விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நா.புகழேந்தி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 5-ம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழேந்தி, சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார்.
புகழேந்தியின் இறப்பால் காலியான விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை அதிமுகவும் தேமுதிகவும் புறக்கணித்த நிலையில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, பாமக வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.
அதிமுக தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சியின் வாக்குகளை கைப்பற்றும் முயற்சியில் பாமகவும், நாம் தமிழர் கட்சியும் ஈடுபட்டது. அதேநேரத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் வென்றுகாட்ட வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் பலரை பிரச்சாரக் களத்தில் இறக்கியது திமுக.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூலை – 13) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், முதல் வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.
தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார். இதைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னணியில் இருந்தார். ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் திமுக வேட்பாளரின் முன்னணி அதிகமாகிக்கொண்டு இருந்தது.
திமுக வேட்பாளர் முன்னணி பெற்றதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும், தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நிறைவாக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அக்கட்சியினர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1987-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அன்னியூர் சிவா, 1988ல் தபால் நிலையங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றிருக்கிறார்.
அதன்பின்னர் 1989ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராக உயர்ந்துள்ளார். அடுத்தாக கிட்டடத்தட்ட 7 வருடங்கள் கழித்து, 1996 ஆண்டு அன்னியூர் கூட்டுறவு வங்கித் தலைவரானார்.
தொடர்ந்து, 2002ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினராக அன்னியூர் சிவா மாறினார்.
2020ம் ஆண்டு மாநில விவசாய அணி துணை அமைப்பாளராக அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது. தற்போது விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அன்னியூர் சிவா, இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி
விக்கிரவாண்டி தொகுதியுடன் சேர்த்து மேற்குவங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
இதில் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. மேற்கு வங்காளத்தில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில், பத்ரிநாத், மங்களூர் ஆகிய 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் பா.ஜ.கவும், பீகாரில் ரூபாலி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றிபெற்றன.