மும்முனை போட்டி நிலவும் ஒடிசா மாநிலம்!

வெல்லப்போவது யார்?

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாநிலத்தில் 21 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வரும் 13-ம் தேதி 4 தொகுதிகளுக்கும், 20-ம் தேதி 5 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 6 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி 6 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியே ஒடிசாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் பிஜு ஜனதா தளம் உள்ளது. இப்போது ஆட்சியில் இருப்பதும் அந்தக் கட்சிதான்.

பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்து வருகிறார்.

கடந்த தேர்தல் முடிவுகள்

ஒடிசாவில் 40 க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. எனினும், பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளே செல்வாக்கோடு உள்ளன.

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பிஜு ஜனதா தளம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, ஒரு தொகுதியில் வென்றது. காங்கிரஸ் கட்சி, ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 12 தொகுதிகளை பிஜு ஜனதா தளம் அள்ளியது. பா.ஜ.க 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.

யாருக்கு வெற்றி?

இந்தத் தேர்தலில், பிஜு ஜனதா தளமும், பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது.

ஒடிசாவில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஆளும் பிஜு ஜனதா தளமே அதிக இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது..

மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் இந்தக் கட்சி 15 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

பாஜக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி ஒரு தொகுதியிலும் ஜெயிக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரச்சாரக் களத்தில் தமிழர்

ஒடிசாவின் தேர்தல் பிரச்சாரம் தமிழர் ஒருவரை மையமாக வைத்து சுழல்கிறது. அவர் பெயர் வி.கே. பாண்டியன்.

ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலராக 12 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதால் அண்மையில், அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார், பாண்டியன்.

அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட ‘5 T’ எனும் அமைப்பின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியிலும், நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் உள்ள அவர், மாநிலம் முழுக்க சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒடிசா மாநில தேர்தல் முடிவுகளில், வி.கே.பாண்டியனின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என்கிறார்கள்,அரசியல் பார்வையாளர்கள்..

– மு.மாடக்கண்ணு

navin_pat_nayakodisha_lok_sabha_electionv_k_pandiyanகாங்கிரஸ்நவீன்_பட்நாயக்வி.கே. பாண்டியன்
Comments (0)
Add Comment