மறக்க முடியாத மாபெரும் தலைவர்!

ஆர்.கோபண்ணா

தனது 40-வது வயதில் பாரத நாட்டின் இளைய பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தி, “இந்தியாவை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வேன்” என்று உறுதி பூண்டார்.

பிரதமரான தனது அன்னை படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குள் அவர் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தாயை இழந்த தனயனுக்கு எல்லாரும் ஆறுதல் கூறுகிற நிலை மாறி, தனயனே எல்லாருக்கும் ஆறுதல் கூறிய காட்சியை நாம் பார்த்தோம்.

தனது தாயின் ஈமச்சடங்கின்போது, அவர் நடந்துகொண்ட விதம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையைத் தந்தது.

பிரதமராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே பொதுத்தேர்தலை அறிவித்து, மக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப் பிரதமராக உலகத்தின் முன்னே கம்பீரமாக நின்றார் ராஜிவ் காந்தி.

விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்:

இந்த நாட்டின் வறுமையை விஞ்ஞானத்தாலும் தொழில் நுட்பத்தாலும்தான் விரட்ட முடியும் என்று ராஜிவ் நம்பினார். நாடு எதிர்நோக்கி இருந்த பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டார்.

பஞ்சாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், அசாம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உடன்பாடு கண்டார்.

இந்த உடன்பாட்டைக் காண்பதில் கட்சி கண்ணோட்டமின்றி, நாட்டு நலனையே பெரிதாக மதித்தார். கூர்க்கா பிரச்சினையையும், மிசோ மக்கள் பிரச்சினையையும் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதைத் தடுத்து, அதைக் கீழ்மட்டத்தில் பகிர்ந்து கொடுக்க ‘பஞ்சாயத்து ராஜ்’, ‘நகர்பாலிகா’ சட்டத்தைக் கொண்டுவந்து, ‘மக்களுக்கே அதிகாரம்’ என்ற லட்சியத்தை அடைய முயன்றார்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவு:

இலங்கைத் தமிழரின் 40 ஆண்டுகாலப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு கண்டார். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற மகாகவி பாரதியின் அறைகூவலைச் செயல்படுத்த, சேது சமுத்திர திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியல் நோக்கத்தோடு பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண உடன்பாட்டின் மூலம் முயற்சிகள் செய்தார்.

மாலத்தீவில் ஆட்சியை எதிர்த்து கலகப்போர் நடந்தபோது, அந்த அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க ராணுவத்தை அனுப்பி, போரை அடக்கி அந்நாட்டைக் காப்பாற்றிய பெருமை ராஜிவ் காந்திக்கு உண்டு.

அந்நிய நாடுகளானாலும், அண்டை நாடுகளானாலும் சுமூகமான உறவைப் பேண ‘சார்க்’ என்ற அமைப்பை உருவாக்கப் பெரும் பங்காற்றினார்.

1988-ல் ராஜிவின் சீன விஜயம், அந்நாட்டுடன் நமது உறவுகளைப் புதுப்பிக்கப் பெரிதும் உதவியது. நமீபியா விடுதலை பெற உலக அரங்கில் குரல் கொடுத்து, அந்த நாட்டு மக்களுக்கு விடுதலையும் பெற்றுத் தந்தார்.

சர்வதேச அரங்கில் வடக்கு தெற்கு (North – South) பிரச்சினையாக இருந்தாலும், தெற்கு – தெற்குக் கூட்டுறவாக (South – South Co-operation) இருந்தாலும், ஐ.நா. சம்பந்தப்பட்ட விவகாரமாக இருந்தாலும், அணிசேரா நாடுகளின் பிரச்சினையாக இருந்தாலும், காமன்வெல்த் விவகாரமாக இருந்தாலும் இவற்றில் ராஜிவ் காந்தியின் பங்கு வியக்கும் வகையில் இருந்தது.

ராஜிவ் தனது இளம் வயதிலேயே அணிசேரா இயக்கத்தின் தலைவராகவும், காமன்வெல்த் நாடுகளின் உந்துசக்தியாகவும் விளங்கியவர்.

ஐந்து கண்டங்களைச் சேர்ந்த ஆறு நாடுகளின் துணையுடன் அவர் மேற்கொண்ட ஆயுதக் குறைப்பு முயற்சி, அனைவராலும் பாராட்டப் பெற்றது.

தமிழ்நாட்டு மக்களோடு ராஜிவ் காந்தி கொண்டிருந்த நெருக்கமும் அன்பும் அளவற்றது. தமிழ் மண்ணில் கிராமம் கிராமமாகப் பலமுறை சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்தித்து அன்பைப் பொழிந்தார். மக்களின் பாச வெள்ளத்தில் திளைத்தார்.

உலக சமாதானத்தின் தூதுவராகவும், இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராகவும் விளங்கிய ராஜிவ் காந்தி, 1991-ல் தமிழ் மண்ணில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட நாள்தான் மே 21.

தாமரைப் பூபோல மலர்ந்த முகத்துடன் எந்நேரமும் சிரித்தவாறு எந்தத் தமிழ் மக்களை நேசித்தாரோ அதே இனத்தைச்சேர்ந்த அந்நியர்கள் இந்தியாவின் பகைவர்கள் தமிழகத்தில் ஊடுருவி ராஜிவ் காந்தியின் இளகிய மனதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ராமானுஜர் பிறந்த புனித மண்ணில் படுகொலை செய்தார்கள்.

அந்த சமயத்தில் பிரதமராகவோ, அமைச்சராகவோ இல்லாதபோதும், ராஜிவ் காந்தியின் இறுதி ஊர்வலத்தில் 63 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டது, ராஜிவ் தனக்கென உலக அரங்கில் ஏற்படுத்திச் சென்றிருந்த செல்வாக்கையும் மதிப்பையும் காட்டுவதாக இருந்தது.

இத்தகைய அரசியல் படுகொலைகளைச் செய்கிற தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து உலக நாடுகளெல்லாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

எந்த தீவிரவாதத்துக்கு ராஜிவ் உயிரிழந்தாரோ, அந்த தீவிரவாதத்தை முறியடிக்க ஓரணியில் திரண்டு, சூளுரை ஏற்க வேண்டிய நாளே மே 21.

– கட்டுரையாளர்: ஆர்.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு

நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்

Comments (0)
Add Comment