பொய் என்பது நிஜத்தைப் போல் ஒன்று!

கி. ராஜநாராயணன்

நூல் அறிமுகம்:

வழக்கம்போல கனமான உள்ளடக்கத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கதை சொல்லி’யின் 37-வது காலாண்டு இதழ்.

கி. ராஜநாராயணன் ஆசிரியராக இருந்து நடத்திய கதை சொல்லியை அதேவிதமான உள்ளடக்கமான பார்வையோடு வெளிக்கொண்டு வந்திருக்கிறார் தற்போதைய கதை சொல்லியின் ஆசிரியரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அதன் பொறுப்பாசிரியர் கவிஞர் யவனிகா ஸ்ரீராம்.

ஏறத்தாழ 214 பக்கங்களை கொண்டிருக்கும்படி கதை சொல்லியில் வழக்கம்போல நிறைய கதைகள், கி.ராவின் கடிதம் துவங்கி கலாப்ரியா, அ.முத்துலிங்கம் மற்றும் ஏராளமான எழுத்தாளர்களுடைய பங்களிப்புடன் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளும் கதைகளும் கட்டுரைகளும் இதில் முழுவதும் நிரம்பி இருக்கின்றன.

வழக்கம் போல இடம்பெறும் கி.ரா-வின் கடிதங்கள் இந்த இதழிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவர் முன்பு எழுதிய ஒரு கடிதம் இப்போது படிக்கும்போதும் ரசமாகவே இருக்கிறது.

இனி அந்த கடிதம்…

 

பழய்ய நினைவுகள்!

கி. ராஜநாராயணன்

அறுவது ஆண்டுகள் இருக்குமா; இருக்கும். அதிகமாகக் கூட இருக்கலாம்.

கோவில்பட்டி இளையரசனீந்தல் ரோட்டில் இருந்த எண்1, லாயல் மில் நடராஜனுடைய வீட்டுத் திண்ணையில்தான் எங்களுக்குப் படுக்கை.

நானும் நடராஜனும், நானும் கு.அ. வும், நானும் கு.அ. வும் நடராஜனும் இப்படி.

படுத்தமா தூங்கினமா என்று கிடையாது. கு.அ (கு.அழகிரிசாமி) வந்து சேர்ந்துவிட்டால், கெச்சட்டத்துக்குக் குறைவே இருக்காது. எதையாவது சொல்லி சிரிப்பை மூட்டிக்கொண்டே இருப்பாம்.

நடராஜனின் சிரிப்பு சத்தத்தை அந்த தெருவில் யாருமே கேட்டிருக்க மாட்டார்கள். உடல் மட்டும் குலுங்கும். அப்படி ஒரு அமரிக்கையான சிரிப்பு.

அந்த காலத்து வீட்டின் பெரியவர்கள் குழந்தைகளை, முக்கியமாக மற்ற பெரியாட்கள், வெளியாட்கள் இருக்கும்போது சிரிக்கக்கூடாது. சிரிக்க விடமாட்டார்கள். அடக்கிச் சிரித்துக் கொள்ளலாம். தாங்க முடியாத சிரிப்பு வந்துவிட்டால் ஒரே ஓட்டம் ஓடிவிட வேண்டும் வெளியே.

யாருமே இல்லாதபோது நண்பர்களோடு ஆனந்தமாக வாய்விட்டுச் சிரிக்கலாம். (ஆம்பளைப் பிள்ளைகளுக்கே இப்படி என்றால், பொம்பளை பிள்ளைகள் பாடு கேட்கவே வேண்டாம்.) துட்டி வீட்டில் நேர் எதிர்; பொம்பளைகள் குரல் எடுத்து அழலாம்; ஆண்கள் அழக்கூடாது !

நடராஜனுடைய அப்பா திருமான் அய்யாச்சாமி பிள்ளை அவர்கள் ரொம்ப கறாலான பேர்வழி அவனுடைய “அதாரட்டி”க்கான தன்மைக்கு ஆன உடல்வாகும் இல்லை; குரலும் கிடையாது. பேசும்போது பிசிர் அடிக்கும்.

பேசாமல் இருக்கும்போதோ தொண்டையை சரி செய்துகொண்டே இருப்பார். அதுவே அவருக்கு ஒரு வழக்கமாக ஆகிவிட்டதால், அவர் இருக்கும் இடத்தை பார்க்காமலேயே கண்டுபிடித்துவிடலாம்.

