ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசர்!

பௌத்த மரபின் வேர்களை, சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் மே-20.

பண்டிதர் அயோத்திதாசர் அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு முன்னோடியாக இருந்து சமூக மாற்றுச் சிந்தனைகளை – முற்போக்கு கருத்துக்களை முன்வைத்தவர்.

அவர் நெடுங்காலமாக வரலாற்றில் மறக்கப்பட்டவராக அல்லது மறைக்கபட்டவராக ஆக்கப்பட்டிருக்கிறார். எனினும், வரலாற்றால் முற்றிலும் புறந்தள்ள இயலாதவராய் உயர்ந்து நிற்கிறார்.

இந்து கலாச்சாரம் என்று கருதப்படும் யாவும் பவுத்த கலாச்சாரத்தின் திரிபுநிலைகளே என்கிறார் அயோத்தி தாசர்.

தமிழ்ப் பௌத்தம் என்கிற புதிய கருத்தாக்கத்தையும் அவரே முன்வைத்திருக்கிறார்.

மிகச்சிறந்த பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய அவர், தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் ஆதிபௌத்தத்தை மீளுருவாக்கம் செய்த களப்பணியாளராகவும் விளங்கியிருக்கிறார்.

சாக்கிய சங்கம் கண்டு அதனை வெற்றிகரமாக வழிநடத்தியவர். அதன்மூலம் ஆதிபௌத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

இலங்கை சென்று பௌத்தம் தழுவிய பண்டிதர், இந்திய மண்ணில் பௌத்தத்தின் வேர்களை ஆராயத் துவங்கினார். அந்த ஆராய்ச்சியின் முடிவு, நாகரீகமற்றவர்கள், கீழானவர்கள் என்றெல்லாம் முத்திரைக் குத்தப்பட்ட சேரி மக்களின் வாழ்க்கையில் வந்து நின்றது.

அதுநாள் வரை உதிரி மக்காளக கருதப்பட்டுவந்த சேரி மக்களின் வரலாறு இந்திய மண்ணின் தனித்துவமான பௌத்ததில் தொடங்குவதை அவர் கண்டடைந்து மீட்டெடுத்தார். தமது ஆழ்ந்த தேடல் ஞானத்தால் அவர் வரலாறற்ற மக்களாய் கருத்தப்பட்டவர்களுக்கு பூர்வ வரலாற்று மேடையமைத்தார்.

பண்டிதரின் வருகை இந்திய பௌத்த மீட்டுருவாக்க வரலாற்றின் புதிய அத்தியாங்களை உருவாக்கியது; அவரின் சிந்தனையாலும் செயற்பாட்டாலும் பௌத்தம் மறுஉயிர் பெற்றது.

பண்டிதரை வரலாறு உருவாக்கியது; வரலாற்றை பண்டிதர் மீளப்பெற்றார். அவர் பெற்ற ஞானத்தின் வழியே ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான புதிய வெளிச்சம் பிறந்தது.

வேஷ பிராமணியத்தின் கண்களைக் கூச வைத்த அப்பேரொளி, அதுவரை இருண்டிருந்த இந்திய அறத்தினை மிளிரச் செய்தது.

பண்டிதரின் பணிகள் பண்டிதரோடு நிற்கவில்லை; இன்றும் பண்டிதரின் பேரொளி இருளைத் தேடித் தேடி விழுங்கிக் கொண்டிருக்கிறது.

இருள் அகற்றி விடிவைக் கொடுக்கும் வல்லமைக் கொண்ட அப்பேரொளியில் இச்சமூகம் விடுதலையைக் காணும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

#பண்டிதர்_பேரொளி #பண்டிதர்_அயோத்திதாசர் #ayothidasa_pandithar #Pandithar

Comments (0)
Add Comment