தேர்தல்களில் ஒரு கட்சி தோற்பதால், அதன் எதிர் காலத்தை தீர்மானித்து விட முடியாது. ஒரு பிராந்திய கட்சியையும், ஒரு தேசிய கட்சியையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். பிராந்திய கட்சி, நம் மாநிலத்தில் உள்ள, திமுக.
2014-ம் ஆண்டு, கருணாநிதி, திமுக தலைவராக இருந்தபோது நடந்த மக்களவைத் தேர்தலில், அந்தக் கட்சி ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக, ஒரே ஒரு இடத்தைத்தான் எதிரணிக்கு கொடுத்தது.
மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வாகை சூடியது. தேசிய அளவில், பாஜகவை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.
1984-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் உருவான பாஜக, அப்போது நடந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.
கட்சித்தலைவர் வாஜ்பாயே, அந்தத் தேர்தலில் தோற்றுப்போனார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பாஜக விசுவரூபம் எடுத்து, இன்றைக்கு மத்திய ஆட்சியைப் பிடித்து, அசைக்க முடியாத இடத்தில் நிற்கிறது.
சரியும் காங்கிரஸ்
மேற்கண்ட உதாரணங்கள், இன்றைய தேதியில், காங்கிரசுக்குப் பொருந்தாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து கொண்டே செல்கிறது.
நாடு விடுதலை அடைந்ததும் , சூட்டோடு சூடாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
அதன் பின்னர், சூடு தணிந்த பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வென்று வந்துள்ளது.
தேசிய அளவில் கம்யூனிஸ்ட், ஜனசங்கம் போன்ற கட்சிகள் வலுப்பெற்ற நிலையிலும், மாநில மட்டங்களில் திமுக போன்ற புதிய இயக்கங்கள், வேரூன்றி, விருட்சமாக வளர்ந்த நேரத்திலும் தேசிய அளவில் காங்கிரஸ் சரிவை சந்தித்ததில்லை.
முதன் முதலாக 1977-ம் ஆண்டு, காங்கிரஸ் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தாலும், அடுத்த 1980-ம் ஆண்டு தேர்தலில் புதிய எழுச்சி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
நேரு, இந்திரா காலத்தில், நாடு முழுவதும், வலுவான தளங்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, ராஜீவ் காந்தி காலத்திலேயே, தனது பரப்புகளை இழக்க தொடங்கி இருந்தது.
அவர் மறைவுக்கு பிறகு, பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தளங்களே இல்லாமல் போனது.
உத்தரபிரதேசம், பீகார், மே.வங்காளம், ஆந்திரா போன்றவை உதாரணங்கள் .
(தமிழகத்தில் 50 ஆண்டுகளாகவே காங்கிரஸ் இல்லை என்பது வேறு விஷயம்)
ராஜீவ் சாதனை
ராஜீவ் காந்தி காலத்தில், காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தாலும், அவர் தலைமையில் 1984-ம் ஆண்டு எதிர்கொண்ட மக்களவைத் தேர்தலில் பெரும் சாதனை படைத்தது.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 517 தொகுதிகளில் போட்டியிட்டு, 414 இடங்களில் வென்றது. இந்திய வரலாற்றில் ஒரு கட்சி பெற்ற அதிக இடங்கள் இதுவே. அந்த சாதனையை இதுவரை எந்தக் கட்சியும் முறியடிக்கவில்லை.
1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, 529 இடங்களில் நின்றது. தனது சரித்திரத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட்டது, இந்த தேர்தலில் தான்.
ஆனால் 140 இடங்களில் மட்டுமே வென்றது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தும், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
சரியான தலைமை இல்லாமை, பாஜகவின் எழுச்சி, பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி போன்ற காரணங்களால், காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்து, போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கையையும் குறைந்து கொண்டே வந்தது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 330 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. காங்கிரஸ், தனது நீண்ட நெடிய வரலாற்றில், குறைந்த எண்ணிக்கையில் நிற்பது இதுவே முதன் முறை. காங்கிரஸ் தொண்டர்களை இந்த செய்தி , நிலைகுலைய வைத்தாலும், இதுவே உண்மை. எனினும் அந்தக் கட்சி, பல மாநிலங்களில் வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பீகாரில் ஆர்ஜேடி, மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டில் திமுக, இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட பலமிக்க அணியில் சேர்ந்துள்ளது, காங்கிரஸ். கேரளாவிலும், காங்கிரஸ் கூட்டணி, வலிமையானதாகவே கருதப்படுகிறது.
இதுவரை காங்கிரஸ் போட்டியிட்ட மற்றும் வென்ற இடங்கள் விவரம்:
ஆண்டு போட்டியிட்டவை வென்றவை
1951 479 364
1957 490 371
1962 488 361
1967 516 283
1971 441 352
1977 492 154
1980 492 353
1984 517 414
1989 510 197
1991 500 244
1996 529 140
1998 477 141
1999 453 114
2004 417 145
2009 440 206
2014 464 44
2019 421 52
பாஜக மீதான அதிருப்தி வலிமையான கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜுன் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.
– பி.எம்.எம்.