மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 7-வது மற்றும் இறுதிக் கட்டமாக அடுத்த மாதம் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாரணாசித் தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்துக்கள் புனித தினமாக கருதும் கங்கா சப்தமி தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை). வேட்புமனுத் தாக்கல் செய்ய பிரதமர் மோடி தீர்மானித்தார்.
12 முதலமைச்சர்கள்
மனு செய்வதற்காக வாரணாசி வந்த மோடி, கங்கைக் கரையில் உள்ள தசாஅஸ்வமேத் படித்துறையில் புனித நீராடி, சிறப்புப் பூஜைகள் செய்தார்.
பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார். அங்குள்ள கால பைரவர் கோயிலிலும், ஆரத்தி எடுத்து சாமி கும்பிட்டார்.
இதனை தொடர்ந்து 6 கிலோமீட்டர் தூரம் வாகனப்பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்றார்.
பிரதமர் மோடிக்கு வழிநெடுக மக்கள் மலர்களைத் தூவி வரவேற்பு கொடுத்தனர். காவி உடை அணிந்த பெண்கள், மோடியின் வாகனத்துக்கு முன் அணிவகுத்து கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.
இந்தப் பேரணியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நட்டா, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் நடந்து சென்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜலிங்கத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், மோடி.
சொந்த வீடு இல்லை
வேட்புமனுவுடன் பிரதமர் மோடி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘தனக்கு 3 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். சொந்தமாக வீடு, நிலம், கார் கிடையாது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
’நான் கங்கையின் தத்துப்பிள்ளை’
மனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ’’கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான்- எனது தாய் மறைவுக்குப் பின்னர் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
’கங்கை நதி, தாயைப்போல் அனைவரையும் காக்கிறது- 140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன்-இது கடவுள் உத்தரவு- காசி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை எனது முயற்சியாக கொண்டுள்ளேன்- பகவான் காசி விஸ்வநாதரின் ஆசியுடன், அவருடைய காசிக்கு சேவை செய்ய நான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பேன்’’ என்றும் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மோடியின் கடந்தத் தேர்தல்கள்
2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.
வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
2019-ம் ஆண்டு வாரணாசியில் மீண்டும் போட்டியிட்ட மோடி, 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.
இப்போது வாரணாசியில் மூன்றாம் முறையாக மோடி போட்டியிடுகிறார்.
– மு. மாடக்கண்ணு.
#pm_modi_nominate_at_varanasi #மோடி #வாரணாசி #வதோதரா_தொகுதி #pm_modi #பிரதமர்_மோடி #vathodara #modi #bjp #பாஜக# varanasi