சங்க இலக்கியத்தின் தனித்துவம்!

ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

திருமாலின் சிறப்பைப் பாடவந்த பரிபாடல் மகாவிஷ்ணுவாகிய திருமாலின் ஒரு செயலை கேள்விக்கு உள்ளாக்கி அந்தச் செயல் நடுவுநிலை திரிந்த நயமற்ற அதாவது நாணயமற்ற செயல் என்று தீர்ப்பளிக்கிறது.

கருத்தியல் அடிப்படையில் உடன்பட முடியாத செயல் ஒன்றை கடவுளே செய்தாலும் அதையும் கேள்விக்கு உள்ளாக்கும் என்பதே சங்க இலக்கியத்தின் தனித்துவம்.

அது என்ன செயல்? தேவர்களும் அசுரர்களும் கூட்டணி சேர்ந்து பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்களுடன் முன்புரிதலின்படி பகிர்ந்து உண்ணாமல் தேவர்கள் தாங்களே “ஆட்டைய போட்டு” வஞ்சகமாக தனித்து உண்டதற்கு மகாவிஷ்ணுவான திருமால் உடந்தையாக இருந்தார் என்ற ஆதங்கம் தான் சங்க இலக்கியத்தின் நிலைப்பாட்டிற்கு காரணம். அந்த வரிகள் வருமாறு:

“நகை அச்சாக நல் அமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை இரு கை மாஅல்…”

** பாடியவர் : கடுவன் இளவெயினனார்
** இசையமைத்தவர் : பெட்டனாகனார்
** பண் : பாலையாழ்

பகிர்தல் அறம் தான் அறங்களுக்கு எல்லாம் அடிப்படையான அறம். பகிர்தல் அறம் தான் அறத்தின் அகரமும் சிகரமும்.

இந்தக் கருத்தியலை சங்க இலக்கியத்தின் இன்னொரு பாடல் மூலமும் புரிந்து கொள்ளலாம்.

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; அப்படிப்பட்ட சிலர் இன்னும் இருப்பதால்தான் இந்த பூமி இன்னும் சுற்றுகிறது!

இந்த உலகம் இன்னும் இயங்குகிறது! இதோ புறநானூறு பேசுகிறது.

புறநானூறு 182

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

உரை:

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டார்கள்; யாரையும் வெறுக்கமாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்;

புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள்.

இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறருக்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனானப்பட்ட கடவுளையே திறனாய்வு செய்யும் மெய்யியல் தான் தமிழ் மெய்யியல்.

இங்கே போகிற போக்கில் பகிர்தல் அறத்தை; கல்விப் பரவலாக்கத்தின் காரணத்தை காயப்படுத்திவிட்டு யாரும் தப்பித்துப் போய்விட முடியாது! அதனால்தான் தமிழ் தோற்றத் தொன்மை, தொடரும் இளமை என்ற இரட்டைச் சிறப்போடு இயங்குகிறது.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment