எழுத்துக்களில் பொறிபறக்கும் வீரமும், சாகசமும், துணிவும் அதை எழுதும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரிடம் துளியும் இருக்காது. ஆனாலும், இதில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கவிஞர் லார்ட் பைரன்.
இத்தாலி நாட்டின் மிதக்கும் நகரமான வெனிஸ் நகரத்தில், லிடோ தீவில் இருந்து குறிப்பிட்ட ஓர் இலக்கு வரை, ஏழரை கிலோ மீட்டர் தொலைவு வரை நிற்காமல் நீந்திக் கடந்தவர் பைரன்.
“என்னுடன் நீந்திய இரண்டு நண்பர்கள் களைப்பு காரணமாகவும், குளிர் காரணமாகவும் பாதியில் நீச்சலைக் கைவிட்டுவிட்டனர். நான்கு மணி, 20 நிமிடநேரம் நிற்காமல், வழியில் எந்தப் படகையும் தொடாமல் நான் நீந்தி கரை சேர்ந்தேன்” என்று 1821-ம் ஆண்டு தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருக்கிறார் பைரன்.
பாஸ்பரஸ் நீரிணையையும் கவிஞர் பைரன் ஒருமுறை நீந்திக் கடந்தார் என்பார்கள். அந்த வரிசையில் இன்னொருவர் ரஷிய எழுத்தாளர் அலெக்சாந்தர் புஷ்கின்.
‘காப்டன் மகள்’, ‘கைத்துப்பாக்கி வேட்டு’ என்று கதைகள், நாவல்களில் மட்டும் துப்பாக்கிகளை வெடிக்க வைத்தவர் இல்லை புஷ்கின்.
தனது காதல் மனைவி நத்தாலியாவுக்கு தனது சகலை கொக்கி போடுவதை அறிந்து அவனை துப்பாக்கிச் சண்டைக்கு (Duel) அழைத்து, அதனால் குண்டடிபட்டு, 46 மணிநேரம் மரணத்துடன் மல்லுக்கட்டியபின், ‘என் வாழ்வு முடிந்தது’ என்றுகூறி இறந்து போனவர் எழுத்தாளர் புஷ்கின். அவர் நிஜத்திலும் ஒரு ஹீரோ.
‘கிழவனும் கடலும்’ நாவலை எழுதிய எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
ஹெமிங்வேயின் நாவல்களில் ஹீரோக்கள் பலர் வருவார்கள். ஆனால், இயல்பில் ஹெமிங்வேயே ஒரு பெரிய ஹீரோதான்.
முதல் உலகப்போரின்போது குறைவான வயது காரணமாக ராணுவத்தில் சேர முடியாமல் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் அவசர ஊர்தி ஓட்டுநராக இருந்தவர் ஹெமிங்வே.
அப்படி இருந்தும் முதல் உலகப்போரில் ஆஸ்திரியா நாட்டு ராணுவத்தின் மார்ட்டர் பீரங்கித் தாக்குதலில் காயமடைந்தவர் ஹெமிங்வே.
ஆப்பிரிக்காவின் பெல்ஜியம் காங்கோ, ருவாண்டா நாடுகளில் ஹெமிங்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒருமுறை உகாண்டா நாட்டின் மீது விமானத்தில் பறந்து, விமானம் தந்திக் கம்பத்தில் மோத, முதலைகள் நிறைந்த நைல் ஆற்றங்கரையில் தரையிறங்கியவர் ஹெமிங்வே.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா ஏறு தழுவுதல் தொடர்பாக எழுதிய ‘வாடி வாசல்’ நாவலைப் போல, ஸ்பெயின் நாட்டு காளைச்சண்டைகளைப் பற்றி ஐந்தாண்டு காலம் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்தவர் எழுத்தாளர் ஹெமிங்வே.
அவரது, ‘டெத் இன் த ஆப்டர்நூன்’ நாவல் முழுக்க ஸ்பானிய காளைச் சண்டைகளைக் குறிக்கும் நாவல்.
காளைச் சண்டைகளில் ஹெமிங்வேக்கு கட்டற்ற ஆர்வம் இருந்தது. அது மட்டுமல்ல, கிழவனும் கடலும் நாவலில் வருவது போல, பிலார் என்ற அவரது 38 அடி நீள படகில் ஏறி, மிகப்பெரிய மீன் வேட்டைகளை நடத்தியவர் ஹெமிங்வே.
அந்த வகையில் நமது புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனும் கூட எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத ஒருவிதமான ஏர்னெஸ்ட் ஹெமிங்வேதான்.
ஆற்றில் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கிய மாடு ஒன்றைக் காப்பாற்றப் போக, அந்தமாடு இறுதியில் அவரது முதுகில் கால்பதித்து மீள, மாட்டின் வாலைப் பிடித்தபடி கரையேறியவர் பாவேந்தர் பாரதிதாசன்.
மாடசாமி என்ற விடுதலைப் போராட்ட வீரரை, வியட்நாம் நாட்டின் சைகோன் நகருக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்க, மாடசாமி மற்றும் இதர இரண்டு நண்பர்களுடன் கட்டுமரத்தில் ஏறி புறப்பட்டவர் பாரதிதாசன்.
நடுக்கடலில் அந்த குறிப்பிட்ட கப்பலை வழிமறித்து அதில் மாடசாமியை ஏற்றி தப்பிக்க வைப்பது அவரது திட்டம்.
கெடுவாய்ப்பாக, உளவுப்பிரிவினர் இதை அறிந்து நீராவிப் படகு ஒன்றில் வர, அவர்களிடம் இருந்து தப்புவதற்காக கட்டுமரத்தை ஆழ்கடல் நோக்கிச் செலுத்தச் செய்து, ஒன்றரை நாள்கள் ஆழ்கடலில் மிதந்த பின்னர், அந்த குறிப்பிட்ட கப்பலைக் கண்டு வழிமறித்து மாடசாமியை அதில் ஏற்றிவிட்டு இரவில் கரை திரும்பியவர் பாரதிதாசன்.
இதுபோல, ஒரு செட்டியார் கடை முன், முரட்டுக்கும்பல் ஒன்றுடன் அவர் கைகலப்பில் ஈடுபட்ட கதை தனி.
எழுத்திலும், இயல்பிலும் இறுதிவரை கம்பீரமாகவே இருந்து, வணங்காமுடியாகவே வாழ்ந்து மறைந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.
– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு