வெப்சீரிஸ் என்றால் முன்னணி நாயகர்கள், நாயகிகள் நடிக்க முன்வர மாட்டார்கள் என்கிற நிலைமை உலகெங்கும் உள்ளது. விதிவிலக்காக, சில கலைஞர்கள் வெப்சீரிஸ்களில் தலைகாட்டி எதிர்காலத்திலும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற நிலையைக் கட்டமைத்து வருகின்றனர்.
சமந்தா, தமன்னா, ஹ்யூமா குரேஷி, பிரியாமணி போன்ற நாயகிகளை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்களில் ஒருவராக இடம்பெற முடிவு செய்திருக்கிறார் த்ரிஷா.
அவரது நடிப்பில், சூர்யா மனோஜ் வங்கலா இயக்கியுள்ள ‘பிருந்தா’ தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இதில் இந்திரஜித் சுகுமாரன், அனந்த் சாமி, ரவீந்திரா விஜய், ஜெயபிரகாஷ், ஆமனி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
சக்திகாந்த் கார்த்திக் இதற்கு இசையமைத்துள்ளார்.
தொடர் கொலைகளைச் செய்யும் ஒரு கொலையாளியை போலீஸ் அதிகாரியான பிருந்தா தேடுவதாகக் காட்டியது இதன் ட்ரெய்லர். எந்தளவுக்கு ‘த்ரில்’ தருகிறது இந்த வெப்சீரிஸ்?
மெல்லப் பரவும் தகிப்பு!
கையில் ஒரு மரப்பொம்மையை வைத்துக்கொண்டு, அடர்ந்த காடொன்றில் ஒரு சிறுமி தனது சகோதரனை தேடிச் சொல்வதில் இருந்து ‘பிருந்தா’வின் திரைக்கதை தொடங்குகிறது.
அந்தச் சிறுமியின் பெயர் சின்னி. அவரது சகோதரர் பெயர் சத்யா.
ஓரிடத்தில் சத்யா மயங்கிக் கிடப்பதைப் பார்த்து பதறியடித்து ஓடுகிறார் சின்னி. ஆனால், அழும் அந்தச் சிறுமியைப் பார்த்து ஏமாற்றிவிட்டதாகக் கெக்கெலிப்பு காட்டுகிறான் சத்யா. அதனைக் கண்டு சின்னி மேலும் அழுகிறாள்.
அந்தக் காட்சிகள் கனவில் வரும் பிம்பங்களாகத் தெரிகின்றன. திகைத்துப் போய் தூக்கத்தில் இருந்து விழிக்கிறார் பிருந்தா (த்ரிஷா).
சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்யும் பிருந்தாவுக்கு, அந்தக் கனவு மிகப்பெரிய தொந்தரவாக இருக்கிறது. அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மனநல மருத்துவரோ, ‘அது கடந்தகால நினைவு’ என்கிறார்.
வீட்டில் பிருந்தாவின் தாய் வசுந்தரா (ஆமனி), அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். ஆனால், தங்கை நைனியோ முகம் கொடுத்துப் பேசுவதில்லை. காரணம், பிருந்தா ஒரு தத்துக்குழந்தை என்பதே.
பிருந்தா வேலை பார்க்கும் காவல்நிலையத்தில் எஸ்.ஐ. ஆக இருக்கிறார் சாரதி (ரவீந்திரா விஜய்). லேகா (அஞ்சனா) அவரது மனைவி. இந்த தம்பதியருக்குப் பத்து ஆண்டுகளாகக் குழந்தைப்பேறு இல்லை.
ஒருநாள் நீர்நிலை ஒன்றில் ஒரு சடலம் ஒதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. பிணத்தைப் பார்க்கும் பிருந்தா, அந்த மனிதர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
வெறுமனே கம்ப்யூட்டர் முன்னால் டைப் செய்பவராக அவரைக் கருதிய சக போலீசாருக்கு, அந்த பேச்சு திகைப்பைத் தருகிறது. அடுத்த நாள் வெளியாகும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பிருந்தா குறிப்பிட்ட தகவல்களே இருக்கின்றன.
அதையடுத்து, பிருந்தாவை மரியாதையாகப் பார்க்கத் தொடங்குகிறார் சாரதி. அவர் கேட்கும் உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறர். ஆனால், இன்ஸ்பெக்டர் சாலமோனுக்கு (கோபராஜு) அது கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை.
