தாய் தலையங்கம்:
“இன்றைக்கு நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிட்டாலும் கூட இந்த பொறுப்பேற்ற நாளிலேயே நமக்கு வாக்களித்தவர்கள் இடையே நமக்கு எதிரான அதிருப்தி உருவாகி இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்”.
– 1967-ல் திமுக மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தபோது அன்றைய முதல்வராக இருந்த அண்ணா சொன்ன வார்த்தைகள் தான் இவை.
மக்கள் சார்ந்த இந்தவிதமான பார்வையும் அணுகுமுறையும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் எவருக்கும் பொருந்தும்.
மக்களிடம் தனக்கு இருக்கும் ஆதரவு, எப்போது தனக்கு எதிராக மாறும் என்கின்ற சூட்சமத்தைப் பல கட்சிகளும் சரிவர உணர்ந்து கொள்வதில்லை என்பதே உண்மை.
தற்போது நடந்து முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவை பார்க்கும்போது, இப்படித்தான் தோன்றுகிறது.
கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக பலம் பெரும் அளவுக்கு வாக்களித்து ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த அதே வாக்காளப் பெருமக்கள் தற்போது ஏன் அந்த அறுதிப் பெரும்பான்மையை கொடுக்கத் தவறினார்கள்? பாஜகவிற்கு ஏன் இந்த வாக்குச் சரிவு ஏற்பட்டது? இந்த மாற்றத்திற்கான சமூக, பொருளாதார, உளவியல் காரணங்கள் என்ன என்பதை சற்றே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஜிஎஸ்டி வரி அதிகரித்து, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பண மதிப்பிழப்பு இரண்டுமுறை நடந்து, மக்கள் அவதிப்பட நேர்ந்தது. பலர் வேலை இழக்கும் சூழ்நிலையும் உருவானது.
இந்தச் சூழலுக்கிடையே கவனம் திருப்புகிற விதத்தில், மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்பியது. மக்கள் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்கான பல யுக்திகளை மேற்கொண்டது.
ஆனால் அந்த யுக்திகள் யாவும் பலனளிக்கவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவு உணர்த்துகிறது.
வள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டும் தலைவர்கள், அவருடைய மிகப் பிரபலமான “யாகாவாராயினும் நாகாக்க“ என்ற சொல்லை ஏன் மறந்து போனார்கள்?
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜகவின் மூத்தத் தலைவர்கள் இந்தியா முழுக்க நடந்த பல்வேறு பரப்புரைக் கூட்டங்களில் இங்குள்ள சிறுபான்மை மதத்தினரைப் பற்றிப் பேசிய பேச்சுக்களை இதுவரை மற்றக் கட்சிகளின் தலைவர்கள் பேசவில்லை.
அந்த அளவிற்கு தீவிரத் தன்மையுடன், மக்களைப் பிளவுபடுத்துகிற நோக்கத்துடன் அந்தப் பரப்புரை அமைந்திருந்தது.
ஊடகங்களுக்கு தினமும் ருசியான தீனித் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. அந்தத் தீனியை அளித்துக் கொண்டே இருந்தார்கள், மத்தியில் ஆள்கிற தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள்.
ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக நடந்த இந்தப் பரப்புரையின் தீவிரத்தை, தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அது வெறுமனே அந்த இயக்கங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவதோடு, தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டது.
ஆனால், யாரிடம் அந்தத் தீவிரமான பரப்புரை செய்யப்பட்டதோ அந்த மக்கள், அதை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு கேட்காத அந்தப் பரப்புரையின் மையக் கருத்துக்கள் பொதுமக்களுக்கு கேட்டிருக்கின்றன.
வாக்காளர்கள், தங்கள் காதுகளை மூடிக்கொள்ளவில்லை. அவர்கள் அதற்கு மௌனமாக தங்கள் வாக்கின்மூலம் தங்களது பதிலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் உணர்த்துகிறது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.
மீண்டும் அறிஞர் அண்ணாவின் உதாரணத்திற்கே வருவோம். “மக்களிடம் செல்லுங்கள், மக்களிடமே கற்றுக் கொள்ளுங்கள்” என்று ஒரு கட்டத்தில் அண்ணா பேசியதன் அர்த்தத்தை இனிமேலாவது ஆளும் பொறுப்பிற்கு வருகிறவர்கள் சற்றேனும் கவனிக்கட்டும். மக்கள் குரலுக்கு செவிசாய்க்கட்டும். அதுதான் உண்மையான ‘மன் கி பாத்’ ஆக இருக்கும்.