சனாதனம் – பொய்யும் மெய்யும்!

நூல் வாசிப்பு:

வருணாசிரமம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர்.

தன்மதிப்பாளர்கள் அதனை எதிர்த்து வந்தனர். சில திங்கள் முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது.

இதில் பேசிய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சர் உதயநிதி, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று குறிப்பிடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். அப்பொழுது சில தொற்று நோய்களைக் குறிப்பிட்டு அவை போல் ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம் என்றார்.

இதற்கு எதிர்ப்புக் குரல்களும் ஆதரவுக் குரல்களுமாகப் பெருகினன. ஒன்றிய ஆளுங்கட்சியின் ஆதரவால் சனாதனம் என்பது இதுதான் எனக் கூறி அதில் இல்லாத நல்ல கருத்துகளையெல்லாம் சனாதனம் என்றனர்.

இதனைக் கேட்ட நடுநிலையாளர்கள் இதுதான் சனாதனம் என்றால் ஏன் அதனை எதிர்க்க வேண்டும் என எண்ணும் அளவிற்குத் தவறான விளக்கங்களைத் தந்தனர்.

அதே நேரம் எதிர்ப்பாளர்களும் எதிர்ப்புக் குரலை எழுப்பி வந்தனர். ஆனால் ஆதரவுக் குரல்களை ஒப்பிடும் பொழுது எதிர்ப்புக் குரல் ஒலி குறைந்தே தோன்றுகிறது.

இந்நூலில் சனாதம் என்றால் என்ன? உண்மையில் அதன் சிறப்புகளாகக் கூறப்படுவன எல்லாம் சிறப்புகள்தாமா? அல்லது பொய்யாகப் புகழுரைகளைத் தெரிவிக்கின்றனரா? சனாதன எதிர்ப்பாளர்கள் உண்மைகளைத்தான் சொல்லுகின்றனரா? மனித நேயம் தழைக்க நாம் சனாதனத்தை ஆதரிக்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா? எனத் தெளிவாக வினா விடை முறையில் அளித்துள்ளார்;

வினாக்கள் எல்லாம் சனாதனத்திற்கு ஆதரவாகத் தெரிவித்தவர்கள் முழங்கிய வரிகள்.

அதனை ஆராய்ந்து தெரிவிப்பதே விடைகள். எனவே, ‘சனாதனம் – பொய்யும் மெய்யும்’ எனச் சரியான தலைப்பைத் தந்துள்ளார் நூலாசிரியர் திரு. இலக்குவனார் திருவள்ளுவன்.

திரு இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் நலம் சார்ந்த கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து படைத்து வருகிறார். எழுத்திலே துணிவும் நேர்மையும் கொண்டு தமிழ் எதிர்ப்புகளுக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.

பிறமொழிக் கலப்பின்றிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியும் பேசியும் வருகிறார். 2500க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். 70 நூல்கள் எழுதியுள்ளார்.

‘அகரமுதல’ என்னும் மின்னிதழின் ஆசிரியராக உள்ளார். தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவராகவும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணப்பாளராகவும் உள்ளார்.

சனாதனத்திற்கான விளக்கங்களை ஆரிய நூல்களில் இருந்தும் முன்னோர் கருத்துகளிலிருந்தும் திரட்டித் தம் கருத்துகளையும் அளித்து இந்நூலைச் சிறப்பாக அளித்துள்ளார் திரு இலக்குவனார் திருவள்ளுவன்.

சனாதன எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி ஆதரவாளர்களும் படிக்க வேண்டியது இந்நூல். வாசக நேயர்கள் ஆதரவு தருவதுடன் சனாதன எதிர்ப்பாளர்கள் இந்நூலை வாங்கிப் பலருக்கும் பரப்ப வேண்டுகிறோம்.

******

சனாதனம் – பொய்யும் மெய்யும்!

ஆசிரியர்: இலக்குவனார் திருவள்ளுவன்

மலர்க்கொடி வெளியீட்டகம்

பக்கங்கள் – 240

விலை – ரூ. 300/-

தொடர்புக்கு – 98844 81652

அகரமுதலஅமைச்சர் உதயநிதிஇலக்குவனார் திருவள்ளுவன்சனாதனம்தமிழ்க் காப்புக் கழகம்வருணாசிரமம்
Comments (0)
Add Comment