வாசிப்பின் ருசி:
இறைத் தொடர்பான சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்படும்போது உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனிதனிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உளரீதியான மாற்றமே மற்றவற்றிற்கு காரணமாக அமைவதாகவும் கருதலாம்.
‘வினைகளுக்கு மூல காரணமாக இருப்பவை மனதில் தோன்றும் பற்றுகள் என்றும், இவை உள்ளத்தில் தோன்றி ஆழமாக இடம் பிடிக்கின்ற நிலையில் அப்பற்றுதலே தம்மை ஆட்படுத்தும் என்று குறிப்பிடுவர்.
அவ்வடிப்படையில் இறைத் தொடர்பான சிந்தனைகள் மனிதனை ஆட்படுத்தும் வேளையில் சாமியாடுதல் நிகழ்வு நாட்டுப்புறங்களில் நடைபெறுகின்றது. இவ்வாறான வழிபாட்டு முறை தமிழ்ச் சமூகத்தில் மரபு வழியாக இருந்து வருபவையாகும்.
உளவியல் ரீதியாகப் பெண்ணின் அழுத்தி வைக்கப்பட்ட எண்ணங்களே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.
‘பெண்கள் தலைவிரி கோலத்துடன் ஆடுதல் என்பது அமுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டுத் தங்களின் ஆவேசத்தைக் காட்டுவதே சாமியாடுதலாகும் என்றும், சாமியாடும் போது ஒருமையில் நிஜ வாழ்வில் பயன்படுத்த முடியாத சொற்களைத் தளமாற்றம் பெற்ற நிலையில் பெண்கள் பயன்படுத்துவதென்பது தங்களின் நிஜ வாழ்வின் ஒடுக்குதல்களைத் தற்காலிகமாக உணர்த்தும் மனவியல் செயல்பாடாகும்.
– தொ.பரமசிவத்தின் பண்பாட்டு அசைவுகள் நூலிலிருந்து.