மனுசர் தங்கமானவர். நடராஜனும் கூட அப்படித்தான். நடராஜனுடைய அகராதியில் பொய் என்பதற்கு என்ன பொருள் என்று பார்த்தால் இப்படி இருக்குமாம்:

“பொய் என்பது நிஜத்தைபோல் ஒன்று” – இது கு.அ. சொன்னது. இதை விரிவுபடுத்திச் சொல்லித்தான் அன்று அவரைக் கோட்டா பண்ணி, என்னையும் அவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

எங்களை விட நடராஜனுக்குப் பாம்புக்காது. “அப்பா வந்துவிட்டாஹ” என்றார் சொல்லி வாய் மூடவில்லை; தூரத்தில் அப்பாவினுடைய செருமல் சத்தம் கேட்டது. கப் சிப் ஆகிவிட்டோம்.

போர்வைகளுக்குள் எங்கள் உடம்புகள், தலை தவிர மூடியிருக்கும். அது கொசுக்கள் இல்லாத பொற்காலம். அவர் வந்து, படி ஏறி நின்று, எங்களை ஒரு பார்வை பார்த்தார். பிள்ளைகள் தூங்கிட்டது என்று நினைத்துக்கொண்டார்.

வாசப்படியில் வைத்திருக்கும் செம்பில் இருக்கும் தண்ணீரால் பாதங்களைப் பாதங்களாலேயே தேய்த்துக் கழுவி, ஒரு செருமலுடன் செம்பை ஓசைப்படாமல் அதே இடத்தில் வைத்துவிட்டு, கதவை மெதுவாகத் தட்டி “சன்னவுட்டீ”.

“சன்னவுட்டி” என்று குரல் கொடுத்தார். இது நடராஜனுடைய அம்மாவின் பெயராக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனாலும், ‘இப்படியும் பேரா!’ ஒரு என்றும் நினைத்துக்கொண்டேன். நடராஜனுடைய சகோதரியின் பெயர் ‘வாளாந்தா’. இது எந்த தேவதையோட பேரோ என்று என்னுள் கேட்டுக்கொள்வேன்.

ரொம்ப நாளைக்கு பிறகுதான் அது “வாழ வந்தாள்” என்று தெரிந்தது. (மேலுலகத்திலிருந்து ஒரு பெண் தெய்வம் இந்த உலகத்துக்கு வந்து, இந்த வீட்டில் வாழ வந்திருக்கிறாள்.)

பிறகு நடராஜனுக்குக் கல்யாணம் நடந்தது.

அவரும் வந்து தனது வீட்டின் கதவை தட்டும்போது தனது சன்னமான குரலில் “சன்னவுட்டீ” என்றே கூப்பிட்டு கதவைத் தட்டினார்.

ஒருநாள் தனித்திருக்கும்போது அது என்னய்யா சன்னவுட்டீ? என்று கேட்டேன். அதே மெல்லிய சிரிப்பு, சிவந்த கீழ் உதட்டை மேல் பற்களால் நீவிட்டுக்கொண்டு, “அது சன்னவுட்டியில்லெ சின்னக்குட்டி” என்றார்!

அடப்பாவி மனுசங்களா என்று சொல்லிச் சிரித்தேன். கணவன் மனைவி தனித்திருக்கும்போது, தாளமுடியாத பிரியத்தினால் இழுத்துப்பிடித்து வைத்து “ஏஞ் சின்னக்குட்டி, செல்லக்குட்டி. கழுதைக்குட்டீ” என்று கொஞ்சுகிற விலையில்லா சொற்களை, ரோட்டின் மீதும் தெருவின் தலைவாசலிலும் கதவைத் தட்டி ஓசை எழுப்பி “சன்னவுட்டீ” என்று எப்படியய்யா சொல்லி அழைக்கிறீங்க!! என்றேன்.

அது எங்க முத்தாத்தா காலத்துல இருந்தே அப்படித்தாம் என்றார்.

1. “லாயல் மில் நடராஜன்: என்றால் அந்த மில்லில் ஒரு எழுத்தர்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
writer ki rawriter-ki-rajanarayananகி ராகி.ராஜ நாராயணன்
Comments (0)
Add Comment