‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’யைக் குறைந்த விலையில் கொடுங்கள்!

எழுத்தாளர் அழகிய பெரியவன் வேண்டுகோள்

‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’ என்ற புகைப்படத் தொகுப்பு நூலை அண்மையில் புதுவை இளவேனில் வெளியிட்டிருக்கிறார். மிகவும் அழகான வடிவமைப்பில் தரமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூலை ‘டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்’ கொண்டுவந்திருக்கிறது.

கி.ரா அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக அண்மையில் புதுவை சென்றிருந்தபோது இளவேனில் எனக்கு இதை வழங்கினார் என்று பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

அவரது பதிவு இதோ:

இந்த வகை நூல் தமிழுக்கு மிகவும் புதிது, அரிது. அதற்காகவே இந்த நூலைக் கொண்டாட வேண்டும். கவிஞராகவும், புகைப்பட கலைஞராகவும் ஒருசேர எனக்கு அறிமுகமானவர் இளவேனில்.

காலச்சுவடு, கணையாழி, சுபமங்களா போன்ற சிற்றிதழ்களில் அவருடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன்.

காலச்சுவடு இதழில் வெளிவந்த ஆளுமைகளின் விரிவான நேர்காணல்களில் அவர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் அவர் நடத்திய புகைப்பட கண்காட்சிகளையும் நான் பார்த்ததுண்டு.

மலையாள மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான டி.டி. ராமகிருஷ்ணா என்னுடைய விரிவான நேர்காணல் ஒன்றை ‘மாத்தியமம்’ இதழில் வெளியிட்டார்.

அதற்காக என்னை புகைப்படம் எடுத்தவர் இளவேனில். அது 2006-ம் ஆண்டு.

அப்போது தான் இளவேனிலை புதுவையில் சந்தித்தேன். இன்று வரை அந்த நட்பு தொடர்கிறது. அவர் எப்போதும் உற்சாகமும் இயல்புத்தன்மையும் கொண்டவர்.

இருபத்தோரு கலை இலக்கிய ஆளுமைகளின் புகைப்படங்களும், அவர்களை புகைப்படம் எடுத்த அனுபவங்களும் இந்த நூலில் உயிர்ப்புடன் பதிவாகியுள்ளன.

இளவேனில் மிகத் துல்லியமாகவும் நுட்பமாகவும் தன்னுடைய அனுபவங்களை எழுதி இருக்கிறார்.

அவை நேர்மையாக, நெருக்கமாக இருப்பதுடன் சுவாரஸ்யமாகவும் உள்ளன.

குறிப்பாக சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ரவிக்குமார், விக்ரமாதித்யன், கி.ராஜநாராயணன், பெருமாள் முருகன் ஆகியோரை குறித்த இளவேனிலின் பதிவுகளைச் சொல்ல வேண்டும்.

இளவேனிலின் படங்களில் ஒளியும், நிழலும், அசேதனப் பொருட்களும், ஆளுமைகளின் முகவடிவுடன் குழைந்து வெளிப்படுவதைப்போல, எழுத்தல்லாத பிற விவரங்களும் நுண்மையாக வெளிப்பட்டு வியப்பை உருவாக்குகின்றன.

இந்தக் குறிப்புகள் புகைப்படத்தின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் உத்திகளைக் குறித்துப் பேசாமல் ரசனை மட்டத்திலேயே இலாவகமாக கடந்துச் செல்வது அழகாக இருக்கிறது.

அரிய நூல்களின் சேகரிப்பிலும், நூலகங்களிலும், காபி மேசைகளிலும் இருக்கவேண்டிய நூல் இது.

புகைப்படங்களின் தரம் குறையாமல் காகிதத்தின் வகையை மாற்றி குறைந்த விலையில் இதை வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். இளவேனிலும் வேடியப்பனும் யோசிக்கலாம்.

தம்பி புதுவை இளவேனிலுக்கு என் வாழ்த்துகள்.

******

நூல்: நிச்சலனத்தின் நிகழ்வெளி
ஆசிரியர்: புதுவை இளவேனில்
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 232
விலை: ரூ.570/-

Comments (0)
Add Comment