நூல் அறிமுகம்:
சங்க இலக்கியம் தொட்டு இன்றைய சரித்திரம் வரை காதல் போற்றப்பட்டு எழுதிப்பட்டு தான் வருகிறது. காதல் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று, தேவையில்லாமல் புனிதப்படுத்திய கருத்து என்று ஒரு சாராரும், ஆஹா காதலா! அதை உணராத உயிரும் உண்டா என்போரும் இருக்கிறார்கள். காதலென்ற ஒற்றைச் சொல்லுக்கு இதுதான் காதல் என்ற இலக்கணமும் இல்லை. ஆனாலும் தெவிட்ட தெவிட்ட உலகம் இந்த காதலைக் கொண்டாடிக் கொண்டே தான் இருக்கிறது..
எங்களுக்கெல்லாம் காதல் என்றால் அந்த வயதில் ஏற்படும் பாலினை ஈர்ப்பு, அது தவறு என்றுதான் சொல்லி வளர்க்கப்பட்டது.. தவறு என்று சொல்லிவிட்டால் தட்டாத பிள்ளைகளாகத்தான் வளர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்தக் கட்டுரைகளை எல்லாம் படிக்கும்போது ஆஹா இந்தக் காதல் உணர்விற்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா என்று வியக்கத்தான் தோன்றுகிறது.
எழுத்தாளர் முகிலின் எழுத்துநடை எனக்கு எப்போதுமே பிடிக்கும். சரளமான எழுத்து. நிறைய சரித்திரம் சம்பந்தமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். உணவிற்கும், பயணத்திற்கும் சரித்திரம் இருக்கும்போது காதலுக்கும் இருக்கும் தானே! காதல் என்பதை புனைவில்லாமல் எழுத முடியுமா? சரி அதை வெறும் தகவல்களாக கொடுத்தால் சுவாரஸ்யமும் இருக்காது. அதுவொரு செய்தியாகத்தான் இருக்கும். ஆனால் முகில் இயற்றிய இந்த புத்தகம் உண்மைக் காதல் செய்திகளைச் சொன்னாலும் அதை ஒரு கதைப்போல சொல்லியிருப்பதில் தான் சுவாரஸ்யம்! கூடவே அகப்பொருள் பாடும் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு இப்படி பல்வேறு சங்க இலக்கிய பாடல்களும் அதற்கான விளக்கங்களும்!
காதல் என்பது ஜாதி, மதம், கலாச்சாரம், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி முன்னேறாமல் சிக்கிக்கொண்டு தவிக்கும். அல்லது பாதியிலேயே மனதுக்குள் புதைத்து சில காலம் அழுது தீர்க்கும்.
நூலின் ஆசிரியர் காதல் சரித்திரம் என்ற இந்த புத்தகத்தின் முதல் கட்டுரையில் மகாநந்தியா – சார்லோட் இருவரின் காதலை சொல்கிறார். சுமார் 7000 மைல்கள் டெல்லியிலிருந்து ஸ்வீடன் வரை சைக்கிளில் பயணித்து வெற்றிபெற்ற காதல் இது. காரணம் மேற்சொன்ன அத்தனைக் காரணங்களையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் தாண்டி இந்தக் காதல் வெற்றி பெற ஒரே காரணம் அவர்களுக்குள் இருந்த விடாப்பிடியான காதல் உணர்வு. சுவாரஸ்யமான அனுபவங்களையும் அந்தக் காதலின் வெற்றியையும், 45 வருட வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகளையும் பற்றி மகிழ்வான கட்டுரையை எழுதியிருக்கிறார்.
“கதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை கானங் காரென கூறினும் யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.” – குறுந்தொகை.
போரிஸ் – அன்னா கோஸ்லோவ். கல்யாணம் ஆகிவிட்டாலும் எல்லோருடைய வாழ்க்கையும் இணைந்தே இருப்பதில்லையே. கடமையாற்றச் சென்ற தலைவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து ஒருகட்டத்தில் அரசியல் நெருக்கடியால் இடம்பெயர நேர்கிறது. அப்போது அவளின் தாய் இவளின் காதலை தடை செய்கிறார். கல்யாணமானலும் காதலுக்கு கெட்ட காலம் என்பது வயதில் இருவரும் திரும்ப இணையும் வரை எதிர்கொண்ட தருணங்களையும், நெகிழ்வான இணைதலையும் நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
குடும்பத்தினர் தடையாக இல்லை என்றாலும் அவர்கள் வாழும் சமூகம் ஏற்றுக்கொள்ளாத காதல் திருமணம். நிறவெறியை பிரதானமாக கொண்ட வர்ஜீனியா சமூகம் ஏற்றுக்கொள்ளாத காதலையும், இனவெறி வரலாற்றையும் அதை எதிர்த்துப் போராடி ஜெயித்த காதலர்கள் பற்றியும் சொல்கிறது ஒரு கட்டுரை.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில் சின்னாபின்னமாகி போன எத்தனையோ குடும்பங்களின் கதறல்கள் இன்னும் அவர்களின், அவர்கள் தலைமுறைகளின் ஞாபக இடுக்குகளில் இருந்து கொண்டுதான் இருக்கும். பாகிஸ்தானிலிருந்து தப்பித்து இந்தியாவிற்கு வந்த காதலி அவரின் காதலனின் கைப்பிடித்த நிகழ்வு எவ்வளவு துயரங்களை தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கிறது. நெகிழ்வான கட்டுரை பகவான் சிங் மாய்னி – ப்ரீதம் கௌர் இணைப் பற்றியது.
இந்தியாவில் காதலின் சின்னமாக வரலாற்றில் இன்னமும் உயர்ந்து நிற்கிறது தாஜ்மஹால். ஆனால் அதே ஆக்ராவில் சிவப்பு தாஜ்மஹால் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது அதுவும் இன்னமும் நிலைத்திருக்கிறது. ஜான் வில்லியம் ஹெஸ்சிங் – அன்னே ஹெஸ்ஸிங் குறித்த கட்டுரை அவரது காதலை மட்டும் சொல்லவில்லை வரலாற்றையும் சேர்த்து சொல்கிறது.
ஐந்திணை ஐம்பது என்ற இலக்கியத்தில் இருந்து “சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் – என தொடங்கும் பாடலும் அதன் விளக்கமும் என்னை மிகவும் கவர்ந்தது.. கணவன் சாப்பிட்டுவிட்டு மீதி இருந்தால்தான் மனைவிக்கு என்ற இன்றைய சூழலில், இதுதான் உண்மையான காதல் என்ற புனிதப்படுத்துதலில், இன்று உண்மை காதல் கசந்து போய்விட்டிருக்கிறது.
சத்யஜித் ரே – பிஜோயா. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அவள் காதலியாகவோ மனைவியாகவோ. சத்யஜித்ரேவிற்கு இரண்டும் ஒன்றாக இருந்தது கூடுதல் பலமோ. அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னால் பிஜோயா எவ்வாறு பங்காற்றினார் என்பதை படிக்க படிக்க நல்ல அனுபவமாக இருந்தது.
ஆண் – பெண் என்ற எதிர்பாலினத்தவர்களுக்கு மட்டுமே காதல் சொந்தமில்லை என்று சொல்லி ரூத் எல்லிஸ் – செசெலின் பேப் பிராங்க்ளின் என்ற தன்பாலின காதலர்கள் பற்றிய கட்டுரையும் இருக்கிறது.. சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தங்களைப் போன்ற தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக நிறைய பங்களித்திருக்கிறார்கள் இருவரும்.
இறுதியாக மனிதனுக்கு மட்டும் தானா காதல்? இல்லவே இல்லை மிருகங்களுக்கும் தான் என்பதைச் சொல்லும் பெங்குயின் காதலையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
பல்வேறு சோதனைகளை கடந்து தங்களின் காதலை நிலைநாட்டி இறுதிவரையிலும் இணைந்து வாழ்ந்த காதலர்களை எளிமையான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர். அவர்களை தொடர்ந்து போராட்டங்களை செய்யத் தூண்டியது அவர்களிடமிருந்த விடாப்பிடியான காதல் மட்டும் தான். இந்த நூல் நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
*****
நூல்: காதல் சரித்திரம்
ஆசிரியர்: முகில்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்
பக்கங்கள்: 208
விலை : 288
#காதல்_சரித்திரம்_நூல் #முகில் #சிக்ஸ்த்_சென்ஸ்_பப்ளிகேஷன் #sixth_sense_publication #kathal_sarithiram_book review #kathal_sarithiram_book #mugil