இந்த நிலையில், மேலும் ஒரு சடலம் போலீசாருக்கு கிடைக்கிறது. அதுவும் ஒரு நீர்நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. தலை முடி மழிக்கப்பட்டு, மார்பில் ஒரு வித்தியாசமான காயத்துடன் அந்த சடலம் இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, அந்த சடலம் எங்கிருந்து அந்த இடத்திற்கு வந்திருக்கும் என்று ஆராய்கிறார் பிருந்தா. அந்த நீர்நிலை பாவிப் பரவிய இடங்களுக்கெல்லாம் செல்கிறார். ஓரிடத்தில் ஒரு குறிப்பிட்ட சிறகைக் கண்டெடுக்கிறார்.
அந்தச் சிறகுக்குச் சொந்தமான பறவை பொதுவாக தென்னிந்தியாவில் வசிப்பதில்லை. அவைதான் மனித மாமிசத்தைத் தின்னத் தக்கவை. அதனை அந்த இடத்திற்குக் கொண்டுவந்தது யார்?
அந்தக் கேள்வியைத் தேடிச் செல்லும்போது பலவித அனுபவங்களை எதிர்கொள்கிறார் பிருந்தா.
முதலில் இன்ஸ்பெக்டருடன் தகராறு முற்றுகிறது. பிறகு, அவர் சொன்னது போலவே நடந்த கொலைகளைச் செய்தது ஒரு கொலையாளி தான் என்பதனை ஒப்புக்கொள்கின்றனர் உயரதிகாரிகள்.
இந்த நிலையில், அந்த பறவையை வளர்த்துவரும் தாகூர் (அனந்த் சாமி) எனும் நபர் புதிதாக ஒரு நபரைக் கடத்த முனைகிறார். அவர் பின்னாலேயே சுற்றுகிறார்.
தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொலைகள் குறித்து ஆராயும் போலீசார், காணாமல் போனவர்களின் பட்டியலில் இருந்து கொலையாளி குறி வைத்திருக்கும் நபரை அடையாளம் காண முயற்சிக்கின்றனர்.
அப்போது, ஒரு நபர் காணாமல் போனது தெரிய வருகிறது. அதன்பிறகு, அருகிலுள்ள நீர்நிலையொன்றில் அவரது சடலத்தைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர்.
அந்த நபர் உண்மையிலேயே காணாமல் போனாரா அல்லது கொலை செய்யப்பட்டவரா? அதன் பின்னிருக்கும் நபர் யார்? ஒரு சிலரை மட்டுமே அவர் குறி வைப்பது ஏன்? அந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பிருந்தா’வின் மீதி.
இந்தக் கதையில் சிறு வயதில் காட்டில் சின்னி ஆக வாழ்ந்தவர் பிருந்தா என்று காட்டப்படுகிறது.
சின்னி வாழ்ந்த கிராமத்தில் திடீரென்று ஒரு நோய் பரவ, பூசாரி அதனைத் தடுத்து நிறுத்த ஒரு குழந்தையைப் பழி கொடுக்க வேண்டும் என்ற முடிவை அறிவிக்கிறார். அதற்காகச் சின்னியைத் தேர்ந்தெடுக்கிறார். அதனை அவரது தாயும் சகோதரரும் ஏற்பதாக இல்லை.
சின்னியையும் சத்யாவையும் அழைத்துக்கொண்டு, அந்த கிராமத்தை விட்டுத் தப்பிச் செல்ல முனைகிறார் அந்தப் பெண்மணி.
சின்னியை ஒரு லாரியில் ஏற்றிவிட்டாலும், அப்பெண் ஊராரிடம் மாட்டிக்கொள்கிறார். அதனைக் கவனிக்காமல் லாரி டிரைவர் அதனை இயக்கத் தொடங்குகிறார்.
தாயையும் தங்கையையும் விட்டு வெகுதூரத்தில் வரும் சத்யா, ஊராரின் செயலைக் காண்கிறார். தனது தாயைக் காப்பாற்ற முனைகிறார். ஆனால், அதற்குள் பூசாரி அவரைக் கொன்றுவிடுகிறார்.
சில நிமிடங்கள் கழித்து அந்த இடத்திற்கு வரும் சத்யா, தாயின் சடலம் அருகே ஒரு சிறுமி எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைக் காண்கிறார். தனது தங்கை சின்னி இறந்துவிட்டதாக எண்ணுகிறார்.
