்ப் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் சமூகத்தில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்தில் சைகை மொழி தினம் 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் உலகளாவிய இயக்கமாக இது உருவானது.
காது கேளாத நபர்களின் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்வதை உறுதி செய்வதில் சைகை மொழியின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) செப்டம்பர் 23 ம் தேதியை சர்வதேச சைகை மொழிகள் தினமாக (IDSL) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
உலக காது கேளாதோர் கூட்டமைப்பு ஆய்வரிக்கையின்படி, உலகளவில் சுமார் 73 மில்லியன் காதுகேளாத நபர்கள் உள்ளனர், அவர்களில் 85% க்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்தக் குழுக்களில் 300 க்கும் மேற்பட்ட தனித்துவமான சைகை மொழி பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– யாழினி சோமு