இந்தியாவில் மிக மிக முக்கியமான தொகுதி ரேபரேலி. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 முறை வென்றுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ்காந்தி 1952 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். நாட்டின் விடுதலைக்கு பிறகு, நடந்த முதல் தேர்தல் இது. இந்திராவுக்கும், இது சொந்த தொகுதி.
1971-ம் ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், 77-ம் ஆண்டு, 55 ஆயிரம் வாக்குகள் வித்திசாயத்தில், ஜனதா கட்சியின் ராஜ் நாராயணனிடம் தோற்றுப்போனார். ரேபரேலியில் சோனியா காந்தி மட்டும் தோற்றதே இல்லை.
2004-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சோனியா தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளார்.
இப்போது அந்தத் தொகுதியில், ராகுல் போட்டியிடுகிறார். ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் இணைந்து உ.பி. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கின்றன.
இங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
சோனியா காந்தி, தனது உடல்நிலை காரணமாக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
அவர் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அருகில் உள்ள அமேதி தொகுதி இதுவரை 16 மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 13 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
2004-ம் ஆண்டு முதல் இங்கிருந்து ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், சுமார் 55 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைந்தார்.
அதேசமயம், 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல், அங்கு வென்றார். தற்போது மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார்.
அமேதி, ரேபரேலியில் மீண்டும் நேரு குடும்பம் போட்டியிடுமா என்ற கேள்வி நீடித்து வந்தது. அமேதியில் ராகுல், ரேபரேலியில் அவரது தங்கை பிரியங்கா போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது.
பல மாதங்களாக நீடித்த இந்த ‘சஸ்பென்ஸ்’ மற்றும் கேள்விகளுக்கு நேற்று விடை கிடைத்துள்ளது.
ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அறிவித்தது.
டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அமேதி வந்தனர். அமேதியில் கிஷோரி லால் சர்மா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ரேபரேலியில் ராகுல் மனு
முன்னதாக, அமேதியில் சிறிய அளவில் ஊர்வலம் நடத்தப்பட்டது. பிறகு பிரியங்கா அங்கிருந்து புறப்பட்டு ரேபரேலி சென்றார்.
ரேபரேலியில் ஹாத்தி பூங்காவில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் ஊர்வலமாகப் புறப்பட்டார்.
ராகுல் காந்தி மதிய நேரத்தில் ரேபரேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் இருந்தனர்.
தனக்கு 20 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக ராகுல், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராகுலை எதிர்த்து பாஜக சார்பில், தினேஷ் பிரதாப் சிங் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சோனியாவின் வெற்றிகள்
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சோனியா, ரேபரேலியில் 1 லட்சத்து 67 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்த்தில் ஜெயித்தார்.
2014-ம் ஆண்டு தேர்தலில் 3 லட்சத்து 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ராகுலுக்கு, ரேபரேலி பாதுகாப்பான தொகுதியாக பார்க்கப்படுகிறது.
– மு.மாடக்கண்ணு