அந்த ஆத்திரத்தில், அந்த ஊரிலுள்ள அனைவரையும் எரித்துக் கொலை செய்கிறார். அதையடுத்து, போலீசார் அவரைக் கைது செய்கின்றனர். அப்போது, அவரது கையில் சின்னிக்குக் கொடுத்த பொம்மை இருக்கிறது.
இந்த கிளைக்கதையின் தொடர்ச்சியாக, அந்த பொம்மையைத் தாகூர் வைத்திருப்பது திரைக்கதையில் காட்டப்படுகிறது.
சின்னியைத் தத்தெடுத்து பிருந்தாவாக வளர்க்கும் குருபிரசாத் (ஜெயபிரகாஷ்) மற்றும் வசுந்தரா பற்றியும், அவர்களது டீன் வயது மகள் நைனி (யஷ்னா முதுலரி) குறித்தும் இன்னொரு கிளைக்கதை இதில் சொல்லப்படுகிறது.
பிருந்தாவின் கடந்த கால வாழ்வோடு நிகழ்காலத்தில் அவர் சந்திக்கும் தொடர் கொலைகள் குறித்தான விசாரணையும், ஆடு புலி ஆட்டம் போலத் தொடரும் திரைக்கதையின் ஊடே சொல்லப்படுகிறது.
பார்வையாளர்களுக்குள் மெல்ல தகிப்பு பரவும் வகையில், அடுத்தடுத்து புதிய திருப்பங்களுடன் எபிசோடுகள் வேக வேகமாக நகர்கின்றன. இறுதியாக, எட்டாவது எபிசோடில் அதன் வேகம் மட்டுப்படுகிறது. அது மட்டுமே இந்த வெப்சீரிஸின் மிகப்பெரிய மைனஸ்.
ஆக்ஷன் வேடத்தில் த்ரிஷா!
‘பிருந்தா’வில் முதன்மை பாத்திரம் ஏற்றிருக்கிறார் த்ரிஷா. சொந்த வாழ்வில் சில சோகங்களைச் சுமந்தவராக, போலீஸ் பணியில் சீரிய கவனத்தை வெளிப்படுத்துபவராக, கொலையாளியைத் தேடும் முயற்சியில் எதற்கும் துணிந்தவராக, இதில் அவர் நடித்திருக்கிறார்.
ஆக்ஷனை வெளிக்காட்டும் பாத்திரமொன்றில் அவர் நடித்திருப்பது, திரையில் துருத்தலாகத் தெரியவில்லை.
த்ரிஷா உடன் பெரும்பாலான காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார் ரவீந்திரா விஜய். அவரது நடிப்பும் கண்களைத் திரையில் இருந்து திருப்பாவண்ணம் அமைந்துள்ளது.
வில்லனாக நடித்துள்ள அனந்த் சாமியும், ஐந்தாவது எபிசோடில் அறிமுகமாகும் இந்திரஜித்தும் நம்மைத் திரைக்கதையோடு ஒன்ற வைக்கும் ‘பெர்பார்மன்ஸை’ வெளிக்காட்டியுள்ளனர்.
இன்ஸ்பெக்டராக வரும் கோபராஜு விஜய் ‘வில்லத்தனம்’ காட்டும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
சத்யா, சின்னி, நைனி பாத்திரங்களை வெவ்வேறு வயதுகளில் காட்டச் சில குழந்தை நட்சத்திரங்கள் இதில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.
பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்த ஜெயபிரகாஷ், அவரது மனைவியாக வரும் ஆமனி ஜோடி சில அழுத்தமான காட்சிகளில் தங்களது இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
யஷ்னா முதுலரி, அஞ்சனா ஆகியோர் மிகச்சில காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் கிராமத்தினராக நடித்தவர்கள், போலீசாராக வந்து போனவர்கள் என்று சுமார் நான்கு டஜன் பேராவது இதில் முகம் காட்டியிருப்பார்கள்.
இயக்குனர் சூர்யா மனோஜ் வங்கலா எழுதிய கதைக்கு ஜெய் கிருஷ்ணாவும் பத்மாவதி மல்லாடியும் திரைக்கதை வசனம் அமைத்துள்ளனர்.
சத்யா வளர்ந்தபிறகு என்ன செய்தார் என்று சொல்லும் காட்சிகள், இந்த வெப்சீரிஸில் புத்துணர்வைத் தருகின்றன.
இதனைச் சொல்லும்போதே தாகூரின் பிளாஷ்பேக் உள்ளிட்ட பல காட்சிகள் வழக்கமானதாக அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதையும் மீறி, இயக்குனரின் காட்சியாக்கம் நம்மை திரையோடு ஒன்றச் செய்கிறது.
இந்தக் கதையில் பிருந்தா – நைனி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆறாவது விரல் போன்றே இருக்கின்றன. போலவே, சாரதி மற்றும் அவரது மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகள் சரியாகக் கையாளப்படவில்லை.
சக்தி காந்த் கார்த்திக்கின் பின்னணி இசை, இந்த வெப்சீரிஸில் பெரும்பாலான எபிசோடுகள் பரபரப்பாக நகர உதவியிருக்கிறது. குறிப்பாக, டைட்டில் காட்சிக்கான இசை அதனை ‘ஸ்கிப்’ செய்யவிடாமல் தடுக்கிறது.
தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவானது விஎஃப்எக்ஸ், டிஐ ஆகியவற்றை மனதில் கொண்டு சிறப்பாக அமைந்துள்ளது; அற்புதமான காட்சியாக்கத்தை நாம் காண செய்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் அன்வர் அலி, பெரிதாகக் குழப்பமின்றி அனைத்து எபிசோடுகளையும் காண வகை செய்திருக்கிறார். கிளைமேக்ஸ் பகுதி மட்டும் சப்பென்று முடிந்தாற் போலிருக்கிறது. அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு, கதையில் வரும் பல்வேறு களங்களை உண்மை என்றே நம்மை நம்பச் செய்கிறது.
இன்னும் ஆக்ஷன் கொரியோகிராஃபி, ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து, ’பிருந்தா’ தரும் காட்சியனுபவத்தைச் செறிவானதாக மாற்றுகின்றன.
இயக்குனர் சூர்ய மனோஜ் வங்கலா, வெப் சீரிஸுக்கு ஏற்ற ஒரு கதையைத் தேர்வு செய்த வகையில் பாதி வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
அதற்கேற்ற கதை சொல்லலைக் கையாண்டு மீதியையும் தன்வசப்படுத்தியிருக்கிறார்.
அதேநேரத்தில், அந்த காட்சியாக்கம் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கு ஏற்ப இதன் கிளைமேக்ஸ் இல்லை. அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
மற்றபடி, டைட்டிலுக்கு முன்பாக ஒரு பிளாஷ்பேக், பிறகு சமகாலத்தைச் சொல்லும் காட்சிகள், எபிசோடு முடிவில் ஒரு அதிர்ச்சி என்று சுவையான ‘பேக்கேஜை’ இதில் தந்திருக்கிறார்.
இதன்பிறகு சொல்லப்படுபவை ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், ‘பிருந்தா’ பார்க்காதவர்கள் இத்தோடு இதனை வாசிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
‘பிருந்தா’ கதை மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் சில மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. ஒருகட்டத்தில் அது ‘கடவுளை வணங்குபவர்களுக்கான எதிர்ப்பாக’ காட்டப்படுகிறது.
இரண்டுக்குமான வித்தியாசத்தை இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்க முடியும். ஆனாலும், உடனடிக் கவன ஈர்ப்புக்காக இயக்குனர் அந்த வாய்ப்பினைத் தவறவிட்டது தெளிவாகத் தெரிகிறது.
அது போன்ற சில குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், கொஞ்சம் ஆசுவாசமான வெப்சீரிஸ் அனுபவத்தைத் தரவல்லது இந்த ‘பிருந்தா’. அதற்காகச் சுமார் நான்கு மணி நேரத்தைச் செலவிட்டபிறகு, நிச்சயம் ஓரளவு திருப்தி கிடைக்கும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்
#Brinda_Review #பிருந்தா_விமர்சனம் #த்ரிஷா_கிருஷ்ணன் #இந்திரஜித்_சுகுமாரன் #ஜெய_பிரகாஷ் #ஆமணி #ரவீந்திர_விஜய் #ஆனந்த்_சாமி #ராகேந்து_மௌலி #Indrajith #Anand_Sami #Trisha_Krishnan #sugumanran #jaya_prakash #raveendra_vijay #Brinda_webseries